Subscribe Us

header ads

தீர்ப்பு தந்த அதிர்ச்சி! ஜெ.வின் அடுத்த ஆபரேஷன் வெற்றி!

எங்கோ உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தில் மழையைப் பொழிய வைப்பதைப் போல ஜெ.வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய புதன்கிழமை ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பில் இருந்தது.
தீர்ப்பு, மதியம் 1:30 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தாலும் 11 மணிக்கே நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் குவிய ஆரம்பித்தனர். தீர்ப்பை வழங்கும் நீதியரசர்கள் மதன்லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அமரும் கோர்ட் எண்.9-க்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்தக் கோர்ட்டுக்குள் அனுமதி சீட்டு இல்லாமல் நுழைய முயன்றவர்களைத் தடுத்து நிறுத்த பாதுகாவலர்கள் கடினமாகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
கோர்ட் ஹாலுக்குள் திரண்டிருந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் கலகலப்பாக பேசிக்கொண்டிருக்க... ஜெ. தரப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் சிறிய புன்னகை கூட இல்லை. சைலன்ட்டில் வைக்கப்பட்டிருந்த அவர்களது அலைபேசியில் ப்ளாஷ்லைட்டில் வந்த நம்பர் களை பார்த்துவிட்டு கோர்ட்டுக்கு வெளியே ஓடி பெரிய பதட்டத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். கலகலப்புக்கும் டென்ஷனுக்கும் காரணம் வரப்போகும் தீர்ப்பு அவர்களுக்கு தெரிந்திருந்ததுதான்.
தனித்தனி முடிவு!
சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பளிக்கும்போது இரண்டு நீதிபதிகளும் தாங்கள் எழுதிய தீர்ப்புகளை முன்கூட்டியே தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள். ஒரு நீதிபதி எழுதிய தீர்ப்பை இரண்டாவது நீதிபதி ஒத்துக்கொள்வாரானால், "நான் உங்களது தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்' என தெரிவிப்பார். அதில் ஒருசில திருத்தங்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என இரண்டாமவர் நினைத்தால் அதைப்பற்றி இருவரும் விவாதித்து முடிவெடுப்பார்கள்.

புதன்கிழமை வழங்கவேண்டிய தீர்ப்பை முழுமையாக எழுதி, சனிக்கிழமை இரவே ஜூனியர் நீதியரசர் பானுமதிக்கு அனுப்பிவைத்தார் சீனியர் நீதியரசரான மதன்லோகூர். இதுவரை சீனியர் நீதிபதி சொல்லும் கருத்தை பெருமளவு மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் பானுமதி, பவானிசிங் நியமனம் தொடர்பாக லோகூர் எழுதிய கருத்துகளுக்கு உடன்பட வில்லை. "எனக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கிறது' என பானுமதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த லோகூர், "நான் எனது தீர்ப்பை தனியாக அறிவிக்கிறேன்' என சுப்ரீம் கோர்ட் பதிவாளருக்கு குறிப்பு அனுப்பிவிட்டார். புதன்கிழமை நீதியரசர் லோகூர் தீர்ப்பளிப்பார் என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.
பொதுவாக இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் சீனியர் நீதியரசர் தீர்ப்பளிப்பார் என பதிவாளர் அறிவித்தால், அது இரு நீதிபதிகள் ஒற்றுமையாக அளிக்கும் தீர்ப்பு என்றுதான் புரிந்து கொள்ளப்படும். அந்த நடைமுறையை மீறி திங்கள்கிழமை இரவு நீதியரசர் பானுமதி தனியாக தீர்ப்பு தரப்போவதாக பதிவாளருக்கு குறிப்பு அனுப்பிவிட்டார்.
செவ்வாய்க்கிழமை காலை இந்த அறிவிப்புகளைப் பார்த்த ஜெ. வழக்கறிஞர்கள் அதிர்ச்சியுடன் செவ்வாய் இரவு போயஸ் கார்டனை தொடர்புகொண்டு விபரத்தைச் சொன்னார்கள். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சதாசிவத்துக்கு, சென்னையில் அன்றைய முதல்வர் ஜெ. தலைமையில் நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட அன்றைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, ஜெ.வை அம்மா, புரட்சித்தலைவி என பாராட்டியதை... நினைத்தபோது, இரண்டு தீர்ப்புகள் வரப்போகிறது என்பதை உணர்ந்தோம்'' என்கிறார் தி.மு.க. வழக்கறிஞர் சரவணன்.

அ.தி.மு.க.வினரின் மனநிலையை புதன்கிழமை சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்கு வந்திருந்த எம்.பி.நவநீதகிருஷ்ணன், மணிசங்கர் ஆகியோர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததிலிருந்தே அறிய முடிந்தது.
தீர்ப்பு விபரம்!
கோர்ட்டில் தீர்ப்பு வழங்கும்போது பேராசிரியர் அன்பழகன் தரப்பில் வாதாடிய சீனியர் வழக்கறிஞர் அந்தி அர்ஜுனாவிற்கு உதவி புரிந்த தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கைகொடுக்க... அந்திஅர்ஜுனா அவரது கன்னத்தில் தட்டிக் கொடுத்தார். "அதற்கு ஒரு காரணம் இருந்தது' என்கிறார் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை மிக அருகில் இருந்து கவனித்து... மிகச்சரியாக பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன். நீதிபதிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை அந்த வழக்கில் ஆஜராகும் சீனியர் வழக்கறிஞர்களே கேட்டு தெரிந்துகொள்ளும் அளவிற்கு வழக்கு விபரங்களை கூர்ந்து கவனித்து வருவதில் திறமை பெற்ற வெங்கடேசன் நம்மிடம், ""சீனியர் நீதிபதியான லோகூர்தான் தீர்ப்பை முதலில் படித்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ.வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட பவானிசிங், சட்டப்படி முறையாக நியமிக்கப்படவில்லை. அதனால் அவரது வாதத்துடன் நடைபெற்ற இந்த அப்பீல் வழக்கு முழுவதும் தவறாக நடைபெறுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 27-ந் தேதி சனிக்கிழமை ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளிக்கிறார். அதற்கடுத்த இரண்டாம் நாளான 29-ந் தேதி திங்கள்கிழமை பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக, தன்னிச்சையாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை நியமிக்கிறது. 30-ஆம் தேதி ஜெ. ஜாமீன் மனுவை தாக்கல் செய்கிறார். அதில் தானாக முன்வந்து ஆஜராகும் பவானிசிங், "எனக்கு எந்த உத்தரவும் வரவில் லை' என்கிறார். அவர் அந்த வழக்கில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத் தில் " ஜெ.வுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது' என எழுதிக் கொடுக்கிறார். ஒருவாரம் கழித்து இன்னொரு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த ஜாமீன் வழக்கில், "ஜெ.வுக்கு ஜாமீன் வழங்க எந்த ஆட்சேபனையும் இல்லை' என்கிறார்.
ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் கோர்ட்டில் கர்நாடக அரசின் உத்தரவுடன் ஆஜரான பவானிசிங், கர்நாடக அரசிடம் ஊதியம் பெற்றார். அப்பீல் வழக்கில் ஆஜ ரான பவானிசிங், தமிழக அரசிடம் ஊதியம் பெற்று வாதிடுகிறார். அவரது நடவடிக்கை முழுக்க சந்தேகத்தை எழுப்புகிறது.

குற்றவாளியான ஜெ., தனது அதிகார பலத்தை, பண பலத்தை பயன்படுத்தி 15 வருடங் களாக வழக்கை காலதாம தம் செய்தார்' என பேராசிரியர் அன்பழகன் சொல்வதை ஏற்றுக்கொண்டால் அதிகாரமும் செல்வாக்கும் ஒரு வழக்கில் நீதி வழங்கு வதை எப்படி தடை செய்யும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். அன்பழகன் சொல்வது தவறு என்றாலும்கூட ஒரு கிரிமினல் வழக்கு முடிய 15 வருடமாகிறது என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. எப்படிப் பார்த்தாலும் நமது நீதி வழங்கும் நடைமுறையை சரிப்படுத்த தீவிரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை குற்ற வழக்கு நடத்தப்பட்டவிதம் தெளிவாக உணர்த்துகிறது. எனவே பவானிசிங்கை நீக்க வேண்டும். அப்பீல் வழக்கை புதிதாக மறுபடியும் நடத்த வேண்டும்' என நீதிபதி லோகூர் தனது தீர்ப்பை படித்துக்கொண் டிருக்கும்போதே... கோர்ட்டிலிருந்த மீடியா வினர் வெளியே ஓட ஆரம்பித்துவிட்டார்கள். உடனே "பவானிசிங் நீக்கம், ஜெ.வுக்கு நீதிபதி கண்டனம்' என கோர்ட் வாசலில் நின்று பேச ஆரம்பித்தனர்.
லோகூர் படித்து முடித்தவுடன் நீதியரசர் பானுமதி தனது தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார். ""பவானிசிங் சுப்ரீம் கோர்ட்டால் ஜெ. வுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாட, நியமிக்கப் பட்டார். ஒரு வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராவதில் எந்தத் தவறும் இல்லை. சுப்ரீம்கோர்ட்தான் அப்பீல் வழக்கை வேகமாக முடிக்கச் சொல்லி காலக்கெடு விதித்தது. அதன்படி பவானிசிங்கின் வாதத்துடன் நீதிபதி குமாரசாமி தீர்ப்பெழுத தயாராகிவிட்டார். இந்த நிலையில் அதில் தலையிடுவது தவறு என்கிற வாதத்தை நான் ஏற்கிறேன். கிரிமினல் நடைமுறைச் சட்டம் 301-ன்படி பவானிசிங் நியமனத்தில் எந்தத் தவறும் இல்லை. அவர் எந்த நீதிமன்றத்திலும் வாதாடலாம்' என்று தனது தீர்ப்பை வாசித்து முடித்தார்.
பானுமதி, "லோகூர் அளித்த தீர்ப்புக்கு நேரெதிரான ஒரு தீர்ப்பை வழங்குகிறார்' என லேட்டாகத் தெரிந்துகொண்ட மீடியாக்களை சேர்ந்தவர்கள், நீதிமன்றத்துக்கு உள்ளே பாய்ந்து வந்தார்கள். மறுபடியும் இரண்டு நீதிபதிகள், இரண்டு தீர்ப்பு. வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம் என டி.வி.க்களில் ப்ளாஷ் செய்தி யாக மாறியது.

இரண்டு நீதிபதிகளும் கருத்தொற்றுமையுடன், "பேராசிரியர் அன்பழகன், வழக்கில் தொடர்பில்லாத மூன்றாவது நபர். அவர் வழக்கு விசாரணை தவறாகப் போகும்போது தலையிடலாம். ஆனால் அரசு வழக்கறிஞர் போல எழுத்துபூர்வமாக தனது வாதத்தை சமர்ப்பிக்க அனுமதிக்க சட்டத்தில் இடமில்லை' என சொன்னார்கள். இதனால் பவானிசிங்கின் நியமனம் பற்றி அன்பழகன் எழுப்பிய கேள்வி மட்டும் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சுக்கு விசாரணைக்கு அனுப்பப்படுகிறது'' என்கிறார் வெங்கடேசன்.
21-ந்தேதி கூடும் மூன்று நீதிபதிகள் பெஞ்ச்!
இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சிலிருந்து மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சிற்கு அனுப்பப் பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இதுபோலவே மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சிற்கு அனுப்பப்பட்ட வழக்குகள் நூற்றுக்கணக்கில் விசாரணைக்காக காத்திருக்கிறது. இன்னமும் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியிடப்படாத அந்த வழக்குகளின் வரிசையில் இந்த வழக்கும் சேர்ந்து விடுமா? அதனால் மிகப்பெரிய கால தாமதத்தை இந்த வழக்கும் சந்திக்குமா? என சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கேட்டோம்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருப்பவருக்கு சுப்ரீம் அதிகாரம் இருக்கிறது. தற்போதைய தலைமை நீதிபதியான தத்து ஜெ.வுக்கு எதிர்தரப்பான கர்நாடக அரசையோ, லஞ்ச ஒழிப்புத் துறையையோ கேட்காமல் ஜெ.வுக்கு ஜாமீன் வழங்கினார். அந்த ஜாமீன் தொடர்பான வழக்கில் ஜெ. தரப்பு கேட்காமலேயே அப்பீல் வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார். மறுபடியும் ஜெ.வின் ஜாமீன் தொடர்பான வழக்கு 17-ம் தேதி தலைமை நீதிபதி தத்துவின் முன் வருகிறது. ஜாமீன் வழங்கியபோது விதித்த நிபந்தனைகள் எதையும் ஜெ. மீளவில்லை. எனவே அவரது ஜாமீனை நீட்டித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க போகிறார்கள். அத்துடன் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு அனுப்பப்பட்ட இந்த வழக்கை விரைவாக முடிப்பதற்குரிய ஒரு கால அட்டவணையை தரும்படியும் கேட்கலாம். ஜெ.வின் கோரிக்கையை தத்து ஏற்கும் பட்சத்தில் அதிகபட்சம் 3 வாரத்திற்குள் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது'' என்றார்கள்.
இந்த பரபரப்பான சூழலில், வியாழனன்று சுப்ரீம் கோர்ட் டெபுடி ரிஜிஸ்ட்ரார் வெளியிட்ட நோட்டீஸில், பவானிசிங் நியமனம் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் பெஞ்ச் ஏப்ரல் 21ந் தேதி கூடும் என லிஸ்ட் செய்யப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் விரைந்து தீர்ப்பு பெறவேண்டும் என்கிற ஜெ. தரப்பின் ஆபரேஷன் இதில் வெற்றி பெற்றது. வழக்கை ஜெ. இழுத்தடிக்கிறார் என்று தி.மு.க தரப்பு குற்றஞ்சாட்டுவதால், இந்த மூவர் பெஞ்ச் விசாரணையின் வேகம் குறித்து அது கேள்வி எழுப்ப முடியாத நிலையில் உள்ளது. அதேநேரத்தில், மூவர் பெஞ்ச் விசாரணைக்காக நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புடையவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பி பெட்டிஷன் போட்டால் அது தேசிய அளவில் விவாதத்திற் குரியதாகும். எனினும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்துவின் அதிகாரத்திற்குட்பட்டதாக இது உள்ளது.
கர்நாடக கோர்ட் நிலைமை!
சுப்ரீம் கோர்ட்டில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லும் என தீர்ப்பு வரும். அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் அந்த பவானிசிங் எழுப்பிய சேம் சைடு கோல் வாதங்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பு எழுதும் குமாரசாமி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை தருவார் என்பதுதான் ஜெ. போட்ட கணக்கு. இதுபோல ஒரு தீர்ப்பை குமாரசாமி தருவதற்கு தடையாக இருப்பார் என்று கணக்கு போட்டுதான் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை மாற்றி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்துவுக்கு நெருக்கமான மஞ்சு நாதாவை தலைமை நீதிபதி பொறுப்புக்கு கொண்டு வர பெரும் முயற்சி நடந்தது. வகேலா "நான் இரண்டு மாதம் கழித்துதான் போவேன்' என அந்த திட்டத்தை முறியடித்தார்.
வருகிற மே-15க் குள் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளிக்குமானால் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை தலைமை நீதிபதி பதவியில் இருக்கும் வகேலாதான் அனைத்தையும் முடிவு செய்வார். சுப்ரீம் கோர்ட் பவானிசிங் நியமனம் செல்லாது என சொன்னாலும், புதிய அரசு வழக்கறிஞர் யார் என்பதை வகேலா தான் முடிவு செய்வார். இதற்கிடையே கோடை விடுமுறை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு ஒரு மாத காலம் வருகிறது. ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறப் போகும் குமாரசாமி இந்த குறுகிய கால இடைவெளியில் சுப்ரீம் கோர்ட் கொடுக்கும் தீர்ப்பை எப்படி சமாளிப்பார் எனத் தெரியவில்லை'' என்று சொல்லும் கர்நாடக வழக்கறிஞர்கள், ""அதைப் பற்றியெல்லாம் குமாரசாமி கவலைப்பட மாட்டார். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் கொடுத்த 3 மாத காலக்கெடு ஏப்ரல் 15-ம் தேதி முடிவடைந்த உடன்... "எனக்கு தீர்ப்பளிக்க இன்னும் 15 நாட்கள் நேரம் வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டுக்கே கடிதம் எழுதி நேரம் கேட்ட நீதிபதி குமாரசாமி, இந்த வழக்கை முடிக்க தேவையான நேரத்தை சுப்ரீம் கோர்ட்டை கேட்டே பெறுவார்'' என்கிறார்கள்.
அடுத்தது என்ன?
நாங்கள் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் நிச்சயம் வெற்றி பெறுவோம்'' என்கிறார் நம்மிடம் நம்பிக்கையுடன் அ.தி.மு.க. வழக்கறிஞர் குமார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. இதுவரை நடத்திய நாடகத்தை சுப்ரீம் கோர்ட் புரிந்து கொண்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி'' என்கிறார் தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.
எப்பொழுதும் பரபரப்புக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாத சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்தது என்னவென ஆவலுடன் ஒட்டுமொத்த தமிழகமும் காத்துக் கிடக்கிறது.

Post a Comment

0 Comments