Subscribe Us

header ads

பொதுபல சேனாவும், சிங்கள கடும்போக்குவாதிகளும் அரசியலமைப்பை மீறுகின்றனர்


தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுபலசேனாவும் சிங்கள கடும்போக்குவாதிகளும் ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பை மதிக்காது அதனை மீறுகின்றனர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச்செயலாளாரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.
 
தமது அரசியல் இருப்புக்காக இனவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் இவர்களைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இனவாதத்தீ நாட்டை மீண்டும் ஆக்கிரமித்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது>
 
உண்மையில் ஸ்ரீலங்காவில் அரசியலமைப்பை தமிழர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் மதிக்கின்றனர். இனவாதிகளை தலைதூக்கவிடாது தடுக்கவேண்டும் இல்லாவிட்டால் சர்வதேசம் அரசு மீது வைத்துள்ள நம்பிக்கை தவிடு பொடியாகிவிடும். ஆனந்த சமரக்கோன் இயற்றிய சிங்கள தேசிய கீதம் அவ்வாறே தமிழிலும் உள்ளது.
 
'ஸ்ரீலங்கா தாயே' என ஸ்ரீலங்காவை தமிழர்கள் தேசிய கீதத்தில் தமது தாயாகவே போற்றுகின்றனர். எனவே இதனை எதிர்ப்பது தாய்நாட்டு மீதான அன்பை எதிர்ப்பதாகவே அமைகின்றது. தமிழ்மொழிக்கு அரசியலமைப்பில் அரச கரும அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதையே ஏற்றுக்கொள்ளாத சிங்கள கடும்போக்குவாதிகள் எப்படி அதிலுள்ள 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளப்போகின்றார்கள? தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போகின்றார்களோ? எனவே தற்போது இந்தக் கடும்போக்குவாதிகளை கட்டுப்படுத்தி தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கும் தீர்மானம் அரசிடமே உள்ளது - இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Post a Comment

0 Comments