பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த போதைப் பொருள் வியாபார மன்னன் எனக் கூறப்படும் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் இன்று இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இரண்டு நாடுகளின் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் சித்திக் என்ற அந்த நபர், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட வெலே சுதாவின் நெருங்கிய நண்பன் என கூறப்படுகிறது.
இருவரும் ஒரே நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திக் பாகிஸ்தானை சேர்ந்த ஆமினா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால், அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவில்லை.
இவர்கள், ஆரம்பத்தில் மருதானை மஜீட் வீதியில் வசித்து வந்ததுடன் சித்தீக்கின் சகோதரி இலங்கையில் வசித்து வருகிறார்.
சித்திக் என்ற இந்த நபர் பாதாள உலக கோஷ்டியுடன் தொடர்புகளை கொண்டுள்ளதுடன் ஓகோல்ட் மற்றும் ஆர்மி ஜெயா ஆகிய பாதாள உலக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார்.
சித்திக், ஆயுதம் வைத்திருந்தமை தொடர்பில் இலங்கையில் இறுதியாக கைது செய்யப்பட்டார். சிறையில் அவர், ஓல்கோட் என்ற பாதாள உலக தலைவரை முதல் முறையாக சந்தித்துள்ளார்.
இதனையடுத்து இவரும் இணைந்து இந்தியாவுக்கு சென்றிருந்ததுடன் அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்து தப்பித்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.
ஓல்கோட்டுடன் இணைந்து டுபாய் சென்ற சித்திக், பாகிஸ்தான் போதைப் பொருள் வியாபாரிகளை சந்தித்துள்ளர்.
சித்திக், ஓல்கோட் என்ற பாதாள உலக தலைவருக்கு ஹெரோயின் போதைப் பொருளை விநியோகித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
களனியில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட 85.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வெலே சுதாவும் சித்திக்கும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஹெரோயின் தொகை பிடிப்பட்டது.
46 வயதான சித்திக், தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளை சரளமாக பேசக் கூடியவர் என சர்வதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0 Comments