புதிய தேர்தல் முறைமையை மாற்றி அமைப்பது தொடர்பில் தேவையாயின் உப குழுவொன்றை நியமிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்தாகும். அதுவே மக்களின் அபிப்பிராயமும் ஆகும். இதற்கு உரிய வகையில் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மேலும் பணத்தினுடைய பெறுமதியை கருத்திற்கொள்ளாது கொள்கை மற்றும் இலக்குகளை கொண்டு தனது அரசியல் பயணத்தை கட்டியெழுப்ப உதவுமாறும் ஜனாதிபதி கட்சி தலைவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
தேர்தல் முறைமையை மாற்றி அமைப்பது தொடர்பில் நேற்று ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் உச்சக்கட்ட அதிகாரத்திற்கு, மக்களிடம் நிலைகொண்டிருந்த மக்களின் எதிர்ப்பு அலையானது விகிதாசார தேர்தல் முறைமைக்கும் காணப்பட்டது.
விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை எனது தனிப்பட்ட கருத்தாகும்.அத்தோடு தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திலும் வாக்குறுதி அளித்தமைக்கு அமைவாக தேர்தல் முறைமையை மாற்றி அமைப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகிறது என அரசியல் கட்சி தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன்போது விகிதாசார தேர்தல் முறைமை மாற்றி நாட்டிற்கு உகந்த முறைமையொன்றை கொண்டு வருவது தொடர்பில் கட்சி தலைவர்கள் தமது ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தினேஸ் குணவர்த்தன தலைமையிலான குழுவினுடைய அறிக்கை தொடர்பிலும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அத்தோடு இதன்போது புதிய தேர்தல் முறைமையை தயாரிப்பது தொடர்பில் தேவையாயின் உபகுழுவொன்றை நியமித்து தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணியின் ஆலோசனையை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
0 Comments