முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மட்டுமே 'சுப்பர் மேன்' என்றில்லை என்பதை நாம் நிரூபித்துள்ளோம் என தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தனது அமைச்சில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்து உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக குடிநீர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள தேசிய நிகழ்வு குறித்த ஊடகவியலாளர் மாநாடு நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இல்லை. சட்டதிட்டங்களுக்கு மாறாகவும், திறைசேரியின் அனுமதியின்றி நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நாம் இடைநிறுத்தியுள்ளோம். அதுதொடர்பில் விசேடமான கவனத்தை செலுத்தி ஆராய்கின்றோம். அதேநேரம் ஆவணங்கள் சரியாக செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நாம் எவ்விதமான தலையீடுகளையும் மேற்கொள்வில்லை.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தான் மட்டுமே சுப்பர் மான் என நினைத்துச் செயற்பட்டிருந்தார். அவர் மட்டும் தான் சுப்பர் மான் என்றில்லை என்பதை நிரூபித்துள்ளோம். ஜனாதிபதியின் சகோதரர் என்ற உறவுமுறை அவருடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது. அதனடிப்படையில் அவர் பல்வேறு தீர்மானங்களை ஏதேச்சதிகாரமாக எடுத்திருந்தார். இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். குறிப்பாக தமது வீடுகளிலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்டனர். அவ்வாறான அனுகுமுறையொன்றை எம்மால் மேற்கொள்ளமுடியாது.
மேலும் பலவந்தமாக வீடுகளிலிருந்து வௌியேற்றப்பட்டவர்கள், அதிகார பிரயோகத்தின் ஊடாக தமது வீடுகளை இழந்தவர்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது வௌ்ளிக்கிழமைகளில் நகரஅபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சு ஆகியவற்றில் அமர்வுகளை மேற்கொள்ளும். அதன்போது பெறப்படும் முறைப்பாடுகளின் அடிப்படையில் ஆராய்ந்து அவர்களின் இழப்பீட்டுக்குரிய நிவாரணமும் பெற்றுக்கொடுக்கப்படுவுள்ளது.
ஊழல்மோசடி
எமது அமைச்சில் ஊழல்மோசடிகள் இடம்பெறவில்லை என்பது குறித்து நான் எங்கும் கருத்து வௌியிடவில்லை. மோசடிகள் குறித்த அனைத்து விடயங்களும் கிடைப்பதற்கு முன்னதாக அதுதொடர்பில் பகிரங்கமாக கருத்துக்களை முன்வைத்து நடவடிக்கை எடுக்கபடாதவொருவராக சித்தரிக்கப்படுவதற்கும் நாம் விரும்பவில்லை. எனவே அவ்விடயங்கள் தொடர்பான உள்ளக விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என்றார்.
0 Comments