Subscribe Us

header ads

ஒரு குடையின் கீழ் நாட்டை கொண்டுவருவதில் திறமைமிக்க ஜனாதிபதியை வரவேற்பதில் நான் பெருமைப்படுகின்றேன்

பைஷல் இஸ்மாயில் –


மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும் தாய் நாட்டை அபிவிருத்தி செய்வதற்குமான தனது முயற்சியில் அனைத்து சமூகங்களையும் குழுவினர்களையும் அரவணைத்து பங்குபெறச் செய்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதிலும் எல்லா அரசியல் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதிலும் மிக திறமையாக புத்திசாதூரியமாக பல முன்னெடுப்புக்கள் முன்னெடுத்து வருகின்ற எமது நாட்டின் ஜனாதிபதியை வரவேற்பதற்கு கிடைத்த இச்சந்தர்ப்பத்தை நான் பெருமையாகக் கருதுகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று முன்தினம் (03) மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,

ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் நல்லாட்சி என்ற சிறப்பான அம்சங்களில் கவனம் செலுத்தி இந்த நாட்டின் அரசியல் கலாசாராத்தினை மாற்றுகின்ற ஆற்றலும் அர்ப்பணிப்பும் உள்ள ஜனாதிபதி ன்றால் அது மைத்திரிபால சிறிசேனா என்றுதான் சொல்லவேண்டும். ஜனாதிபதியின் செயற்பாடுகள் யாவும் இலங்கையில் ஒரு புதிய உதயத்தினை உருவாக்கியுள்ளது. இந்த உதயம் நமது நாட்டை புதிய எழுச்சிக்கும் உச்சத்திற்கும் கொண்டு செல்லமளவிற்கு நிலைமாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை தருகின்றது. தாய்நாட்டின் சுபீட்சத்தினை நோக்காகக் கொண்ட அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைவதில் கிழக்கு மாகாண சபை கைகோர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளது.

நமது இலங்கை அரசாங்கம் நாடு முழுவதிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளதோடு பன்மைத்துவ அரசியல் செயன்முறை மற்றும் சிவில் நிருவாகத்தை தாபிப்பதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் முக்கியத்துவமிக்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான உகந்த சூழலையும் எல்லா அத்தியாவசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. 20 வருடங்களுக்குப் பிறகு மே மாதம் 2008 ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திற்கான மாகாண சபை தாபிக்கப்பட்டதை தொடர்ந்து பல உட்கட்டுமான செயற்திட்டங்களின் நடைமுறைப்படுத்தல் சிறந்த வகையில் முன்னேற்ம் கண்டுள்ளது.
வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் முன்கொண்டுசெல்லப்பட்ட கிழக்கின் எழுச்சி மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் நியாயமான அளவு வெற்றி கண்டுள்ளது. இவை அனைத்தும் பாராட்டத்தக்க அபிவிருத்திகளாகும்.
பொதுத்துறையில் நல்லாட்சித் தத்துவங்களை துளிர்விடச் செய்வதற்கான தங்களது முன்னெடுப்புக்களை நாம் முழு மனதுடன் வரவேற்கின்றோம். இந் நடவடிக்கைகள் பொது நிர்வாகத் துறையை மென்மேலும் வெளிப்படைத் தன்மையுள்ளதாகவும் வகைபொறுப்புக் கூறுகின்ற நிலைக்கும் மாற்றும் என்பது எனது நம்பிக்கையாகும். அண்மைக்காலத்தில் ஊழல் மிகப்பிரமாண்டமாக வளர்ந்துள்ளது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றோம். இதன் விளைவாக வெளிப்படைத்தன்மை, சட்டவாட்சி, வகைபொறுப்புக் கூறல் போன்ற நல்லாட்சி அம்சங்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஆட்சியாளர்களும் பொதுத் துறை அதிகாரிகளும் தேவையற்ற செலவினங்களையும் வீண் விரயங்களையும் குறைத்து அத்தகைய வளங்களை மக்களின் நலனோம்புகைக்காக பயன்படுத்தல் என்ற வகையில் நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயலாற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நல்லாட்சி நடைபெறுவதினூடாக அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தங்களது முயற்சிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நான் எனது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறேன்.

யுத்தம் முடைவடைந்த கடந்த 5 வருட காலப்பகுதியில் கிழக்கு மாகாணமானது உட்கட்டமைப்பு அபிவிருத்தியினூடாகவும் அதிகரித்த பொருளாதார வெளியீடுகளூடாகாவும் விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது. அண்மைக்காலங்களில் கிழக்கின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க நவீனத்துவத்தை அடைந்துள்ளதுடன் தற்போது இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் மாகாணம் என்ற நற்பெயரையும் பெற்றுள்ளது. இதனை சாத்தியப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம், சர்வதேச கொடை வழங்கும் முகவர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பங்கு நன்றியுடன் நினைவுகூரத்தக்கது.

ஜனாதிபதி அவர்களின் தூரநோக்குள்ள தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் இம்மாகாணத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கும் என்பது எனது நம்பிக்கையாகும். நாட்டின் செல்வ வளத்தை உருவாக்குகின்ற பயன்படுத்தாத இயற்கை வளங்களையும் கடின உழைப்புள்ள திறன்வாய்ந்த மனித வளங்களையும் கிழக்கு மாகாணம் தன்னகத்தே கொண்டுள்ளதென்பதை தாங்கள் அறிவீர்கள். கிழக்கு மாகாண சபை மத்திய அரசாங்கத்தின் ஆலோசனையுடனும் ஒத்துழைப்புடனும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்ற கொள்கையினையும் ஒழுங்குபடுத்தும் முறைமையினையும் உருவாக்க உள்ளது என்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசியல் ஸ்திரமற்ற தன்மை என்ற இருண்ட காலம் தற்போது முடிவடைந்து மாகாணத்திலுள்ள அனைத்து இனங்களும் மாகாணத்தின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்ற பொதுவான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர். ஆகவே நீண்ட கால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு கிழக்கு மாகாணத்திற்கான நம்பத்தகுந்த அபிவிருத்தி அனுகுமுறை ஒன்றை பின்பற்றுவதில் எமது கவனத்தை செலுத்துவது மிக முக்கியமான அம்சமாகும். வறுமை, போசாக்கின்மை, தொழிலின்மை போன்ற சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடிய துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடையக்கூடிய மூலதனம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தினை தன்னகத்தே கொண்ட வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் முன்னேறகரமான அபிவிருத்தி முன்னெடுப்புக்களை வெளிக்கொண்டுவருவது அவசியமும் அவசரமானதுமாகும்.

கிழக்கு மாகாண சபை முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டமொன்றை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. இது கிழக்கு மாகாண சபையின் கொள்கை முன்னுரிமைக்கு அமைவாக தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முதலீட்டு ஊக்குவிப்புக்கான கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. முதலீட்டு செயன்முறைகளுக்கு அனுசரனை வழங்குதல், ஒழுங்கு நடைமுறைகளை கண்காணித்தல், மனிதவள அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தியை துரிதப்படுத்தல் என்பன இதில் அடங்கும்.

கிழக்கு மாகாணத்தை கவர்ச்சிகரமான முதலீட்டுத் தளமாக மாற்றுவதற்கான எமது முன்னெடுப்புகளுக்கு மத்திய அரசாங்கத்தின் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.-- 






Post a Comment

0 Comments