இலங்கை அணியில் சந்திமால், திரிமான, கருணாரத்ன போன்ற இளம் வீரர்களுக்கு கடந்த 4 மாதங்கள் சரியாக விளையாட வாய்ப்புகள் வழங்கவில்லை. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டி தன்மையை மாற்ற கூடிய ஜனித் பெரேரா போன்ற திறமை வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவ்வாறு இலங்கை அணி கிண்ணத்தை வெல்லும் என பாரக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
இலங்கை அணி தொடர்பில் இன்று அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உலகக் கிண்ணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணியானது சிறப்பான ஒரு அணியல்ல. திறமையான வீரர்கள் அணிக்கு வெளியில் இருக்கும் போது எவ்வாறு இது போன்ற திறமையற்ற அணிவொன்றை தெரிவுகுழுவினரால் தெரிவு செய்ய முடிந்தது.
அணியில் மாற்றங்கயை செய்யும் போது முதலில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்க வேண்டும். தற்போதைய இலங்கை அணியில் நிறைய வீரர்கள் மன அழுத்தத்துடன் இருக்கின்றனர்.
அணியின் சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் டில்சான் ஆகியோருக்கு இது இறுதி உலகக் கிண்ணம் என்பதால் வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும்.
குறிப்பாக இலங்கை அணியில் இளம் வீரர்களுக்கு விளையாடுவதற்கு சந்தர்ப்பம் அளிப்பது குறைவாகவே காணப்படுகின்றது. முக்கிய பிரச்சினையாக கடந்த நான்கு மாதங்களில் தினேஸ் சந்திமால், லஹிரு திரிமான மற்றும் திமுது கருணாரத்ன ஆகியோருக்கு அணியில் சரியாக விளையாட சந்தர்பங்கள் வழங்கப்படவில்லை. இதனால் இவ்வீரர்கள் மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குசேல் ஜனித் பெரேரா போட்டியின் தன்மையை மாற்ற கூடிய வீரர். ஆனால் இவரை அணிக்குத் தெரிவு செய்யவில்லை. திறமையற்ற வீரர்கள் யார் இருக்கின்றனர் என்பதை பற்றி பேசுவதை விட குசேல் ஜனித் பெரேரா போன்ற திறமையான வீரர்களை தெரிவு செய்யாதமைதான் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான ஒரு நிலையில் இலங்கை அணி எவ்வாறு கிண்ணத்தை வெல்லும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


0 Comments