-முகுசீன் றயீசுத்தீன்-
2015 ஜனவரியில் பதவியேற்றுக் கொண்ட மைத்திரிபால தலைமையிலான புதிய
அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு ஐ.நா. விசாரணை அறிக்கையை 2015 மார்ச் மாத மனித
உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படாதிருப்பதில் வெற்றி கண்டுள்ளது.
இதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு விஜயம் செய்து
ஐ.நா. மற்றும் அமெரிக்க உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார்.
2009 இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து 2 மாதங்களில் உள்ளக விசாரணை பொறிமுறை உருவாக்கப்படும் என்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மங்கள சமவீர அமெரிக்காவில் தெரிவித்திருந்தார். இதன்படி இலங்கை அரசாங்கம் உள்நாட்டு இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை தொடர்ந்தும் சர்வதேசத்துடன் பகிர்ந்து கொள்கிறது.
இதற்கிடையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக
வட மாகாண சபையில் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரனால் கொண்டு வரப்பட்டு
நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்மானம் இலங்கை, இந்தியாவிலும் மற்றும்
வெளிநாடுகளிலும் உள்ள தமிழர் தரப்பில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணைக்குழு அறிக்கையை
திட்டமிட்டபடி எதிரவரும் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிப்பதற்கு அழுத்தங்
கொடுக்கும் வகையிலும் இனப்பிரச்சினை தொடர்பான புதிய அரசின் பொறுப்பை
இனங்காணவும் இக்கால கட்டத்தில் இவ்வாறானதொரு பிரேரணை வட மாகாண சபையில்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் தொடர்பாக மென்போக்கைக்
கடைப்பிடித்து வரும் புதிய அரசாங்கம் இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள
மறுத்துள்ள போதிலும் தாக்கம் செலுத்தக் கூடியதும் விமர்சிக்கக் கூடியதுமான
கருத்துக்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய
மைத்திரி அரசானது 2009 இறுதி யுத்தத்தில் வெற்றி பெற்ற மஹிந்த அரசை பாரிய
சவால்களுக்கு மத்தியில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள்
மஹிந்தவின் யுத்த வெற்றி அலை இன்னும் சிங்களவர் மத்தியில் கணிசமான அளவு
செல்வாக்குச் செலுத்தி இருப்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டி
நிற்கின்றன. எனினும் மஹிந்த அரசின் சிறுபான்மை விரோதப் போக்கு மைத்திரி
ஜனாதிபதியாவதற்கான சிறுபான்மையினரின் வாக்குகளை அவருக்குப் பெற்றுக்
கொடுத்தது.
ஐக்கிய தேசியக் கட்சியினதும் சிறீலங்கா சுதந்திரக்
கட்சியும் கலந்திருக்கும் தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை
மிகவும் பலவீனமானது. எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றப்
பொதுத் தேர்தலில் மஹிந்த தரப்பை முழுமையாகவும் நிலையாகவும் முறியடித்த
வகையில் அமைந்த பலமான பாராளுமன்ற ஆதரவை தனது ஆட்சிக்கு ஆதாரமாகப் பெற்றுக்
கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் ஜனாதிபதி மைத்திரிக்கு உள்ளது.
எனவே சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு ஒரு நியாயபுர்வமான தீர்வைப் பெற்றுக்
கொடுக்கும் விருப்பைக் கொண்டுள்ள புதிய அரசாங்கத்திற்கு எதிர்வரும் பொதுத்
தேர்தல் வரை பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவையும் தக்க வைத்துக் கொள்ள
வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இதற்காகவே இலங்கை அரசாங்கத்தை
அபகீர்த்திக்கு உள்ளாக்கி, சில நிர்ப்பந்தங்களுக்குள் தள்ளப்படலாம் என
எதிர்பார்க்கப்படும் ஐ.நா. விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை தள்ளிப்
போட அரசாங்கம் விரும்பியது.
எனினும் இந்த அறிக்கையை மார்ச் மாத
ஜெனீவா அமர்வில் எப்படியாவது வெளியிடச் செய்வதன் மூலம் இறுதி யுத்தத்தில்
தமது இழப்புக் குறித்து சர்வதேச அங்கீகாரமிக்க ஆவணத்தைப் பெற்றுக் கொள்ள
முடிவதோடு, அதற்கான நியாயத்தையும் நிவாரணத்தையும் பெற முடியும் என தமிழர்
தரப்பு எதிர்பார்த்திருந்தது. இறுதியில் இந்த விடயத்தில் அரசு வெற்றி
பெற்றாலும் அதிலுள்ள நியாயத்தை தமிழர் தரப்பு புரிந்து கொண்டுள்ளதாக அறிய
முடிகிறது.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி மைத்திரி தனித்து எந்தவொரு
தீர்மானத்துக்கும் வர விரும்பாத நிலை உள்ளது. அரசியலில் துருவப்பாங்கான
போக்குகளை கொண்டுள்ள முரண்பட்ட சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மஹிந்த
தரப்பை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒரேயொரு நேர்கோட்டில் சங்கமமாகி
இருக்கின்றன. ஆனால் அவை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஒருமித்த
நிலைப்பாடுகளுக்கு உடனடியாக வரக்கூடிய நிலை தற்போதைய பலவீனமான பாராளுமன்ற
௲ழலில் காணப்படவில்லை. அதனால்தான் ஜனாதிபதி மைத்திரி வேறுபட்ட தரப்புகளைக்
கொண்டுள்ள தேசிய நிறைவேற்று சபையினுாடாக சில முக்கிய முடிவுகளை மேற்கொண்டு
வருகிறார்.
அதேவேளை மஹிந்த தரப்பின் ஊழல், மோசடிகள் குறித்த
விடயத்தில் அரசாங்கம் மென்போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் குற்றவாளிகளைத்
தப்பிப்பிழைக்க விட்டுள்ளதன் மூலம் உருவாகி இருக்கும் ஜனநாயக ௲ழலை அவர்கள்
தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டம் போட விட்டுள்ளதாகவும்
அரசாங்கத்தின் மீது சில ஆதரவாளர்கள் அதிருப்தியுற்றிருக்கின்றனர். இதில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது அதிக பாய்ச்சல் உள்ளது.
ஆனால்
மஹிந்த தரப்பைக் கட்டிப் போட ஜனாதிபதி உட்பட ஏனைய அரச உயர்மட்ட பிரிவினரும்
விருப்பம் கொண்டிருந்தாலும் அதற்கு பல சட்ட ரீதியான நீதி நியாயங்கள்
இருந்த போதிலும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான பலம்
கிடைக்கும் வரை பொறுத்திருப்பதாக உணர முடிகிறது.
மேலும்
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை
பெருமளவில் குறைத்து விடும் வேலைத்திட்டமும் முக்கியமாக உள்ளடங்கி
இருப்பதால் அதன் முடிவில் பாராளுமன்றம் பலம் பெற்று விடும். ஜனநாயக ரீதியான
௲ழல் அதிகரிக்கும். அதன்பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும்
தரப்பே நாட்டில் பலம் மிக்க சக்தியாக மாறக்கூடிய நிலை காணப்படும்.
ஜனாதிபதி என்ற ஒரு தனிநபராக இருந்து சகலவற்றிற்கும் விரைந்து தீர்மானம்
மேற்கொள்ளக்கூடிய ௲ழல் அப்போது இருக்காது. எனவே சிறுபான்மையினர் விடயத்தில்
ஒப்பீட்டளவில் அதிகபட்ச கரிசனையோடு திகழும் தற்போதைய அரசாங்க
உயர்மட்டத்தினர் பாராளுமன்றத்திலும் பலம் பெற்றுக் கொள்ளும் ௲ழல் உருவாக
சிறபான்மையினரான தமிழ், முஸ்லிம்களும் ஜனாதிபதித் தேர்தலைப் போல
ஆரோக்கியமானதும் ஆக்கபுர்வமானதுமான பங்களிப்பைச் செலுத்த முன்வர வேண்டும்.
தினக்குரல் 21.02.2015


0 Comments