(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடுவதாக இருப்பின் அது நாட்டின் கிரிக்கெட் விளையாட்டுத்துறையை சரியான வழியில் இட்டுச்செல்வதைக் குறியாகக் கொண்டே அன்றி தனிப்பட்டவர்களின் சுயலாபத்திற்கானதாக இருக்காது என துறைமுக, கப்பல்துறை, விமானசேவைகள் அமைச்சரும் முன்னாள் உலகச் சம்பியன் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் கிரிக்கெட் விளையாட்டுத்துறை மேம்பாட்டை முன்னிட்டு அவசியம் ஏற்படின் அப் பதவிக்கு போட்டியிட தயக்கம் காட்டப்போவதில்லை என அர்ஜுன குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு கிரிக்கட் கழகங்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல தரப்பினர் தன்னை கோரியுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அடுத்த தேர்தல் தொடர்பாக பலதரப்பினர் தன்னுடன் கலந்துரையாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், எனினும் அப் பதவிக்கு போட்டியிடுவது குறித்து இன்னும் உறுதியான முடிவு எதனையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
‘‘கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் சார்பாகவே கிரிக்கெட் நிருவாகிகள்
இருந்தனர். முன்னாள் ஜனாதிபதி, அரசியல்வாதிகள் ஆகியோரின் தேவைக்கேற்ப கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள், இதனால் கிரிக்கெட்துறை சீரழிந்தது. எனினும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அரசியலை களைபிடுங்குவதே புதிய அரசின் குறிக்கோளாகும்.
கிரிக்கெட் நிறுவனத்திற்கு வந்தால் கிரிக்கெட் துறையில் அரசியல் தலையீடு
அனுமதிக்கப்படமாட்டாது. வீரர்கள் விளையாடவேண்டும். அதிகாரிகள் நிருவகிக்கவேண்டும். எதிர்வரும் தேர்தல் குறித்து 1996 உலக சம்பியன் அணி வீரர்கள் என்னுடன் கலந்துரையாடினார்கள். இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் இளம் வீரர்களை ஒன்று திரட்டி உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்த கவனஞ் செலுத்தப்படும்’’ என அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசின் நூறு நாள் செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவது அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர் என்ற வகையில் தனது முதலாவது கடமை என்பதால் அதற்கு தடை ஏற்படாத வகையில் எதிர்வரும் கிரிக்கெட் தேர்தல் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அமைச்சர் ரணதுங்க குறிப்பிட்டார்.
கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்கள் உட்பட சகலரினதும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு நிலைமைகளை நன்கு ஆராய்ந்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அர்ஜுன தெரிவித்தார்.


0 Comments