Subscribe Us

header ads

மரங்களை மெல்லக் கொல்லும் மொள்ளமாரி


இலங்கையின் தாவரப் பல்வகைமைக்கு பெரும் அச்சுறுத்தலாகக் காணப்படும் குருவிச்சையை (Mistletoe) பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். சகல பல்லாண்டு வாழ் மரங்களிலும் ஒட்டுண்ணியாக வளரும் ஆற்றலைக் கொண்ட இவ்வொட்டுண்ணித் தாவரம் குறிப்பாக உலர் வலயத்தில் (புத்தளம் போன்ற பகுதிகளில்) நகர எல்லையினுள் கூட எல்லா இடங்களிலும் பரவிக் காணப்படுகின்றது.

குருவிச்சையானது பலன் தரும் நிழல் மரங்களையும் பழ மரங்களையும் தாக்கி காலப்போக்கில் அம்மரங்களை கொன்று விடுகின்றது.

ஆரஞ்சு நிற மெல்லிய நீண்ட பூக்களைக் கொண்ட சடையாக வளரும் கொடி போன்ற இவ்வொட்டுண்ணித் தாவரம் பெருமரங்களில் மரமோடு மரமாக காணப்படுவதால் எம் கண்களில் இருந்து தப்பிவிடுகின்றது. நிழல் தரும் மரங்களை அன்னாந்து நோக்கின் குருவிச்சை பரவியிருப்பதை எளிதில் கண்டு கொள்ள முடியும்.

மரக்கிளைகளில் ஒட்டி வளரும் குருவிச்சையின் வேர்கள் மரத்தின் உணவு, நீர் கடத்தும் அகப்பகுதிகளை (காழ், உரியம்) ஊடுருவி போசணையைப் பெறுவதால் மரங்களை பாதிப்பதோடு காலப்போக்கில் பெரு மரங்கள் இறப்பதற்கு காரணமாகின்றது.

இதனை மிக இலகுவாக கட்டுப்படுத்த முடியும். குருவிச்சை வளர்ந்துள்ள மரக்கிளையை வெட்டி அகற்றுவதே இலகுவான வழி. தவறும் பட்சத்தில் அதன் விதைகள் பறவைகளால் பரப்பப்படுவதோடு விதைகளின் ஓட்டும் தன்மை காரணமாக ஒரே மரத்தின் மற்ற கிளைகளிலும் காற்றசைவின் போது விதைகள் விழுந்து ஒட்டிக்கொள்வதால் மீண்டும் மற்ற கிளைகளில் வளர்ந்து விடும்.

இதனால் புத்தளத்திலும் ஏனைய உலர் வலய பகுதிகளிலும் பல தெருவோர நிழல் தரும் மரங்களும் பழம் தரும் மா, தோடை, எலுமிச்சை, கொய்யா மரங்களும் அழிந்து வருவதை நாம் காணத் தவறி விட்டோம்.

புத்தளம் நகர சபை பூங்காவின் நிழல் மரங்கள் பலவற்றிலும் வளர்ந்து காணப்படும் (படம் இணைக்கப்பட்டுள்ளது) இவ்வொட்டுண்ணியை நகர சபை பூங்கா பொறுப்பதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தாழ்மையாக வேண்டிக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு நமது வீட்டுத் தோட்டங்களில் உள்ள மரங்களில் குருவிச்சை வளர்ந்து காணப்படின் உடனே வெட்டி அகற்றி விடுவது நமது மரங்களையும் அயலவர்களின் மரங்களையும் பாதுகாக்கும்.



இம்தாத் பசர்

Post a Comment

0 Comments