Subscribe Us

header ads

''விடை கொடு எந்தன் நாடே'' வலியா..? சுகமா...??

-Mujeeb M Ibrahim-


முப்பது வருடங்களுக்கு மேலான கொடிய யுத்தத்தினால் பல்லாயிரம் உயிர்களையும், பல கோடி பெறுமானங்கொண்ட வளங்களையும் ஈழத்தில் தமிழினம் இழந்தது வரலாறு.

போர்க்காலத்தில் ஆயுதங்களை ஏந்தி இளைஞர்கள் போராடியவேளை அவர்களோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்களும் அந்த போராட்டத்தின் மானசீகப்பங்காளிகளாக இருந்தனர். இதனால் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வு, உயிரிழப்புகள் என்பவற்றை எதிர்கொள்ளவேண்டிய துயர நிலை இருந்தது.

ஆனாலும் அந்த போராட்டம் இருந்த காலம் வரை அதன் மானசீக ஆதரவாளர்களும் சமாந்தரமாக தங்களை அர்ப்பணித்து போராடினர்.

இதற்கிடையில் தங்கள் உயிரைத்தற்காத்துக்கொள்ள பல்லாயிர்க்கணக்கானோர் அகதிகளாக புலம்பெயர்ந்தனர்.

புலம்பெயரக்கூட பொருளாதார வசதியற்ற அல்லது உயிரைத்துச்சமென மதித்து போருக்கு மானசீக ஆதரவை வழங்கிவந்த பெருந்தொகுதி மக்கள் ஈழப்பரப்பில் தொடர்ந்திருக்க முடிவுகொண்டனர்.

புலம் பெயர்ந்தவர்கள் பல வகைகளாய் பிரிந்தனர்.

இந்தியா, ஐரோப்பா, கனடா இன்னபிற வளங்கொண்ட தேசங்கள் என அவர்கள் அடைக்கலம் தேடினர்.

உயிரைத்தற்காத்துக்கொள்ள, நல்லதொரு தொழிலைப்பெற்றுக்கொள்ள, வளமான வாழ்வோன்றை அமைத்துக்கொள்ளவென தங்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கு புலம்பெயர்ந்தோர் முன்னுரிமை வழங்கினர்.

இவற்றில் ஒரு பகுதியினர் வெளிநாடுகளில் போராட்டக்குழுக்களின் செயற்பாடுகளில் நேரடியாக பங்குகொண்டனர்.

சாதாரண புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சுயமாகவும் அழுத்தங்களுக்கு அமைவாகவும் போராட்டக்குழுக்களுக்கு கிரமமான முறையில் வரி செலுத்தி வந்தனர்.

இப்போது போர் நிறைவடைந்துவிட்டது.

போராளிக்குழுக்களில் இருந்தவர்கள் இன்னும் பலர் சிறையில் இருக்கின்றனர்...

எல்லாவித பேரழிவுகளின் பின்னரும் எச்சசொச்சங்களை பொறுக்கிக்கொண்டு தங்கள் சொந்த இடங்களை நோக்கி பெரும்பகுதி அப்பாவி மக்கள் வலிகளோடும் வேதனைகளோடும் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களின் வாழ்வும் எதிர்காலமும் கடும் கஷ்டங்களையே எதிர்நோக்கி நிற்கின்றன!

தமிழரை வைத்து அரசியல் நடத்துகின்றவர்கள் அதே பழைய சாராயத்தினை அவ்வப்போது வெவ்வேறு பாத்திரங்களில் ஊற்றி மக்களை ஒரு வித போதையில் வைத்துக்கொள்வதில் வெற்றி கண்டுவருகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் இப்போது இயக்கங்களுக்கு வரி செலுத்துவதில்லை. மிக்கவளமோடு நிம்மதியாக 
அந்தந்த தேசங்களில் வாழ்கின்றனர்.

இப்போது தங்கள் உயிர்களுக்கான அச்சுறுத்தல் நீங்கிய பின்னரும் கூட இந்த தேசத்தில் மீளக்குடியேறி வாழ்வதற்கு அவர்கள் ஆயத்தப்படவில்லை.

தென்னிலங்கை சிங்களவர்கள் போருக்கு பின்னர் வடக்குக்கு வந்து ஊர் சுற்றி புதினம் பார்த்து விட்டு சென்றது போல் நிறைய புலம்பெயர்ந்தோரும் வந்து சென்றனர்.

இப்போதும் கல்யாணம், பூப்புனித நீராட்டு விழா, கோயில் விசேடம், மரணவீடு என நிகழ்வுகளுக்கு மாத்திரம் பறந்து வந்து போகின்றனர்.

வார்த்தைகளுக்குள் வசப்படாத போரின் வலிகளை இன்னும் இங்கே ஈழத்தமிழர் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்....

நிலவரம் இவ்வாறிருக்க...

தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் போடுகின்ற ஆட்டமும் பாட்டமும், இன்னொரு ஈழவிடுதலை போராட்டமாய் கற்பிதப்படுத்தப்படுகிற துயரம் போருக்கு பின்னர் அதிகரித்துள்ளது!

பதின்மூன்று பிள்ளைகளோடும் முப்பதுக்கும் மேற்பட்ட பேரப்பிள்ளைகளோடும்  கனடாவில் புலம்பெயர்ந்து சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்து மூதாட்டி தன் பேத்தி ஜெஸிக்கா விஜய் சுப்பர் சிங்கரில் வென்றதை தனி நாட்டை வென்றதற்கொப்பான மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்.....

ஆனால் இன்னும் போர்க்காயங்களோடு எவ்வித நிவாரணங்களும் கிடைக்காமல் சொந்த நாட்டில் அகதிகளாக, அந்த கனேடிய மூதாட்டியின் வயதையொத்த எத்தனையோ அம்மாமார் செத்தைக்குள் ஒதுங்கி காலைக்கடன்கழித்து, வயிற்றுப்பிழைப்புக்கு கூட கடுமையாக கஷ்டப்பட்டு கண்ணீரோடு காலங்கடத்துகின்றனர்.

ஆனால் யாரோ அங்கே ஈழத்தின் கண்ணீரையும் துயரங்களையும் மலிவு விலையில் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

விடை கொடு எந்தன் நாடே.....

என்று பாடல்பாடி ,அனுதாபம் தேடி நடுவர்களையும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுகார்ர்களையும் அழவைத்து, கண்ணீரில் நனைந்து சுப்பர் சிங்கர்களாக அடுத்த பிரபு தேவாக்களாக மகுடம் சூடுகின்றனர்....

மலினப்பட்டதும், மலிவு விலையில் விற்கப்பட்டதும் ஈழத்தின் வலிகளும், அதன் போராட்டங்களுந்தான்...!

யாருணர்வார்? யார் தெளிவார்?

-jm-

Post a Comment

0 Comments