முக்கிய கிரிக்கெட் வீரர்களையே ஐ.பி.எல்.அணிகள் ஏலம் எடுக்காத நிலையில் 17
வயதாகும் சர்பாரஸ் கானை பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணி 50 லட்ச ரூபாய்
கொடுத்து தனது அணிக்காக விளையாட தேர்ந்தெடுத்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில்
இடம் பெறும் மிகவும் இளவயது வீரரும் சர்பாரஸ் கான் தான்.
கிரிக்கெட் பயிற்சியாளரான சர்பாரஸின் தந்தை நௌஷாத், குர்லாவில் இருக்கும்
தனது வீட்டிலிருந்து சர்பாரஸ் கான், அவரது தம்பி முஷீர் மற்றும் அவர்களின்
கனமான விளையாட்டு பைகளையும் ஏற்றியவாறு மும்பையின் ஆசாத் மைதானத்திற்கு
இருசக்கரவாகனத்தை ஓட்டிச்செல்வார். சூரியன் உதிக்கும் முன்னரே மைதானத்தை
வந்தடையும் அவர், பின்னர் இருவருக்கும் பயிற்சி கொடுப்பார்.
நேற்று விசாகப்பட்டினத்தில் 19 வயதிற்குட்பட்ட மேற்கு மண்டல அணிக்காக
விளையாடிக்கொண்டிருந்த சர்பாரஸ் கானை ஐ.பி.எல். தேர்வு குறித்து
பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது கிடைத்திருக்கும் இந்த
பணத்தை வைத்து என்ன செய்ய போகிறீர்கள் என்ற வழக்கமான கேள்விக்கு தனது
அப்பாவிற்கு எஸ்.யு.வி. கார் ஒன்று வாங்க வேண்டும் என்று அவர்
தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் தந்தைக்கும் மகனுக்குமான உறவின்
ஆழ்ந்த அர்த்தத்தை வெளிப்படுத்தக்கூடியது.
2010 ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கர விபத்தில் நவுஷாத்தின் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இவ்விபத்து காரணமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தாலும், தனது தந்தை
வலிகளை பொருட்படுத்தாது தினமும் தங்களை நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில்
கூட்டி வந்து பயிற்சி கொடுத்ததாக பெருமை பொங்க சர்பாரஸ் கூறினார்.
தனக்காக அரும்பாடுபட்ட தந்தைக்கு இந்த பணத்தில் கார் வாங்கி தருவது தான்,
அவருக்கு தான் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசாக இருக்க முடியும் என்கிறார்
சர்பாரஸ் கான்.
19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டியில் தென்
ஆப்பிரிக்காவிற்கு எதிராக 66 பந்துகளில் சதமடித்து தன் திறமையை நிரூபித்த
சர்பாரஸ் ஐ.பி.எல். போட்டிகளிலும் பல சாதனைகள் செய்வார் என்று
எதிர்பார்க்கலாம்.


0 Comments