பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆம் ஆண்டுகள் பழைமையான மம்மிகளின் கேசத்தை ஆய்வுக்குட்படுத்திய போது, அந்த மம்மிகளுக்குரியவர்கள் இறப்பதற்கு முன்னர் எவற்றை உணவாக உண்டனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரி காயன் பிராந்தியத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 14 தனிநபர்களது மம்மிகளின் கேசத்தை மேற்படி ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தியிருந்தனர்.
இதன் போது அந்த மம்மிகளுக்குரியவர்களில் அதிகளவானோர் பிரதானமாக மீன், சோளம் மற்றும் அவரைகள் போன்ற தானியங்களையும் உண்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டதாக இந்த ஆய்வில் பங்கேற்ற அமெரிக்க அரிஸோனா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான கெல்லி கனுட்ஸன் தெரிவித்தார்.
அந்த மம்மிகளின் கேசத்திலுள்ள கெரட்டின் எனும் நார்புரதத்தின் காபன் மற்றும் நைதரசன் சமதானிகளை பரிசோதனைக்குட்படுத்தியே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நைதரசன் சமதானிகள் கடல்வாழ் உயிரினங்களில் நிலத்திலுள்ளவற்றை விடவும் அதிகளவிலும் காணப்படுவதால் அந்த நைதரசன் கூறுகளை அடிப்படையாக வைத்து அந்த மம்மிகளுக்குரியவர்கள் இறப்பதற்கு முன் மீன் உணவை உண்டுள்ளமை கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், காபன் சமதானி வகையை அடிப்படையாக வைத்து அந்த மம்மிக்குரியவர்கள் எந்த வகையான தாவர உணவை உண்டனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


0 Comments