சிவகங்கையில் மதுபானக்கடை பாரில் பைப் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் அதை கைப்பற்றி செயல் இழக்க வைத்தனர்.
மதுபானக்கடை
சிவகங்கை நகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெரு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது. இங்கு முத்துராமலிங்கம் (வயது 51) என்பவர் ‘பார்’ நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பாரை மூடப்போனார். அப்போது பாரின் முகப்பில் மாடிப்படியின் அடியில் கட்டைப்பை ஒன்று அனாதையாகக் கிடந்தது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என பார்த்தார்.
அதில் ஒரு பிளாஸ்டிக் டப்பா, வயர் ஆகியவை இருந்தன. அது வெடிகுண்டு போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் சிவகங்கை நகர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.
அந்தப் பையில் இருந்தது பைப் வெடிகுண்டு என தெரிய வந்ததையடுத்து, போலீசார் அதை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு வந்து வைத்தனர். பின்பு அதைச் சுற்றிலும் மணல் மூடைகளை அடுக்கி வைத்தனர்.
வெடிகுண்டு பிரிவு போலீசார்
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் முகுந்த் கோட்னிஸ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச் செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி ஆகியோர் விரைந்து வந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் மதுரையில் இருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் குணசேகரன் வரவழைக்கப்பட்டார். அவர் கவச உடை அணிந்து வெடிகுண்டை பார்வையிட்டார். அதில் ஒரு பிளாஸ்டிக் டிபன் பாக்சில் கடிகாரத்தை பொருத்தி அத்துடன் பிளாஸ்டிக் பைப் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் அதில் 200 கிராம் வெடி பொருள், 9 வோல்ட் பேட்டரிகள் 8, இரண்டு சுவிட்ச்கள், சணல் 100 கிராம், 1 திரி ஆகியவையும் இருந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள், வயர்களை துண்டித்து அவற்றை தனித்தனியாக பிரித்து எடுத்து செயல் இழக்க வைத்தனர்.
4 தனிப்படை
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் முகுந்த் கோட்னிஸ் கூறியதாவது:-
மதுபானக் கடையில் கைப்பற்றப்பட்டது, பைப் வெடிகுண்டு. அதில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் வெடி பொருள் வைக்கப்பட்டு இருந்தது. டெட்டனேட்டர் போன்ற அதிக ஆபத்தை தரக் கூடிய வெடிபொருள் இல்லை.
இந்த வெடிகுண்டு பையை மதுபான பாருக்கு குடிக்க வந்தவர்கள் யாராவது வைத்து விட்டுச் சென்றார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமசாமி தலை மையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை நகர் பகுதியில் பைப் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், அந்த பகுதி மக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சதித்திட்டம் என்ன என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


0 Comments