Subscribe Us

header ads

பாலமுனைக் கிராமத்தின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்

பி. முஹாஜிரீன்


பாலமுனைக் கிராமத்தின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (24) சனிக்கிழமை இரவு பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாலமுனை பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக கருத்துரைத்தனர்.

நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் பாலமுனையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்ட வரைபுகளை தயாரிப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களது பணிப்புரைக்கமைய பாலமுனைக் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கு வழங்குவதற்காக இத்திட்ட வரைபு தயாரிக்கப்படவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் இந்நிகழ்வில் தலைமையுரையாற்றுகையில், ஒரு புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதேச அரசியல் நகர்வுகளும் மாற்றமடைந்துள்ளன. அந்த வகையில் இங்கு கட்சி பேதங்களை மறந்து ஊரின் அபிவிருத்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு எமது அழைப்பையேற்று வருகை தந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.

மேலும், கடந்த அரசாங்கத்தில் ஒரு முக்கிய அமைச்சாக செயற்பட்ட நகர அபிவிருத்தி அமைச்சு எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளமையானது ஒரு வரப்பிரசாதமாகும். இவ்வமைச்சின் மூலம் இன, மத, கட்சி பாகுபாடின்றி சேவையாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் தயாராக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில்; நாமும் நமது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக கவனமெடுத்து செயற்பட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்ட வரைபுகளை தயாரிப்பதற்கான குழுவொன்றும் தெரிவுசெய்யப்பட்டது.




Post a Comment

0 Comments