அருட்திரு யோசப்வாஸ் அடிகளார்(Blessed Joseph Vaz, ஏப்ரல் 21, 1651 – சனவரி 16, 1711) 1651ம் ஆண்டு சித்திரை மாதம் 21ம் திகதி இந்தியாவில் கோவாவிலிருந்த ஒரு உயர்ந்த கொங்கானி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது சிறுபாரயத்திலிருந்தே கூர்மையான அறிவும் மிகுந்த தேவபக்தியும் நிறைந்தவராக விளங்கினார்.
சிறுவனாக தம் ஆரம்ப கல்வியை பாடசாலையில் கற்றபின் தம் வாழ்வை இறைபணிக்கென முற்றாக அர்ப்பணிக்க விரும்பி ஒரு குருவாகும் நோக்குடன் இளம் வயதில் கோவாவிலிருந்த புனித தோமஸ் அக்குவைனஸின் டொமினிக்கன் குருமடத்தில் சேர்ந்து தத்துவ, இறையியல் கல்வியை மேற் கொண்டார். 1676ம் ஆண்டு குருத்துவப்பணிக்கு மேற்றிராசனக் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்காக இலங்கைக்கு வந்தார். இலங்கையரால் யோசேவாஸ் முனீந்திரர் என அழைக்கப்பட்ட இவர் இலங்கையில் 25 ஆண்டுகள் மறை பணியாற்றினார்.
பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் (யாழ்ப்பாணம்) மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால்நடையில், 24 ஆண்டுகளாக வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார்.
1690ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கோவாவிலிருந்த பேராயருக்கு கடிதம் ஒன்றை எழுதிய பின் புத்தளம் பிரதேசத்தில் 1692ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை தங்கி இருந்து அருட்பணி புரிந்தார். இக்காலப்பகுதியில் இவர் கல்பிட்டி உட்பட்ட பல கிராமங்களுக்கு விஜயம் செய்து தனது அருட்பணியைத் தொடர்ந்தார். அத்துடன் இவர் முக்குவர்கள் வாழ்ந்த இடங்களான மணல்தீவு, தேத்தப்பளை (தேதாப்பொல), மாம்புரி மற்றும் புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் விஜயம் செய்தார்.
கல்பிட்டி பிரதேசத்தில் அருட் பணிபுரிந்த காலத்தில் இவர் நீர் அருந்திய ஒரு சிறிய கிணறு ஏத்தாளை தேவாலயத்துக்கு முன்னால் கடல் நீரேரிக்கு அண்மையில் இன்றும் இருப்பதாகவும் அத்துடன் தலவில தேவாலயத்தில் உள்ள புனித சிலுவைக்கு அண்மையில் இவரின் நினைவாக மெளன பிரார்த்தனைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
புத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள கல்கமுவ (மக கல்கமுவ) பிரதேசத்திற்கு விஜயம் செய்த போது அப் பிரதேச மக்கள் காட்டு மிருகங்களின் தொந்தரவுக்கு பயந்து வாழ்வதை அவதானித்த இவர் அங்கிருந்த ஒரு பாலை மரத்திற்கு அண்மையில் அம்மக்களின் பாதுகாப்பிற்காகவும், ஆறுதலுக்காவும் ஒரு சிலுவையை நாட்டினார். இச் சிலுவையை இன்றும் நாம் அங்கு காணலாம். இவர் புத்தளம் பிரதேசத்தில் சுமார் ஒரு வருடமும் ஒன்பது மாதங்களும் அருட்பணி புரிந்தார்.
1692 இல் கண்டிக்குச் சென்ற வாஸ் அடிகளார், அங்கு றோமன்-கத்தோலிக்க மதத்தை மீளத்தாபிக்கப் பெருமுயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த வாஸ் அடிகள் 1696 இல் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார்.
1710 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பரி. வியாகுலமாதா கோயில் வளவில் சிறு ஓலைக் கோயில் கட்டிப் பலி ஒப்புக் கொடுக்கும் போது காட்டிக் கொடுக்கப்பட்டு மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார். இறுதியாக அவர் நோய்வாய்ப்பட்டு 1711ம் ஆண்டு தை மாதம் 16ம் திகதி கண்டியில் இறைவனடி சேர்ந்தார்.
அவரது பூதவுடல் கண்டி அரசரின் அனுமதியோடு கண்டியில் அவரால் கட்டப்பட்ட தேவ ஆலயத்திலேயே அரசரும் பல இன மக்களும் பெருந்தொகையில் கூடியிருக்க மிக மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
2015.01.14 இன்று காலை முதலாம் பிரான்சிஸ் ஆண்டகையினால் காலி முகத்திடலில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் முத்திபேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளாருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன் இவரால் கல்கமுவயில் (மக கல்கமுவ) நாட்டப்பட சிலுவை எடுத்து வரப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டது. இலங்கையில் முதலாவது புனிதர் பட்டம் பெறுபவர் அவராவார்.
இந் நிகழ்வில் போப் ஆண்டகையிடம் ஆசி பெறுவதற்காக (4 இலட்சத்திற்கு மேற்பட்ட) பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். அடிகளார் புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டு சிறப்புத் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.
0 Comments