Subscribe Us

header ads

ஜனாதிபதி தோ்தலும் கட்சி தாவல்களும்: மைத்தரி முதல் ஹக்கீம் வரை

ஜனாதிபதித் தேர்தல் 2015 இல், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாக ‘பொதுவேட்பாளர்’ என்ற விடயம் இருந்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, அல்லது எதிர்பார்த்ததற்கும் மேலாக பிரமாண்டமான ஒரு பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டார்.

மைத்திரி பால சிறிசேனவின் ஆளும் கட்சியிலிருந்தான எதிரணித் தாவலுடன் ‘கட்சித் தாவல்’ என்ற ஒரு விடயம் இம்முறை தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20.11.2014 அன்று கைச்சாத்திட்டார்.

அன்றைய தினமே அமைச்சர் வசந்த சேனநாயக்க கட்சி தாவினார். கடந்த 22ஆம் திகதி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சி தாவல் உட்பட இது வரை கட்சித் தாவல்கள் தொடர்ந்த  வரை  தொடர்ந்தவண்ணமுள்ளது.

ஆளும் மற்றும் எதிர்த்தரப்புகளில் இருந்து பலரும் மாறிமாறி கட்சி தாவிக்கொண்டிருக்கின்றார்கள். எவர், எந்தக்கட்சியில் இப்பொழுது இருக்கின்றார் என்று தெரியாத அளவிற்கு கட்சி தாவல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், பொதுமக்கள் குழம்பி யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறி நிற்கின்றனர்.

கட்சிதாவும் படலத்தின் ஆரம்பம்

முதலாவது கட்சி தாவல், பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஐ.தே.க.வுக்கு மாறினார்-20.11.2014

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க கடந்த நவம்பர் 20ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற வரவேற்பு வைபவத்தில், பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்கவுக்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.

தனது கட்சித்தாவலுக்கான காரணத்தை அவர் குறிப்பிடுகையில், ‘அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு காரணமாகவே அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்கின்றேன்.

அரசாங்கத்திலுள்ள சிலரின் செயற்பாடுகள் முறையாக இல்லை. மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமென்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதனை பலமுறை எடுத்துக்கூறினோம். ஆனால் யாரும் செவிமடுக்கவில்லை.

எனவே தாய்நாட்டை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் நம்பிக்கையுடன் இணைந்து கொள்கின்றேன்’ என்றார்.

களமிறங்கினார் மைத்திரி, அமைச்சர்களான ராஜித, துமிந்த, குணவர்த்தன, ரஜீவ எதிரணியில் இணைந்தனர் – 21.11.2014

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, கடந்த 21.11.2014 அன்று களமிறங்கினார்.

இவருடன், மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, கல்வி சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மத விவகார பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் அரசாங்கத்திலிருந்து விலகி, அன்றைய தினமே பொது எதிரணியுடன் இணைந்தனர்.

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களில் நீக்குதல், தேர்தல் முறையை மாற்றியமைத்தல், 18ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குதல், 17ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் கொண்டு வருதல், ஊழலற்ற நாடு ஒன்றை கட்டியெழுப்புதல், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குதல் உள்ளிட்ட பல்வேறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகளின் மத்தியில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதனடிப்படையிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் தயாரிக்கப்பட்டது.

ஐ.தே.க.வில் இணைந்தார் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை- 25.11.2014

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை ஐக்கிய தேசியக் கட்சியில், கடந்த 25.11.2014 அன்று இணைந்துகொண்டார்.

2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த இவர், பின்னர் இ.தொ.கா.விலிருந்து வெளியேறி பிரதியமைச்சர் பி.திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்திருந்தார்.

தற்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசிய அவர், ஐ.தே.க.வின் அங்கத்துவத்தை பெறுவதுடன், நுவரெலியா மாவட்டத்தின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது கட்சிச் தாவல் குறித்து இராஜதுரை தெரிவிக்கையில் ’2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களுக்காக தனி வீடு அமைத்துத் தருவதாகவும், ஏழு பேச்சர்ஸ் காணியைப் பெற்றுத் தருவதாகவும் மஹிந்த சிந்தனையில் வாக்குறுதி அளித்திருந்தார்.

மேலும், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் ‘மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு’ தேர்தல் விஞ்ஞாபனத்தில், அதே வாக்குறுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார். எனினும் சுமார் பத்து வருடங்களாகியும் அத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறித்த வாக்குறுதிகளை இதற்குப் பிறகும் நிறைவேற்றுவதாக தெரியவில்லை. இதன் காரணமாகவே, ஐ.தே.க. தலைவருடன் பேசி இந்த தீர்மானத்தை எடுத்தேன்.

அத்துடன் நான் தொடர்ந்து கட்சி தாவுவதற்கான காரணம், எனது கொள்கைக்கு மாற்றான கொள்கையையே குறித்த கட்சியினர்கள் கொண்டிருக்கின்றனர். மாற்றுக் கொள்கையின் காரணமாக பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே, அவ்வாறு அரசியல் செய்ய முடியாது’ என்றார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் ஐ.தே.க.வில் இணைந்தார் – 26.11.2014

ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் கடந்த 26.11.2014 அன்று ஐ.தே.க.வில் இணைந்துகொண்டார். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே அரசிலிருந்து இவர் வெளியேறினார்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான இவர், தற்போது ஐ.தே.க. வில் இணைந்துகொண்டுள்ளார்.

அமைச்சுப் பதவியிலிருந்து விலகி எதிரணியில் இணைந்தார் நவீன் – 01.12.2014

அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தனது அமைச்சுப் பதவியினை 30.11.2014 அன்று இராஜினாமா செய்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் அவர் விலகினார்.

01.12.2014 அன்று அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட நவீன் திசாநாயக்க கடந்த 2007ஆம் ஆண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டிருந்தார்.

எனினும் தற்போது அரசாங்கத்தின் மீதான அதிருப்தி மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை எதிர்த்து, மீண்டும் அவர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

பதவி விலகல் குறித்து அவர் குறிப்பிடுகையில், ‘எனது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள், போதியளவாக இல்லை. 1990ஆம் ஆண்டுகளிலேயே எனது தந்தையான காமினி திஸாநாயக்கவும், முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிக்கவேண்டும் என போராடினார்கள்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலேயே அரசாங்கத்தில் வகித்த பதவிகளிலிருந்து நான் இராஜினாமா செய்துகொள்கிறேன்’ என்று நவீன் திஸாநாயக்க தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு ஹெல உறுமய ஆதரவு – 02.12.2014

அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்த ஜாதிக ஹெல உறுமய, ஏற்கனவே அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்திருந்தது. இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியில் களமிறங்கியுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு சகல விதத்திலும் ஆதரவு வழங்குவதோடு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை நீக்கி சாதாரண ஜனநாயக ஆட்சியினை நிலைநாட்ட சகல மக்களையும் பொது எதிரணியில் ஒன்று சேர்ப்போம் என, 02.12.2014 அன்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது.

அக்கட்சியின் செயலாளர் சம்பிக்க ரணவக்கவே இந்த விடயத்தை அறிவித்தார். ‘ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில், விரும்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து கொள்ள முடியும். ஆனால் இந்த சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவோம். இந்தக் குடும்ப ஆட்சிக்கு இனிமேல் இடம்கொடுக்கப்போவதில்லை.

மக்களின் சொத்துக்களை சூறையாடவோ நாட்டை சீரழிக்கவோ, எமது எதிர்கால சந்ததியினரை அழிக்க இடம்கொடுக்கவோ முடியாது. யார் சர்வாதிகாரத்தை கையில் எடுத்து ஆட்சியினை தக்கவைக்க முயற்சித்தாலும் இந்த ஆட்சியினை வீழ்த்தி புதிய ஜனநாயக கூட்டணியினை உருவாக்குவோம்’ என்று ஹெல உறுமய குறிப்பிட்டது.

ஆளுந்தரப்புக்கு மாறினார் திஸ்ஸ, ஜனநாயக கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெட்டகொடவும் கட்சி தாவினார்– 08.12.2014

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அந்தப் பதவியினை இராஜினாமா செய்து 08.12.2014 அன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே அவர் இந்த முடிவினை எடுத்தார். இதனையடுத்து அவருக்கு அக்கட்சியின் பேச்சாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

திஸ்ஸ அத்தநாயக்க வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தினத்தன்றே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க கட்சியை விட்டு அரசாங்கத்துடன் ஒரு போதும் இணையப்போவதில்லை என்றும் பணத்துக்கு தம்மை விலைக்கு வாங்க முடியாது என்றும் கூறியிருந்தார்.இந்த நிலையிலேயே அவர் ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டார்.

இதேவேளை, ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவருமான ஜயந்த ஹெட்டகொடவும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார்.

சரத் பொன்சேக்கா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவரான இவர், கடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். சரத் பொன்சேக்கா வெள்ளைக்கொடி வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றதால், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு ஜெயந்த ஹெட்டகொட நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிரணிக்கு மாறினார் ஹிருணிகா- 08.12.2014

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர 08.12.2014 அன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கட்சித்தாவல் குறித்து அவர் கூறுகையில், ‘நான், மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா உள்ளிட்ட அனைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கின்றோம். நாங்கள் கட்சியைவிட்டு செல்லவில்லை. ஆனால் எனக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டது. அதுபோன்று அனைவருக்கும் சுதந்திரம் தேவைப்படுகின்றது.

ஆனால் அது இந்த நாட்டில் இல்லை. ஊழல் மோசடி தலைவிரித்தாடுகின்றது’ என்றார்.

பிரதியமைச்சர்கள் பி.திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் எதிரணிக்கு ஆதரவு – 10.12.2014

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த மலையக கட்சிகளான மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக 10.12.2014 அன்று அறிவித்தது.

அதன்படி, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதியமைச்சராக பதவி வகித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரமும், தாவரவியல், பொழுதுபோக்கு மற்றும் பூங்காக்கள் பிரதியமைச்சராக பதவி வகித்த மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தமது பிரதியமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்துவிட்டு பொது எதிரணியுடன் இணைந்துகொண்டனர்.

இவர்களுடன் இரண்டு கட்சிகளினதும் மத்திய மாகாண சபையைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், 34 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் எதிரணியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சி.பொன்னையா மற்றும் சரஸ்வதி சிவகுரு ஆகியோரும் மலையக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஆகியோரே, எதிரணியில் இணைந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர்களாவர்.

அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் 14 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், மலையக மக்கள் முன்னணி சார்பில் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பொது எதிரணியுடன் இணைந்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

மீண்டும் ஆளும் தரப்பில் உதய கம்பன்பில – 11.12.2014

ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிப் பொதுச் செயலாளரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான உதய கம்பன்பில, அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் தரப்புடன் மீண்டும் 11.12.2014 அன்று இணைந்துகொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக சுயாதீனமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்த உதய கம்மன்பில, மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் நல்லாட்சியை ஸ்தாபிக்க நாடு மீதமிருக்காது என்றும் குறிப்பிட்டார்.

‘நாட்டில் தற்போதைய நிலைமையில் நல்லாட்சி தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்த விவகாரத்தினால்தான் ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திலிருந்து விலகி அமைச்சுப் பதவிகளையும் தாரைவார்த்தது. ஆனால் அதற்காக தற்போது ஜாதிக ஹெல உறுமய நாட்டை அழிக்கும் சக்திகளுடன் இணைந்து கொண்டுள்ளமை ஏற்க முடியாதது.

எதிரணி கூறும் வகையில் ஒன்றும் செய்ய முடியாது. 100 நாட்களின் பின்னர் இந்த எதிரணியில் இருந்து விலகிவிடுவதாக ஜாதிக ஹெல உறுமய கூறுகின்றது. அதன் பின்னர் ரணில், சந்திரிக்கா, மங்கள மற்றும் ரவி கருணாநாயக்க குழுவானது நல்லாட்சி என்ற பதாதையை விட்டுவிட்டு தமிழீழம் என்ற பதாதையை ஒட்டும்’ என்றும் தெரிவித்தார்.

எதிரணியில் இணைந்தார் அமைச்சர் ரிஷாத் – 22.12.2014

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து வெளியேறி 22.12.2014 அன்று எதிரணியுடன் இணைந்துகொண்டது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி உட்பட 6 மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி ஆகியோர் கலந்துகொண்டு தமது முடிவினை அறிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷாட் பதியயூதீன் எதிரணிக்கு மாறியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்த அமீர் அலி, கடந்த வாரமே பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அமீர் அலி நியமிக்கப்பட்டிருந்தார்.

இவைதவிர, வடமாகாண சபையின் உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், யாசின் யவாஹிர், ரி.ஜெயதிலக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாருக், எம்.எஸ்.சுபைர் உட்பட 7 மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுமாக மொத்தம் 71 மக்கள் பிரதிநிதிகள் பொது எதிரணியில் இணைந்துகொண்டுள்ளனர்.

இ.தொ.கா.வின் உப தலைவர் உதயகுமார் எதிரணிக்கு மாறினார்- 25.12.2014

மலையகத்தின் பிரதான அரசியல் கட்சியும் அரசாங்கத்தின் கூட்டுக் கட்சியுமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம்.உதயகுமார் கடந்த 25ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தன்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

பொது எதிரணியின் வெற்றிக்கு மலையக மக்கள் துணை நிற்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வெற்றி மீதும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதாகவும் பொது எதிரணியினால் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையிலே தாம் எதிர்க்கட்சியில் இணைந்ததாகவும் உதயகுமார் குறிப்பிட்டிருந்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்திருந்த உதயகுமார் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அக்கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடன் இணைந்திருந்தார். கடந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் இ.தொ.கா.வின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த இவர் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு,அமைச்சுப் பதவிகளிலிருந்து ஹக்கீம், பஷீர் இராஜினாமா – 28.12.2014

ஐ.ம.சு.மு. அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

மு.கா. சார்பில் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் 13 மாகாண சபை உறுப்பினர்களும் 163 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து வந்த நிலையிலேயே கடந்த 28.12.2014 அன்று எதிரணி வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது.

கடந்த ஒரு மாதகாலமாக கட்சி இது குறித்து பல மட்டங்களிலும் ஆராய்ந்துவந்தது. இந்நிலையில் இறுதியில் ஹக்கீம் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளார். கட்சியின் தலைவரின் தீர்மானத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கட்சி தாவியவர்கள் கொண்டுள்ள மக்கள் ஆதரவு

இம்முறை தேர்தலில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்புக்களில் பலர் கட்சி தாவியிருந்தாலும், அவர்களால் கட்சிகள் என்ன இலாப, நட்டம் அடைந்திருக்கின்றன என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

ஐ.ம.சு.மு.இன் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவின் கட்சித்தாவலும், ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் கட்சித்தாவலும் ஒரே தட்டில் வைத்து எடை போடக்கூடிய விடயமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் முன்னரே, ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் அர்ஜூன ரணதுங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் பொது எதிரணிக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.

ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை அவர்கள் அரசை கடுமையாக எதிர்த்துக்கொண்டு, எதிரணிக்கு வெளிப்படையான ஆதரவை வழங்காமல் தமது போக்கில், தமது வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை தெளிவாக விளங்கப்படுத்துகின்றார்கள்.

கட்சி தாவியவர்கள் கடந்த பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் பெற்ற வாக்குகள் கீழே தரப்பட்டுள்ளன. இதிலிருந்து அவர்களுக்கான மக்கள் ஆதரவை அறிந்து கொள்ள முடியும்.

கொழும்பு வாக்குகள்
  • பாட்டலி சம்பிக்க ரணவக்க : 120 333
  • சரத் பொன்சேக்கா : 98 456
கம்பஹா
  • வண. அத்துரலியே ரதன தேரர் : 112 010
  • வசந்த சேனநாயக்க : 51 124
களுத்துறை
  • அர்ஜூன ரணதுங்க : 27 796
அநுராதபுரம்
  • துமிந்த திஸாநாயக்க : 101 384
பொலநறுவை
  • மைத்திரிபால சிறிசேன : 90 118
நுவரெலியா
  • வீ.இராதாகிருஷ்ணன் : 54 083
  • பெருமாள் இராஜதுரை : 49 228
  • பி.திகாம்பரம் : 39 499
வன்னி
  • ரிஷாட் பதியுதீன் : 27 461
  • ஹூனைஸ் பாரூக் : 10 861
திருகோணமலை
  • எம்.கே.டி.எஸ்.குணவர்தன 19 734
கொழும்பு (மேல் மாகாண சபை)
  • ஹிருணிகா பிரேமச்சந்திர : 139 034
  • உதய கம்பன்பில : 115 638
இவர்களுடன் எதிரணியிலிருந்து ஆளுந்தரப்பிற்கு மாறிய திஸ்ஸ அத்தநாயக்க, தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதேபோல ஆளுந்தரப்பிலிருந்து எதிரணிக்கு மாறிய ரஜீவ விஜேசிங்கவும் தேசியப்பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments