ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுத்தீன், பைசர் முஸ்தபா அல்ல எவர் எதிரணிக்கு சென்றாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானித்து விட்டதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத் தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன், எம்.பி பைசர் முஸ்தபா போன்றோர் பொதுபல சேனா காரணமாகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகக் கூறுகின்றனர்.
அப்படி இவர்கள் வெளியேறுவதென்றால் பொதுபல சேனா பிரச்சினை ஏற்பட்ட போதே வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அப்படி செய்ய இல்லை.
பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்குப் பிரச்சினை ஏற்பட்ட போதும் கூட இவர்கள் அரசாங்கத்துடனேயே இருந்தார்கள். இறுதித் தறுவாய் வரும்வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தின் வசதி வாய்ப்புக்களை முழுமையாக அனுபவித்து விட்டே இவர்கள் எதிரணிக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் சமூக நலனையோ, நாட்டின் நலன்களையோ கருத்தில் கொண்டு எதிரணிக்கு செல்லவில்லை. மாறாக தமது சொந்த நலன்களுக்காகவே அங்கு சென்றுள்ளனர். இதனை இந்நாட்டு முஸ்லிம்கள் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.
அதன் காரணத்தினால் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவதற்காக எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமோக வெற்றிபெறச் செய்வதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று குறிப் பிட்டார்.


0 Comments