இலங்கை அரசியல் நீரோடை பல வருடங்களின் பிறகு மைத்திரிபால சிறி சேனவின்
வருகையோடு பொங்கி வழிந்தோட ஆரம்பித்துள்ளது.அனைத்து இன மக்களும் பல்வேறு
காரணங்களினை முன் வைத்து முன்பு போல் அல்லாது இத் தேர்தலில் அதீத ஈடு பாடு காட்ட
ஆரம்பித்திருப்பதினை அவதானிக்க முடிகிறது.பெரும்பான்மை இன சிறு குழுக்களால்
இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் எப்போது கணக்குத் தீர்க்கலாம்
என வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்ற நிலையில் வருகை தந்துள்ள இவ் ஜனாதிபதித்
தேர்தலை அதற்கு கணக்குத் தீர்க்க பயன்படுத்தப் போகிறார்கள்.இன்று பொது வேட்பாளர்
மைத்திரிபால செல்லும் முஸ்லிம் பகுதிகள் அனைத்திலும் முஸ்லிம்களினால் அமோக ஆதரவு
வழங்கப்பட்டு வருகிறது.முஸ்லிம் மக்களின் இவ் ஏகோபித்த ஆதரவிற்கு பெரும் பான்மை இன
சிறு குழுக்களால் முஸ்லிம்களிற்கு அநீதிகள் இழைக்கப்படும் போது அதனை உடனடியாக தடுத்து
நிறுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் நிறுத்தாது கை கட்டி வேடிக்கை பார்த்த
தற்போதைய அரசின் மீது இலங்கை பூராகவும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் மிகவும்
அதிருப்தி அடைந்திருப்பதையே காரணம் எனலாம்.
இலங்கை முஸ்லிம்கள் பொது வேட்பாளர் பக்கம்
தங்கள் விரல்களை உறுதியாக சுட்டி நின்ற போதும் முஸ்லிம் கட்சிகள் மகிந்த
ராஜபக்ஸவின் கரங்களைப் பற்றிப் பிடித்தே காணப்பட்டன.முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களில் முதன் முதலில் கட்சி மாறிய பெருமையினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர்
ஹுனைஸ் பாரூக் அவர்கள் தன் வசப் படுத்திக் கொண்டார்.உண்மையில் இவர் மயில்
கட்சியில் இருந்து மக்களுக்காக கட்சி மாறினார் என்பதனை விட இச் சந்தர்ப்பத்தில் ஒரு
கட்சியில் இருந்து மாறும் போது எங்கு சேர
வேண்டுமோ அங்கு சேர்ந்துள்ளார் என்று
கூறுவது பொருத்தமாக அமையும்.இவர் கட்சி மாறுவதற்கு சில நாட்கள் முன்பே தற்போதைய
அரசை தோற்கடிக்க முடியும் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.ஆனால்,இவரிற்கும்
அமைச்சர் ரிஷாத் பதியூர்தினுக்கும் இடையிலான முரண்பாடு அதற்கு சில மாதங்கள் முன்பே தோன்றி இருந்ததை
யாவரும் அறிவர். இவர் தருணம் பார்த்து மாற இருந்த ஒருவர் என்றால் இவ்வாறான ஒரு
நிலைமை தோற்றம் பெற்ற பிறகல்லவா இவர் அமைச்சர் ரிஸாத்துடன் முரண்பட்டிருக்க
வேண்டும்? இல்லை அரசினை எதிர்க்கத் தான் மாறியவர் என்றால் இப்போதல்ல
அப்பிரச்சனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அக் காலப் பகுதியிலேயே மாறி இருக்கலாம்
அல்லவா?இவர் மு.கா பக்கம் மாறுவார் என்று பலர் கூறிக் கொண்டிருந்த வேளையே மைத்திரி
பக்கம் மாறினார்.அப்போதைய சூழ்நிலையில் மு.கா பக்கம் மாறியிருந்தால் ஹுனைஸ் பாரூக்
அவர்களினால் தான் கட்சி மாறியதற்கு தகுந்த மக்கள் ஏற்கக் கூடிய எது விதமான
காரணங்களையும் கூற இயலாது போய் இருக்கும்.
இவரினைத் தொடர்ந்து அரசுடனான பல சுற்று பேச்சு வார்த்தைகளினைத் அடுத்து
அ.இ.ம.கா மைத்திரி பக்கம் தாவியது.சு.க தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப்
பொறுப்பாக இக் கட்சியினது முக்கியஸ்தர்கள்
சில இடங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்கள் (மு.கா அரசுடன்
இருந்த போதும் சு.க தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக யாரையும் அரசு
நியமிக்கவில்லை ).இவ்வாறான நிலைமைகளின் பின்பு கட்சி மாறியமை தனது சுய நலத்திற்காக என்று பிரதி அமைச்சர்
ஹிஸ்புல்லாஹ் கூறி இருப்பதும் அமைச்சர் பெசில் ராஜ பக்ஸ அரசியல் வாதியான
ஊடகவியலாளருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக
மாறினார் எனக் கூறி இருப்பதும் சற்று சிந்தனையைத் தூண்டும் விதமாக உள்ளது.அமீர்
அலியினை பாராளுமன்றத்தினுள் அரசு உள் வாங்கியது ஜனாதிபதித் தேர்தலிற்காக தான்
என்பது வெளிப்படை உண்மை.அரசிடம் முழுமையான உறுதியளிப்பின்றி இவ்வாறான வேலையினை
தற்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு அரசு செய்து கொடுத்திருக்காது.அதன்
பிற்பட்ட காலப் பகுதியில் தான் அ.இ.ம.கா இற்கு ஞானம் பிறந்தது என்றால் அது
சமூகத்திற்காக அல்ல வேறு சில காரணங்களுக்காக என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.ஜனாதிபதித்
தேர்தல் தொடர்பான பேரம் பேசலில் ஒன்றாக இப் பதவி இருந்திருப்பின் பதவியினை
இராஜினாமா செய்து விட்டே அமீர் அலி வெளியேறி இருக்க வேண்டும்.அவ்வாறு பெற்ற
பாராளுமன்றப் பதவியினை இராஜினாமா செய்யாது மாறி இருப்பதானது வஞ்சகம் தீர்க்க
வாங்கிக் கொண்டு மாறி இருக்கின்றார்கள் என்றும் ஒரு கோணத்தில் பார்க்கலாம்.
முஸ்லிம் காங்கிரசினுள் பல்வேறு விதமான கருத்துகள் எழுந்த போதும் மக்கள்
உணர்வுகள் முற்று முழுதாக தற்போதைய அரசிற்கு எதிராக காணப்பட்டதாலும், அமைச்சர்
ரிஷாத் இனது வருகையினைத் தொடர்ந்து மு.கா கோட்டைகள் அமைச்சரின் பிடிக்குள் சென்று
விடக் கூடிய நிலைமை தோற்று
விக்கப்பட்டதாலும் மு.கா மைத்திரியை
ஆதரிக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.காலப் போக்கில் அரச ஆதரவாளர்களான
மு.கா உயர்பீட உறுப்பினர்களின் உள்ளங்களும் வேறு வழி இன்றி மைத்திரி பக்கம் சாய்ந்து
கொண்டது.
எது எவ்வாறு இருப்பினும் நான்கே நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர அனைவரும் இவ்
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பக்கம் சாய்ந்திருப்பது பாரிய வாராலற்றுத் திருப்பமாக
இருந்தாலும் ஒரு சில முஸ்லிம்களிற்கு தீமை பயக்கக் கூடிய விளைவுகளும் தோற்றம்
பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம் கட்சிகள் ஓரிடத்தில் ஒன்றினைந்துள்ளதால் இன வாதம் தூண்டப்பட்டு பொது
வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு நழுவுமா?
முஸ்லிம்கள் யாவரும் ஓரிடத்தில் ஒன்றினையும் போது அதற்கு எதிரான திசையில்
பேரினத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூட்டப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே
எழுந்திருப்பது நியாயமான ஒன்று.இன்று முஸ்லிம் மக்கள் மைத்திரி பக்கம் ஒன்றிணைய
விரும்புவது கரையோர மாவட்டம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து அல்ல.முஸ்லிம்
கட்சிகள் தீர்மானிக்க முன்பே மைத்திரியை முஸ்லிம் மக்கள் ஆதரித்தமை இதற்கு போதுமான
சான்றாகும்.மேலும்,முஸ்லிம்கள் ஓரிடத்தில் ஒன்றிணைய பிரதான காரணம் பொது பல சேனா
தான் என்ற உண்மையினை யாவரும் அறிவர் .பொது பல சேனா அண்மையில் கொழும்பு கைபார்க் இல்
நடாத்திய கூட்டத்தில் 200 பேர் மாத்திரம் கலந்து
கொண்டது பொது பல சேனா பேரினத்தைச் சேர்ந்த மக்களால் புறக்கணிக்கப்படுகிறது என்பது
தெளிவாகிறது.எனவே,பொது பல சேனாவின் செயற்பாடு காரணமாகவே முஸ்லிம்கள் மைத்திரியை ஆதரிக்கிறார்கள் என்ற
உண்மை பேரின மக்களிடத்தில் கொண்டு
சேர்க்கப்படுமாக இருந்தால் நிச்சயமாக
அங்கே இனவாதத்தினால் மைத்திரியின் வெற்றி வாய்ப்பு நழுவிச் செல்ல வாய்ப்பில்லை.தற்போது மு.கா இனது வருகையினைத்
தொடர்ந்து அதிகம் இனவாதக் கருத்துக்களை தூற ஆரம்பித்துள்ளனர்.ஜனாதிபதியே
கிழக்கிஸ்தானை உருவாக்க அனுமதிக்க முடியாது என முஸ்லிம்கள் தனி நாடு கேட்டுப் போராடுவது
போன்று வர்ணித்துள்ளார்.உண்மையில்,கரையோர மாவட்டக் கோரிக்கையை அரசை விட பல மடங்கு
எதிர்ப்பவர்கள் ஹெல உருமய,ஜே.வி.பி போன்ற கட்சிகள்.இவர்கள் எதிர்க் கூட்டில்
முக்கிய வகி பாகம் வகிப்பது அமைச்சர் சுசில்
பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளது போன்று எதிரணி
கரையோர மாவட்டத்தை தர இணங்கியதற்கு அமைவாகவே மு.கா அவர்களுடன் போய்ச் சேர்ந்துள்ளது
என்ற கூற்றினை தெளிவாக பொய்ப்பிக்கிறது.இவ்வாறான கூற்றுக்களினை கடும் போக்கு பேரின
மக்களின் அதிக ஆதரவினைக் கொண்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள்
மறுக்கும் போது இவர்களினது கூற்றுக்கள் செல்லாக் காசாய் மாறிவிடும்.மேலும்,முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கட்சி தாவினால் இனவாதத்தினைத் தூண்ட
வாய்ப்புள்ளது.தற்போதைய மாற்றம் பேரின மக்களிடம் இருந்தும் என்பதால் இனவாதம் தூண்டப்படும்
என்பது சிலரின் சுயநல ஆரசியலிற்காகத்தான்.மேலும் இனவாதம் தூண்டப்படும் என்றால்
எதிரணி முஸ்லிம்களின் வருகையினை பூப் போட்டு வார வேட்குமா?எனவே,ஊடகங்கள்
பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மாக்களிற்கு இவ்வாறான தெளிவை ஊட்டினால் சிறிதேனும்
இனவாதம் தூண்டப்பட வாய்ப்பில்லை.
ஜனாதிபதி வெற்றி பெற்றால் முஸ்லிம்களின் நிலை..??
கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் முஸ்லிம்கள் அதிகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு
ஆதரவளிக்க வில்லை.இம்முறையும் முஸ்லிம்கள் முன்னை விட பல மடங்கு அதிகமாய்
எதிர்ப்பக்கம் வாக்களிக்கப் போகிறார்கள்.இவ்வாறான நிலையில்.ஜனாதிபதியாக மஹிந்த
ராஜபக்ஸ வெற்றி வாகை சூடினால் 8 வருடம் நீடிக்கக் கூடிய ஆட்சியில் முஸ்லிம்களை மிகக்
கடுமையாக பழி வாங்குவார் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.இன்று முஸ்லிம்களை விட
பல மடங்கு த.தே.கூ உடன் இணைந்து கொண்டு தமிழ் மக்கள் அரசை எதிர்க்கிறார்கள்.ஐ.தே.க
இனை விட அரசிற்கு த.தே.கூட்டமைப்பே மிகப் பெரிய சாவாலாக அமைந்துள்ளது என்று கூறினாலும் தவறில்லை.தமிழ் மக்கள்
எதிர்க்கின்ற போதும் அரசு தமிழ் மக்களிற்கான தீர்வை காலடியில் கொண்டு சேர்க்க
முயற்சிக்கிறது.சில காரணங்களினால் அதனை த.தே.கூ ஏற்க மறுக்கிறது.மு.கா எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த காலப்பகுதியில்
முஸ்லிம்களிற்கு எதுவும் நடக்கவில்லை.முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம்
அரசோடு இணைந்து காணப்பட்ட காலப்பகுதியில் தான் முஸ்லிம்களிற்கு எதிரான அநீதிகள்
கட்டவிழ்த்து விடப்பட்டன.இவைகளினை வைத்து ஒப்பு நோக்கும் போது குட்டக் குட்ட
முஸ்லிம்கள் அரசுடன் ஒட்டி கொண்டிருப்பதனை தனக்குச் சார்பாக பயன்படுத்தி இவ்வாறான
அநீதிகளை முஸ்லிம்களிற்கு எதிரான அரசு செய்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.எனினும்,ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ வெற்றி பெறுவாராக இருந்தால் அபிவிருத்திகள் முஸ்லிம் காட்சிகளினூடாக வழங்கப்படாது
தனது நேரடி உறுப்பினர்களினூடாக அரசு வழங்க முயற்சிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களில் அதிக மானோர் எதிர்ப்பக்கம் இருப்பதால் அபிவிருத்திகளை முஸ்லிம் மக்களிடம்
கொண்டு சேர்ப்பதற்கு சரியான ஆட்கள் இல்லாமல் முஸ்லிம்கள் அபிவிருத்தி இன்றி பாதிப்படையக் கூடும்.குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களினூடாக
ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் சேவைகளை விநியோகம் செய்வதனால் அக் குறித்த
பாராளுமன்ற உறுப்பினர்கள் சேவை மன்னர்களாக சித்தரிக்கப்படுவர்.இவ்வாறான
பாதிப்புகளுக்கு கிழக்கு மாகாணத்திற்கு
வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அதிகம்
உள்ளாவர்.
மைத்திரியை ஆதரிப்பதால் தீர்வு கிட்டுமா..??
மைத்திரியை ஆதரிப்பதால் முஸ்லிம்களிற்கு தீர்வு கிட்டும் என உறுதியாக கூறும்
அளவு மைத்திரியின் செயற்பாடுகளில் இருந்து எது வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லை
என்கின்ற அதே வேளை முஸ்லிம்களுக்கு எதிரான
செயற்பாடுகளினை ஆதரித்ததற்கும் எது வித சான்றும் இல்லை.இன்று அரசினை ஏமாற்றியவர்
நாளை முஸ்லிம்களினை ஏமாற்றமாட்டார்
என்பதற்கு எது வித உத்தரவாதமும் கிடையாது.அமைச்சர் ஜானக பண்டார தென்ன கோன் கட்சிக்குள்
உள்ள பிழைகளை ஒப்புக் கொண்டது போன்று ஒப்புக் கொண்டு அதனை திருத்த முயற்சித்து
இயலாமல் கட்சி மாறினால் இவரின் பக்கம் பிழை இல்லை என்பதனை ஓரளவு
ஏற்றுக்கொள்ளலாம்.இன்று எதிர்க்கூட்டணியில் இருப்போரில் அதிகமானோர் மகிந்த
ராஜபக்சவை ஆட்சி பீடம் ஏற்ற பெரும் பங்காற்றியவர்களே.இவர்களும் விடிவென்று
நினைத்தே இவரினை அரசாட்சியில் வைத்து அழகு பார்க்க முயற்சித்தார்கள்.ஆனால்,அவரது
ஆட்சி அவ்வாறு இருக்க வில்லை.அவர்களே
போர்க்கொடி தூக்கும் அளவு மாறியுள்ளது.இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உருமய போன்ற
கட்சிகள் இணைந்திருப்பதும் எமக்கான தீர்வு கிட்டுமா என்ற சந்தேகத்தைத்தான்
வலுப்பிக்கிறது.எதிர்க் கூட்டணியின் பிரதான பங்காளிக் கட்சிக்கான ஐ.தே.க இன்
ஆட்சியும் முஸ்லிம்களிற்கு உகப்பானதாக அமையவில்லை.மேலும்,மகிந்த ராஜ பக்ஸ இலங்கை பலஸ்தீன
விடுதலை அமைப்பின் தலைவராக பலஸ்தீன முஸ்லிம்களுக்கு அநீதி நடக்கின்ற போது குரல்
கொடுத்தவர்களில் ஒருவர்.இவரின் பெயரில் பலஸ்தீனத்தில் ஒரு வீதி
அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இவரினது ஆட்சியே இப்படி என்றால்
முஸ்லிம்கள் விடயத்தில் மௌனித்திருக்கும் மைத்திரியினது ஆட்சி சிறப்பாய் அமையும் என்பதற்கு எது வித
உத்தரவாதமும் கிடையாது.எனவே,மைத்திரியின் அரசு முஸ்லிம்களிற்கு சார்பாக அமையும் எனக் கூறி விட முடியாது
போனாலும் உருவாகப் போகும் அரசு பல சிறு சிறு கட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட
உள்ளதால் தற்போதைய அரசு மிளிர்ந்ததைப் போன்று ஒரு மிகப் பலமிக்க அரசாக தோற்றம் பெற
வாய்ப்பில்லை.எனவே,இவ் அரசின் தொடர்ச்சியான பயணத்திற்கு சிறு பான்மையினங்களையும்
அரவணைத்துச் செல்லும் போக்கை கடைப்பிடித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.இதன்
விளைவால் சிறு பான்மை இன மக்கள் அடிக்கடி பேரம் பேசல் சக்தியினை பெறுவர்.தொகுதி
வாரித் தேர்தல் முறையினை இவ் அரசு மீண்டும் கொண்டு வர உள்ளதால் முஸ்லிம் பாராளுமன்ற
பிரதிநிதித்துவங்கள் அதிகம் குறைவடைய வாய்ப்பு உள்ளது.குறித்த வீத உறுப்பினர்கள்
கட்சிகளுக்கு பங்கிட்டு வழங்கப்பட உள்ளதால் இதற்கு தீர்வு கிட்டும் என நம்பப்படுகின்ற போதும் இது எந்தளவு சாத்தியம் என்பது கேள்விக்
குறியே.முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் உறுதிபடுத்தப்படாவிட்டாலும் பேரின பிரதி நிதித்துவங்களை தீர்மானிக்கும் சக்தியாக
சிறு பான்மை இனங்கள் மாறுவர்.இன் நிலை
பேரின மக்கள் சிறு பான்மையினரை அரவணைக்கும்
போக்கை கடைப்பிடிக்க ஏதுவாக அமையும்.ஒரு சக வாழ்வு மீண்டும் எழுச்சி பெற வழி
சமைக்கும்.
எதிர்காலத் தேர்தல்களில் இதன் தாக்கம் எவ்வாறு அமையப் போகிறது?
இத் தேர்தலில் மைத்திரியை ஆதரிக்கும் முடிவில் முஸ்லிம்கள் மிகவும் உறுதியாக
இருக்கின்ற காரணத்தினால் அதற்கு எதிராக
முடிவெடுக்கும் யாவருக்கும் எதிர் விளைவுகள் நிச்சயம் என்பது அமைச்சர்
அதாவுல்லாஹ்வின் கோட்டை அக்கரைப்பற்றிலும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன் கோட்டை
காத்தான்குடியிலும் அவர்களின் முடிவினையும் மீறி மக்கள் முற்றாக மைத்திரி பக்கம் சார்ந்திருப்பது
தெளிவாக புலப்படுத்துகிறது.இவர்கள் இருவரும் தங்களது ஊர்களை அபிவிருத்தியினால்
நிரப்பி இருப்பதால் மக்களில் பெரும் பான்மையாக ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை
ஆதரித்தாலும் ஏனைய தேர்தல்களில் குறித்த நபர்களை ஆதரிப்பார்கள்.எனினும்,முன்னர்
போன்று முற்று முழுதான ஆதரவை எதிபார்க்க முடியாது.சந்தர்ப்பத்தை எதிரணிகள் மிகவும்
சாதூரியமாக பயன்படுத்தினால் இவர்களின் ஆதரவை வெகுவாக குறைக்கலாம்.மஹிந்த வெற்றி
பெறுவாராக இருந்தால் சேவைகள் கொண்டு கொட்டி மக்களை முற்றாக தங்கள் வசப்படுத்த முயற்சிப்பார்கள்.மக்களும்
தங்கள் ஊரிற்கென்று ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும்,தங்கள் ஊரிற்கு செய்தவைகளை
சேவைகளை மீட்டிப் பார்த்து அவர்களிற்கு வாக்கை அள்ளிப் போடுவார்கள்.மு.கா இன் முடிவின்
கால தாமதத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும்,ஐ.தே.க யும் நன்றாகவே
பயன்படுத்தியது.இவ் இரண்டு கட்சியிலும் தூங்கிக் கிடந்த அனைவரும் எழுந்து நிற்க
ஆரம்பித்துள்ளனர்.அ.இ.ம.கா இனது வரவு இவர்களை ஓரளவு செல்லாக் காசாக மாற்றியது.மு.கா
இனது வருகையோடு இவர்களின் ஆட்டங்கள் குறைவடைந்துள்ள போதும் மக்களிடையே இவர்கள்
ஓரளவு தாக்கம் செலுத்தும் அளவு உள் நுழைந்து விட்டார்கள் என்றே கூற
வேண்டும்.இவர்களின் வருகையினைத் தொடர்ந்து சில உட் பூசல்கள் ஆரம்பித்திரிப்பதாகவும்
அறிய முடிகிறது.சில பொதுக் கூட்டங்களினூடாக மு.கா மக்களிடம் நுழைவதை தடுப்பதற்கான
முயற்சிகள் அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இத் தேர்தலிலில் மக்களின் போக்கை
சரியாக பயன்படுத்தி மு.கா இனை கிழக்கை விட்டும் தூரமாக்கும் செயற்பாடுகளையும் சிலர்
முன்னெடுத்து வருகிறார்கள்.அதே நேரம் மைத்திரி வெற்றி பெற்றால் இவர்கள் பொட்டியை
கட்ட வேண்டியது தான்.
முஸ்லிம் கட்சிகளின் மாற்றம் அவசியம் தானா?
உண்மையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட மாறாவிட்டாலும் மைத்திரி இற்கு அளிக்கப்படவுள்ள
முஸ்லிம் வாக்குகளில் சிறிதேனும் தாக்கம்
செலுத்தி இருக்கப் போவதில்லை.மௌனமாக இருந்திருந்தால் இனவாதக் கருத்துக்கள்
தூவப்படாது பாது காத்திருக்கலாம்.அவ்வாறானதொரு மனோ நிலையிலேயே முஸ்லிம்கள்
இருந்தார்கள்.எனினும்,அக் கட்சிகளின் மௌனம் மைத்திரியின் வெற்றிக்காகவே என்பதனை
ஏற்கும் அளவு சமூகத்திடம் அரசியல் ஞானம் இருக்கவில்லை.இதனையே சாக்காய்க் கொண்டு
முஸ்லிம் கட்சிகளினை சிலர் பலவீனப்படுத்தி இருப்பார்கள்.தங்கள் கட்சிகளை அழிவில்
இருந்து பாதுகாக்க மைத்திரி பக்கம் மாறுவதே பொருத்தமானதாகும்.
முஸ்லிம்கள் ஜனாதிபதியை எதிர்ப்பது நியாயமா?
பொது பல சேனா அரசின் அங்கீகாரத்தோடு கோத்தப் பாய ராஜ பக்சவினால் இயக்கப்படும்
ஓர் இயக்கம் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே நிலவுகிறது.இதற்கு இணங்க பொது பல சேனாவினால்
தான் அரச ஆதரவு குறைகிறது என அறிந்ததும் பொது பல சேன தன் சேனாக்களினை சுருட்டிக்
கொண்டது.இப்போது மீண்டும் கடும் போக்கு பேரின மக்களின் தேவையை அரசு உணர்ந்த போது வாக்குகளைக் கைப்பற்ற பொது பல சேனாவை களத்தில்
இறக்கி இருப்பதும் மேலும் நிரூபனமாக்குகிறது.கருமலையூற்று பிரச்சினை பூதாகரமாக
இருந்த போது அரசு தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போன்று இருந்தது.சில படை
முகாம்களை மக்கள் அகற்றக் கோரிய போது தன்னால் அதனை செய்ய இயலாது போன்று
இருந்தது.கல்முனைக்கு பேரினத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளர் நியமிக்கபட்ட ஒரு சிறு
விடயத்திற்கு கூட தீர்வு வழங்காது இருந்தது.மேலும்,தீர்வு காணப்படாத பல
பிரச்னைக்களுக்கான தீர்வுகளை முஸ்லிம்களின் வாக்குகளின் தேவையை
அரசு உணர்ந்த பொது மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் அரசு முஸ்லிம்களிற்கு செய்து கொடுத்துள்ளது.இப்போது செய்த அரசால் ஏன் அப்போது
செய்ய இயலாது போனது? என்ற வினாவினை எழுப்பி விடை பெற எத்தனித்தால் உண்மையில் இந்த
அரசு முஸ்லிம்களிற்கு சிறிதேனும்
சார்புடையதாக இருக்க வில்லை.இன்று தந்து விட்டு நேற்று எடுத்தது போன்று அரசு
இவைகளை மீண்டும் எடுக்காது என்பதற்கு எது வித உத்தரவாதமும் கிடையாது.யுத்தத்தைத்
வெற்றி கொண்ட அரசினால் அதனோடு ஒப்பிடும் போது அற்பமான அழுத்கமைப் பிரச்சனையை தீர்க்க
முடியாததால் தான் பல நாள் நீடித்தது
என்றால் என்பதனை ஏற்க முஸ்லிம்கள் ஒன்றும் ஏமாளிகளும் அல்ல.
எதிர் காலத்திலும் இவ் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு தொடருமா..??
எதிர் காலத்தில் அ.இ.ம.கா,மு.கா இணைந்து செயற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.இதனை
ஊவா மாகாண சபைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்பட்டமை எமக்கு சுட்டி நிற்கிறது. அ.இ.ம.கா,மு.கா இணைந்து செயற்பட
முடியாமைக்கு அ.இ.ம.கா அரசோடு மிகவும் ஒட்டிக் காணப்பட்டமையே காரணம் எனலாம்.தற்போது
அவ் வழி சீராக்கப்பட்டுள்ளதால் இருவரும்
எதிர் காலத்தில் இணைந்து செயற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.இரு கட்சித்
தலைவர்களும் தற்போது ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து செயற்பட விருப்பம்
தெரிவித்துள்ளமை இதனை மேலும்
உறுதிப்படுத்துகிறது.எனினும்,ந.தே.மு கட்சியின் தற்கால நிலமையுடம் ஒப்பு நோக்கும்
இவர்களுடன் இணைந்து செயற்பட மாட்டாது என்றே கூற வேண்டும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.


0 Comments