தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் கடைசி நேரத்தில் நெருக்கடி நிலையை அறிவித்து தேர்தல் முடிவை ரத்து செய்ய முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.
10 ஆண்டு ஆட்சிக்கு முடிவு
கடந்த 8-ந்தேதி இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்ட முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து நின்ற மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று ராஜபக்சேவின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டினார்.
இதனிடையே, நேற்று முன்தினம் காலை தேர்தல் முடிவுகள் சிறிசேனாவுக்கு சாதகமாக வரத் தொடங்கிய நிலையில், தோல்வியை ஜீரணிக்க முடியாத முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச கடைசி நேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது, இப்போது அம்பலமாகி உள்ளது.
ரத்து செய்ய முயற்சி
தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்தவாறே இலங்கையில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முயன்று இருக்கிறார்.
ஆனால் இதை இலங்கையின் அட்டர்னி ஜெனரல் அறவே ஏற்க மறுத்து விட்டார். ராணுவ அதிகாரிகளும் முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச நெருக்கடி நிலை பிரகடன யோசனையை நிராகரித்து விட்டனர்.
இதேபோல் தலைமை தேர்தல் அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதன் வாயிலாக போலீசாரை அங்கே அனுப்பி வைத்து தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச எடுத்துக் கொண்ட இறுதிக்கட்ட முயற்சிக்கும் அவருடைய மந்திரிகள் இடம் கொடுக்கவில்லை.
விக்கிரமசிங்கே சந்திப்பு
அதே நேரம் குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச கையாண்ட நடவடிக்கைகள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவருமான ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தெரிய வந்தது. அவர் உடனே கொழும்பில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்று முன்னால் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார்.
தேர்தல் முடிவுகள் விஷயத்தில் நீங்கள் ஏதாவது விபரீத முடிவுகளை எடுத்தால் அதில் வேறு பெரிய நாடுகள் தலையிட நேரிடும் என்று அவர் அறிவுறுத்தினார்.
வழி அனுப்பினார்
மேலும் ரணில் விக்கிரமசிங்கே முன்னால் ஜனாதிபதி ராஜபக்சயிடம், ‘புலிகளை அழித்தவர் என்ற நல்ல பெயர் சிங்களர் மத்தியில் உங்களுக்கு இருக்கிறது. அந்த நற்பெயரோடு போய்விடுங்கள். குழப்பம் விளைவித்தால் அது உங்களுக்கு சிங்களர்கள் மத்தியில் இருக்கும் புகழை கெடுத்துவிடும்’ என்றும் எடுத்துக் கூறி இருக்கிறார்.
இதன் பிறகே பிரச்சினை செய்யாமல் அமைதியாக வெளியேறுவதே நல்லது என்ற முடிவுக்கு முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச வந்தார் என்று கூறப்படுகிறது.
மேலும் உள்ளூர் விமான நிலையம் வரை விக்கிரமசிங்கே, முன்னால் ஜனாதிபதி ராஜபக்சவை பாதுகாப்பாக இறக்கிவிட்டதாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ஹம்பாந்தோட்டை மெகமுல்லனாவில் உள்ள தனது சொந்த வீட்டை சென்று அடைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழர்களே காரணம்
ஹம்பாந்தோட்டை சென்று இறங்கியபோது முன்னால் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டு இருந்தது. உள்ளூர் மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்து பாதுகாப்பாக அவருடைய வீடு வரை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்களில் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
அவர்களிடையே முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச பேசும்போது, “வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் எனக்கு எதிராக ஓட்டுப் போட்டதே தோல்விக்கு காரணம். தமிழர்களின் ஓட்டுகளால் கிடைத்த தோல்வியை என்னால் ஏற்க முடியாது. இதனை நான் ஒரு தோல்வியாகவே கருதவில்லை. எனவே இதற்காக நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியமும் இல்லை. சிங்களர்களை விட்டு அதிகாரம் இன்னும் சென்றுவிடவில்லை. எனது தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை” என்றார்.
கோத்தபய தப்பி ஓட்டமா?
தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்பது தெரிந்ததும், முன்னால் ஜனாதிபதி ராஜபக்சவின் இன்னொரு சகோதரரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்ச ராணுவ விமானம் மூலம் மாலத்தீவு நாட்டுக்கு தப்பியோடியதாக நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இதனை மாலத்தீவு அரசு மறுத்து உள்ளது.
இது பற்றி அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சகம் ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலில் இலங்கையின் முந்தைய அரசில் இருந்து சில முக்கிய தலைவர்கள் இங்கே தப்பி வந்துள்ளனர் என்ற தகவலை நாங்கள் மறுக்கிறோம் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கட்சிக்கு கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்குவதற்கான முயற்சியை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் வருவார்
அதே நேரம், ‘முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச மீண்டும் அரசியல் நீரோட்டத்துக்கு வருவார். அவர் வீட்டில் இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று ராஜபக்சேவுக்கு நெருக்கமானவரும் முன்னாள் மந்திரியுமான விமல் வீரவன்சா கொழும்பில் நிருபர்களிடம் கூறினார். Thinathanthi


0 Comments