ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகத்தில் சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றால், அவர்கள் பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இழப்பர் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. இது குறித்த 130 பக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் வாசித்து வருகின்றனர்.
சுமார் 18 மாத கால தொடர் விசாரணை அமர்வுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் பொதுத்தன்மையானது என்றும், சட்டத்திற்கு இணங்கியதே என்றும் கூறியுள்ளது.
மேலும், என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், சூதாட்டத்தில் ஈடுபட்டோர்களை சீனிவாசன் காப்பாற்ற முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கான நிரூபணம் இல்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் வாசித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
> பிப்ரவரி 2008-ல் விதிமுறை எண் 6.2.4 மீது திருத்தங்கள் கொண்டு வந்து பிசிசிஐ பதவி வகிப்பவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டின் வணிக நலன்களில் பங்கேற்க வழங்கியது ரத்து செய்யப்பட்டது.
> லாப நோக்கிலான முரண்பட்ட இரட்டை நலன்கள் விவகாரத்தில் சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் நற்ச்சான்றிதழ் அளிக்கவில்லை.
> பிசிசிஐ, அல்லது ஐபிஎல் இதில் ஏதாவது ஒன்றை சீனிவாசன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
> சீனிவாசன் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்படவில்லை.
> குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியிருக்கிறது. இவர்கள் இருவரும் அணியைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகளே.
> முத்கல் கமிட்டி தனது விசாரணையில் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தது. குந்த்ரா மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தது.
> முத்கல் கமிட்டியின் விசாரணையை அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை.
> பிசிசிஐ தலைவராகவும் ஐபிஎல் அணி உரிமையாளராகவும் இரட்டைப் பதவி வகித்ததன் மூலம் லாப நோக்கிலான இரட்டை நலன்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திவிட்டார் சீனிவாசன்.
> ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விசாரணையில் நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகளை பிசிசிஐ கடைபிடிக்கவில்லை.
> எந்த ஒரு பிசிசிஐ அதிகாரியும் வணிக நலன்களை வைத்துக் கொள்ள முடியாது.
> வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகத்தில் சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றால், அவர்கள் பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இழப்பர் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிசிசிசை வழக்கறிஞர் மற்றும் சீனிவாசனின் வழக்கறிஞர், தவிர, பிஹார் கிரிக்கெட் சங்க வழக்கறிஞர் வாதங்களை கேட்டனர்.
குறிப்பாக, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநராக இருக்கும் சீனிவாசன், பிசிசிஐ தலைவராகவும், ஐபிஎல். அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் செயல்பட்டதில் முரண்பட்ட இரட்டை நலன்கள் இருப்பதாக எழுப்பப்பட்ட ஆட்சேபத்தில் உச்ச நீதிமன்றம் சீனிவாசனின் இத்தகைய நலன்களை கண்டித்திருந்தது.
அதிலும் குறிப்பாக, 2008ஆம் ஆண்டு பிசிசிஐ தனது விதிமுறைகளைத் திருத்தும் போது பிசிசிஐ-யில் பதவி வகிப்பவர்கள் ஐபிஎல் வணிக நலன்களிலும் ஈடுபட வழிவகை செய்தமை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இதுகுறித்தும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.
சாம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்று ரத்து செய்யப்பட்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கு ரூ.13 கோடி அளிக்க ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்ததை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
"அந்தத் தொகையை சென்னை சூப்பர் கிங்ஸ் திருப்பி அளித்துவிட்டது என்பது முரண்பட்ட லாபநோக்கிலான இரட்டை நலன் உள்ளது என்பதை மறுதலிக்காது” என்று உச்ச நீதிமன்றம் கண்டித்தது கவனிக்கத்தக்கது.


0 Comments