தொகுதிவாரி தேர்தல் முறை தொடர்பில் பொது வேட்பாளரும் அவ்வப்போது ஒட்டிக்கொள்ளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பதில் சொல்ல வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற கருத்து பரிமாறலில் முஸ்லிம் அரசியல் தலைமைகளை விட பெரும்பானமையான முஸ்லிம் சமூகம் உணர்வுகளால் உந்தப்பட்டு முடிவுகளை எட்டியுல்லதாக அரசியல் விமசகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சமூக உணர்ச்சித் தளத்தில் ஏற்பட்ட அழுத்தங்களின் விளைவாகவும், தமது சுயநல அரசியல் இலாபங்களுக்காகவும் சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்திற்காகவே எல்லாம் என்று மக்களை ஏமாற்றிவிட முனைந்து கொண்டுள்ளமை யாவரும் அறிந்த ஒன்றே.
முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அராஜகங்கள் உணர்வுகளை சல்லடையாக்கி கொண்டிருந்த போது பகலில் ஊடக அறிக்கையும் இரவில் தேனிலவும் கொண்டாடிக்கொண்டு சமாளிப்புக்கேசன் செய்து கொண்டவர்கள், தமது மாற்றங்களின் போதும் அதே சமாளிப்புகேசன்.
இது இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்தின் உணா்ச்சி நிலை என்பது எதார்த்தமானதே. ஆனால் சமூகம்தான் உணர்ச்சி பரிதவிப்பில் இருக்கின்ற போது அதனை சட்டியிலிருந்து அடுப்பிற்குள் தள்ளிவிட எந்த ஒரு புத்திஜீவிகள் சமூகமோ, நேர்மையான அரசியல் தலைமைகளோ எத்தணிக்காது.
இன்று முஸ்லிம் சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள் அவ்வப்போது கிளர்ந்தெழுந்த போது பெரும் தொகையான (16) குரல்கள் ஒலித்தன. இதற்கு சந்தர்ப்பம் அளித்தது தற்போதைய விகிதாசார தேர்தல முறைமையேயாகும். ஆனால் இம்முறையில் சில மாற்றங்கள் இன்னும் ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.
ஆனால் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஓரளவூ பாதுகாப்பாக தற்பேதுள்ள விகிதாசார முறைமையினை நீக்கி தொகுதிவாரியான தேர்தல் முறையினை அறிமுகப்படுத்தவுள்ளதாக பொது வேட்பாளரது தேர்தல் விஞ்ஞாபனம் அறிவித்திருப்பது முஸ்லிம்கள் மீதான அரசியல் குரலை நசுக்குவதாக அமையும்.
ஏனெனில், நடைமுறைப்படுத்தவுள்ள தொகுதி முறை ஒற்றைப் பிரதிநிதித்துவ முறையாகவே அமைய வேண்டும் என்ற கோரிக்கையினை பொது வேட்பாளருடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ளது. கடந்த காலங்களில் தற்போதைய ஜனாதிபதியுடன் முரண்பட்ட விடயங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கையில் தொகுதிவாரி பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடந்த மே 26ம் திகதி ஜாதிக ஹெல உறுமய கருத்து வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய முஸ்லிம்கள் கூட இத்தகைய தொகுதிவாரி தேர்தல் முறைமையினால் தமது பாராளுமன்ற பிரதிநித்துவம் குறைக்கப்பட்டுள்ளதாக கூரி தேர்தல் முறை மாற்றம் குறித்து போராட்டங்களை நடாத்தி வருகின்றமை கவனித்தக்கது.
இலங்கையில் தொகுதிவாரி பிரதிநித்தித்துவம் அமுல்நடாத்தப்படுமாயின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்ட தொகுதிகளாக கருதும் கொழும்பு, மூதூர், புத்தளம், சம்மாந்துறை ஆகிய தொகுதிகளிலேயே முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதற்கு வாய்ப்பாக அமையும். ஏனைய கல்முனை, பொத்துவில் தொகுதிகளில் கூட தற்போது ஏற்பட்டுள்ள செயற்கையான சனத்தொகை பரம்பலின் மாற்றங்கள் முஸ்லிம் பெரும்பான்மையை கேள்விக்குறியாக்கி விட்டுள்ளது. எனவே, தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 16 முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு பதிலாக நான்கு பிரதிநிதிகளே பிரதிநிதித்துவப்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை காணப்படும்.
கேள்விக்குறியாகும் கல்குடா பிரதேசம்
குறிப்பாக முஸ்லிம்கள் இரண்டாம் பெரும்பான்மையாக கொண்ட மடக்களப்பு மாவட்டம் பெரிதும் இதனால் பாதிப்படையூம். குறிப்பாக கல்குடா மக்கள் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவெ அதிகார பயங்கரவாதத்தில் சிக்கியுள்ள முஸ்லிம் சமூகம் தமது வளங்களை மாத்திரம் அல்லாமல் அபிவிருத்தி நிலையிலும் புறக்கநிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, இனவாதம் பேசி அரசியல் மேற்கொள்ளும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இம்முறை மூலம் முஸ்லிம் சமூகத்தினை தமது அரசியல் சுயலாபங்களுக்காக அடக்கியாள வாய்ப்பாக அமையும்.
இத்தகைய பேராபத்திற்கு மத்தியில் தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறை கலந்த கலப்பு தேர்தல் முறை ஒன்றே சிறுபான்மைக்கு காப்பீடாகவும் குறிப்பாக முஸ்லிம்களுக்கான காப்பீடாக அமையும். அதனைவிடுத்து கிடைத்ததை சுருட்டிக்கொண்டு கூடுவிட்டு கூடு பாயும் அரசியல் தலைமைகளும், உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு குறுகிய தீர்வுகளுக்காக நீண்ட தூர காப்பீடுகளையும் உரிமைகளையும் பற்றி ஆராய்ந்து கொள்ளாத அப்பாவி முஸ்லிம்களதும் நிலைப்பாடுகளை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் ஜனநாயக உரிமைகளை காவு கொள்கின்ற விடயங்களை கண்மூடித்தனமாக ஆதரிக்க முடியாது. இது விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டினை பொது வேட்பாளர் விரைவில் தெளிவுபடுத்த வேண்டும். அத்தோடு, பொது அணியுடன் கூட்டிணைந்துள்ள முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளும் எழுத்துருவில் உறுதிப்படுத்தியாக வேண்டும். உரிய விடயம் தெளிவுபடுத்தப்படாமல் விடுமாயின் சமூகத்தலத்திலிருந்து தெளிவான போராட்டத்தினை வரும் நாட்களில் முன்வைக்க வேண்டி வரும்.
ஆக்கம் - ஜுனைட் நளீமி


0 Comments