Subscribe Us

header ads

மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக செயற்பட, எமது மனச்சாட்சி இடம்கொடுக்கவில்லை - மெளலவி முபாறக்


முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக் கூடிய சாணக்கியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மட்டுமே உண்டு. எதிர்காலத்தில் அபிவிருத்தி, சுபீட்சம் மிக்க சிறந்த ஆசியாவின் அதிசயத்தை காண வேண்டும் என்றால் தமிழ் பேசும் சமூகங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவளிக்க வேண்டும் என்று முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவிக்கின்றார்.

கேள்வி: அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்த உலமாக கட்சி இடையில் அரசுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகி மீண்டும் அரசுக்கு ஆதரவளிப்பதன் காரணம் என்ன?

பதில்: 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சி அந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் 2010 தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவளித்தது. ஆனால் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற தம்புள்ள பள்ளிவாயல் அசம்பாவிதம் காரணமாக அரசுடன் முரண்பட்டு நாம் விலக வேண்டி வந்தது. அதன் போது அரசை விட்டு விலகிய ஒரேயொரு முஸ்லிம் கட்சி நாம் மட்டுமேயாகும்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் வந்ததன் காரணமாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த, எமது கட்சியும் ஆதரித்து ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக செயற்படுவதற்கு எமது மனச்சாட்சி இடம்கொடுக்காததன் காரணமாக மீண்டும் அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்தோம்.

கேள்வி: எதிரணி வேட்பாளர் பற்றிய தங்கள் கருத்து?

பதில்: எதிரணி வேட்பாளர் இந்த அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தவர். முஸ்லிம்களுக்கெதிராக பொதுபல சேனா செயற்பட்ட போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் சிறிதளவேனும் குரல் கொடுக்கவில்லை. காரணம் அவர் பேரினவாதிகளுக்கு அச்சப்பட்ட ஒருவர். இத்தகைய ஒருவரை முஸ்லிம்கள் நம்ப முடியாது. ஏனெனில் சிலவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அப்போதும் முஸ்லிம்களுக்கெதிராக அநியாயம் நடக்குமாயின் இவர் பேரினவாதத்துக்கு பயந்து அவர்களுக்கு ஆதரவாகவே இருப்பார். மேலும் அவரோடு உள்ள கூட்டுக்களின் பின்புலங்கள் மிகவும் ஆபத்தானவையாக எமக்குத் தெரிகின்றன.

கேள்வி: எதிரணி வேட்பாளருடன் இணைந்துள்ள கட்சிகள் பற்றி என்ன சொல்கிரீர்கள்?

பதில்: எதிரணியில் உள்ள கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே பெரிய கட்சியாகும். ஆனாலும் இக்கட்சிக்கு இன்னமும் இந்த நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களையும் எவ்வாறு இணைத்து அரசியல் செய்வது என்று தெரியாது. இந்த நாட்டின் இன்றைய நிலையின் படி தனிக்கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது. கட்சிகள் இணைந்த கூட்டமைப்பின் மூலமே ஆட்சியை கைப்பற்ற முடியும் இந்த யதார்த்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி மறந்து தாங்கள் யாருடனும் கூட்டுச்சேரப் போவதில்லை என சில வருடங்களுக்கு முன் மார் தட்டினார்கள். பின்னர் எதிர்க்கட்சிகள் சில ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்த போதுதான் ஐ.தே.கவுக்கு ஞானம் வந்து அக்கூட்டணியுடன் இணைந்து கொண்டனர். இப்போதும் கூட இந்த ஜனாதிபதி தேர்தலில் உள்ள எதிரணி என்பது ஐ.தே.க தலைமையிலான கூட்டணி அல்ல. தலைமைத்துவ கட்சியொன்று இல்லாத ஒரு குழப்படியான கூட்டாகும். அத்துடன் எதிரணி வேட்பாளருடன் இணைந்துள்ள கட்சிகள் மைத்திரியுடனும் சந்திரிக்காவுடனுமே ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். இது ஐ.தே.கவின் இயலாமையையும் கையாலாகா தனத்தையும் காட்டுகிறது.

உண்மையில் ஐ.தே.கவுக்கு அரசியல் யதார்த்தம் தெரிந்திருக்குமாயின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் தனது தலைமையில் ஒன்றிணைத்து மைத்திரியை யானைச்சின்னத்தில் போட்டியிட செய்திருக்க வேண்டும். அல்லது ஐ.தே.க தலைமையிலான கூட்டணிக்கென தனிப்பெயரை அமைத்து அதற்கென தனியான சின்னம் ஒன்றை உருவாக்கி அதில் போட்டியிட வைத்திருக்க வேண்டும். உதாரணமாக சுதந்திரக் கட்சி தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைந்து பொது முன்னணி என்ற பெயரை வைத்து அதன் சின்னமாக கதிரையை அறிவித்து அந்த சின்னத்திலேயே சந்திரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அதன் பின் இன்னும் சில கட்சிகள் சுதந்திர கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரில் கட்சியை பதிவு செய்து அதன் சின்னமாக வெற்றிலையை அறிவித்து அதில் வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிட செய்தனர். அக்கட்சியின் தோழமை கட்சியாக உலமா கட்சியும் உள்ளது. அவற்றையெல்லாம் தேர்தல் அறிவிக்கப்பட முன்பாகவே ஐ.தே.க செய்திருக்க வேண்டும். சும்மா தூங்கிக் கொண்டிருந்து விட்டு திடீரென விழித்துக்கொண்டு எதையாவது செய்ய வேண்டும் என்ற அரை குறை அவியல்தான் எதிரணி வேட்பாளரும் இந்த கூட்டு கட்சிகளுமாகும்.

இதன் எதிரொலியாக ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதுடன் சுடுகுது மடியப்பிடி என்பது போல் எந்தக்கட்சியில் எதிரணி வேட்பாளரை நிறுத்துவது என்று புரியாமல் ஒரு கட்சியை வாடகைக்கு எடுத்து அதில் போட்டியிட வைத்துள்ளார்கள். இதன் மூலம் ஐ.தே.கவுக்கு முன்கூட்டியே செயற்படும் அரசியல் தெளிவு இல்லை என்பது தெளிவாகிறது.

அதேபோல் எதிரணியுடன் இணைந்துள்ள ஜாதிக்க ஹெல உறுமய கட்சி முஸ்லிம்களை பொறுத்த வரை மிகவும் ஆபத்தான கட்சியாகும். இந்த நாட்டு முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றும் கிழக்கில் ஜிஹாத் உள்ளது என்றெல்லாம் பொய்யான இனவாதத்தை சிங்கள மக்களிடையே விதைத்தது இந்தக் கட்சிதான். அத்துடன் இவர்களுடன் இணைந்துள்ள மனோ கணேசன், அசாத் சாலி என்பன தேசிய ரீதியில் செல்வாக்கில்லாதவர்கள் என்பதுடன் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டுக ளுக்குள்ளானவர்கள். அதேபோல் மைத்திரியுடன் இணைந்துள்ள இன்னும் சில முஸ்லிம் தமிழ் அமைப்புக்கள் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பிறந்தவை. கட்சிகள் தொகையை கூட்டிக்காட்ட இவைகளோடு மைத்திரி ஒப்பந்தம் செய்துள் ளார். ஆக, எதிரணியுடன் இணைந்துள்ள கட்சிகள் நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரும் ஆபத்தானவையாகவே எமக்குத் தெரிகின்றன.

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் பற்றி?

பதில்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி என்பது சில விடயங்களை தவிர்த்துப் பார்த்தால் இந்த நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. யாராலுமே யுத்தத்தை ஒழிக்க முடியாது என்பதனால் தமது வாழ்வு சூன்யமானதை எண்ணி முஸ்லிம் சமூகம் விரக்தியுற்றிருந்த போதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக சிங்களவர்களை விட அதிகம் சந்தோசப்பட்டது முஸ்லிம் சமூகம் தான். காரணம் முஸ்லிம் பொதுமக்கள் தான் புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த நாட்டில் எந்தவொரு சமூகமும் உடுத்த உடையுடன் தமது பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்ட வரலாறு இல்லை. ஆனால் இதை வடபுல முஸ்லிம் சமூகம் கண்டது. இதேபோல் பலதை சொல்லலாம்.

கேள்வி: பொதுபல சேனா இருக்கும் அரசுடன் இருப்பது சரியா என உலமா கட்சியைப் பார்த்து கேள்விக்கணைகள் வருவது பற்றி?

பதில்: எம்மை பொறுத்த வரை பொதுபல சேனா ஒரு குட்டிச்சாத்தான் என்றால் ஹெல உறுமய தாய்ச்சாத்தானாகும். அப்படியானால் அந்த பெரிய சாத்தானுடன் இருக்கும் மைத்திரியுடன் நீங்கள் இருக்கமாலா? என கேட்கிறோம். உண்மையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் சமூக உணர்வுடன் செயற்பட்டிருந்தால் சேனாவை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும். அத்தகைய சூழ்நிலையை கட்டுப்படுத்தாமைக்கு முஸ்லிம் கட்சிகளே முதல் பொறுப்புதாரி என்பதே எமது கருத்து.

கேள்வி: பள்ளிவாயல் தாக்குதலுக்கு காரணமான அரச வேட்பாளருக்கு ஆதரவளிக்கலாமா?

பதில்: கடந்த சில வருடங்களில் முஸ்லிம் சமூகம் துன்பப்பட்டது உண்மைதான். ஆனால் யுத்த காலத்துடன் ஒப்பிடும் போது இது பயங்கரமானதல்ல என்றுதான் கூற வேண்டும். அத்துடன் எதிரணியில் உள்ளவரும் ஜாதிக்க ஹெல உறுமயவும் பள்ளிவாயல் உடைப்புக்கு துணை போனவர்தான்.

அதே போல் மாவனல்ல கலவரத்துக்கு துணைபோனவர்தான் சந்திரிக்கா குமாரதுங்க. தீகவாபியில் உள்ள முஸ்லிம்களின் காணிகளை அமைச்சர் அஷ்ரப் வழங்க தயாரான போது பேரினவாதிகளுக்குப் பயந்து அதனை தடுத்து நிறுத்தியவர் சந்திரிகாவாகும்.

ஆக, யாரின் கைகளும் இங்கு சுத்தமில்லை. ஆனாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் நலவுகளும் கெடுதிகளும் நமக்குத் தெரியும். ஏனையவர்களின் ஆட்சிக்காலத்தை விட ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் பல பாரிய நலன்கள் நாட்டுக்கும் நமது சமூகத்துக்கும் நடந்துள்ளன. அரசியலில் நூறு வீத உத்தரவாதத்தில் யாரையும் காண முடியாது. ஆனால் அனைத்து அரசியல்வாதிகளையும் விட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயரிய குணங்கள் கொண்டவர் என்பதை மறுக்க முடியாது. அவர் சொன்னதை செய்பவர். இதன் காரணமாகத்தான் 2005ம் ஆண்டு நாம் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த போது செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உள்ள பயங்கரவாதத்தை ஒழித்தல், மெளலவி ஆசிரியர் நியமனத்தை வழங்கல் என்பவற்றை நிறைவேற்றினார்.

Post a Comment

0 Comments