"முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானதொன்று. எனவே சமூகத்தின் பாதுகாப்பு அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகம் வாக்குப் பலத்தை பிரயோகிக்க வேண்டும்" என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"பயங்கரவாதிகளால் முஸ்லிம்களுக்கிருந்த அச்சம் துயரங்களை நீக்கி வடக்கு முஸ்லிம்கள் சொந்த இடங்களில் குடியேற வழியேற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. ஆசிரியர் சேவையில் அதிகளவான முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அபிவிருத்தியில் முஸ்லிம் பிரதேசங்களுக்கு அதிகளவான நிதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒதுக்கியுள்ளார்.
எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது கடந்த கால ஜனாதிபதிகள் செய்ததைவிடவும் அதிகளவான நன்மைகள் அபிவிருத்திகள் சலுகைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு செய்துள்ளார் என்பதே உண்மை. இந்த வரலாற்று நியாயங்களின் அடிப்படையில் மீண்டும் முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டுமென்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா வலியுறுத்தியுள்ளார்.
இனக்கலவரங்களின் சூத்திரதாரி மஹிந்தவா?
1990 ஆம் ஆண்டுகளில் முஸ்லிம் ஆசிரியர்களின் தொகை குறைப்புடன் முஸ்லிம் கல்வி நிலையும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் கணிசமான அளவு முஸ்லிம் ஆசிரியர்களை அரச சேவையில் சேர்த்து முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலையை மேம்படச் செய்துள்ளார்.
கொடூரமான யுத்தத்தில் இருந்து நாட் டை மீட்டு மீண்டும் மக்களை தமது சாதாரண வாழ்க்கைக்கு வழி அமைத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. அது மட்டுமன்றி முஸ்லிம்களின் மீள்குடி யேற்றத்தில் அக்கறையுடன் சேவையாற் றியவர். ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு நேரிய தலைமைத்துவம் வேண்டும். அந்த ஆணையை வழங்கும் தேர்தலாக இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தலை நான் கருதுகின்றேன்.
இன்ஷா அல்லாஹ் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குப் பலத்துடன் இம்முறையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவாவார் என்பது திண்ணம். இவ் வெற்றியில் முஸ்லிம் மக்களின் பங்கு அதிமுக்கியமானது. எனவே முஸ்லிம் மக்களாகிய எமது மக்கள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றியீட்டுவதில் முன்னோடியாக விளங்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.
காலத்திற்குக் காலம் இலங்கையில் இனக் கலவரங்கள் வரலாற்றில் ஏற்பட்டுத்தான் இருக்கின்றது. அவ்வாறான இனக்கலவரங்கள் யாவற்றிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காரணமாக இருந்தார் என கூற முடியுமா? 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவரம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றதா? இல்லையே.
முஸ்லிம் விரோத கருத்துடைய குழுக்கள் அன்றுதொட்டு இன்றுவரை நாட்டில் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் அவை தலைவிரித்து ஆடமுடியாத அளவில் வடக்கு கிழக்கு தீவிரவாதம் முழு நாட்டையும் ஆட்டிப்படைத்தது. அது முடிவடைந்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கியது. இதன் பின்புலம் நிச்சயமாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அல்ல என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
சமாதானத்துடன் திகழும் இந்த தேசத்தில் என்றும் சமாதானத்துடன் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் அதற்கான சூழலை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே உருவாக்க முடியும் என நான் நம்புகின்றேன் எனவே இம்முறையும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களை பலப்படுத்த வாக்களிப்போம் என வேண்டுகின்றேன்" என்றார்.


0 Comments