Subscribe Us

header ads

அரசுக்கு ஜால்ரா அடித்தவர்களே..!

-துறையூர் அப்துல் பாஸித்-

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது, வேட்பாளர்கள் யார் என்பது தெரிவிக்கப்பட முன்னரே வாக்களிப்பது யாருக்கு என்ற முடிவை எடுத்த ஒரே சமூகம் எம் முஸ்லிம் சமூகம்.

இன்றுள்ள அரசாங்கத்தின் அராஜகத்தன்மை காரணமாக எம் சமூகம் மிக ஒற்றுமையாக இந்த முடிவை எடுத்திருந்தது, இதனை மிக தெளிவாக அரசும் அரசோடு ஒட்டி இருந்த முஸ்லிம் பெயர் தாங்கி தலைமைகளும் நன்கறியும்.

இதன் விளைவாகத்தான் மிகசாமர்த்தியமாக எம் தலைமைகள் அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது.

அதன் ஒரு நகர்வுதான் கிழக்கு மாகான தேர்தலின் போது ஒரு மொத்த வியாபாரி தனித்துக்கேட்டு வாக்குகளை சூறையாடி அரசுக்கு தாரைவார்த்து கொடுத்த நிகழ்வு.

இதேபோல் இரு வியாபாரிகள் சேர்ந்து அமைத்த கூட்டு  வியாபார முயற்சி ஊவா தேர்தலில் மண் கவ்வியதை அடுத்து இந்த வியாபாரிகள் தங்களது வியாபார தந்திரோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வந்தது

இந்த தேர்தல் சந்தை மேலுள்ள வியாபாரிகளுக்கு உரிய களம்  இல்லையன்ற பொழுதிலும் இந்த சந்தையில் அவர்களின் கதாபாத்திரம்தான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் சந்தையில் அவர்களின் இலாபத்தினை பெறுவதற்கான மூலதனம் என்பதை இவர்கள் நன்கறிவர்.

எனவே மக்கள் எடுத்த முடிவோடு இவர்கள் உடன்படுவார்கள் என்பது எம்மால் எதிர்வு  கூறப்பட்ட ஒரு விடயம்தான். ஆனால் அந்த முடிவை அறிவிக்கும் தருணம் எது?,எவ்வாறு? என்பதுதான் இவர்களது நாடகத்தில் இருந்த கிளைமேக்ஸ்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நான்கு வருடங்களையும் தாண்டி இந்த அரசில் அங்கம் வகித்த இவர்கள் வெறும் நான்கு நாட்களிட்ட்குள் கரையோர மாவட்டம் கோரியதில் சினிமா கலஜர்களையும் மிஞ்சி விடுகின்றனர்.

இதில் நாம் மிக கவலைப்படுவது என்னவென்றால் இந்த வியாபாரிகளது சுயநல தந்திரத்தால், நாம் பெரிதும் ஆவலோடு  எதிர்பார்த்து காத்திருக்கும் நல்லாட்சி, எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சம் தான்.

அன்று அரசில் அங்கம் வகிப்பதன் மூலமும், தேர்தல்களில் வெளியேறி மீண்டும் உட்செல்வது மூலமும் அரசுக்கு உதவிய இவர்கள் இன்று எதிரணிக்கு ஆதரவளிப்பதன் மூலம் அரசுக்கு ஒரு பாரிய உதவியை மீண்டு செய்துள்ளார்களா?  என்பதுதான் எம் அச்சமாய் இருக்கிறது.

அதற்கான நியாயம் இதுதான், இன்று சுசில் பிரேம் ஜயந்த, விமல் வீரவன்ச, போதுபலசென ஏன் ஜனாதிபதி கூட தெரிவித்திருக்கும் கருத்து.

விடுதலைப்புலிகள், தமிழ் தேசியா கூட்டமைப்பு போன்றவை எம்மிடம் கோரியதை  போன்றே முஸ்லிம் தலைமைகளும் எம்மிடம் தனி மாவட்டம் கோருகிறது, ஆனால் நாம் நாட்டை பிரிக்க இடமளிக்க போவதில்லை என மறுத்து விட்டோம் அனால் பொது வேட்பாளர் அதற்கு இணங்கியதன் விளைவாகத்தான் இன்று இவர்கள் எதிரணிக்கு சென்றுள்ளனர் என்பதுதான் இன்று அரசு செய்யும் பிரச்சாரம்.

இந்த பிரச்சாரம் இவ்வாறு செய்யப்பட களம் அமைத்தது எம் தலைமைகள் வகுத்த வியூகம் தான். சேதாரம் எதுவுமில்லாமல் கட்சியை காப்பாற்றி விட்டார்களாம். உண்மைதான் ஆனால் கட்சியை காப்பாற்றிய வியூகத்தால் நல்லாட்சியை இழந்து விடுவோமா என்ற நியாயமான அச்சம் இன்று தோற்றுவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு கடந்தகால சான்றும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கிறது, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகா இற்கு கணிசமான சிங்கள வாக்குகள் கிடைக்க இருந்த சமயத்தில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களது ஆதரவை அவருக்கு அறிவித்தது. இந்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்திய சிங்கள இனவாத சக்திகள் சிங்கள மக்களை திசை திருப்பியது, பொன்சேகா வந்தால் நாட்டை துண்டாடி விடுவார் என பிரச்சாரம் செய்தது இதன் விளைவு கிடைக்க இருந்த சிங்கள வாக்குகள் திசைமாறியது. எனவேதான் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அறிவிப்பும் விடுக்காமல் தாமதம் காட்டுகின்றது என்று கூற முடியும்.

இது இப்படி இருக்க எமது தலைமைகள் எந்த பம்மாத்தும் இல்லாமல் எம்மோடு வந்து சேர்ந்து இருந்தால் எமக்கு ஒரு பிரச்சினையும் இருந்து இருக்காது, அனால் இவர்களோ கரையோர மாவட்ட கோரிக்கையை ஒரு பெரிய பூதமாய் ஆக்கி கிடைக்க மாட்டாது என்று தெரிந்தும் அரசியல் இலாபத்திற்காக அதை ஊரெல்லாம் கொக்கரித்து காட்டி ஈற்றில் இந்தப்பக்கம் வந்தால், யார்தான் சொல்ல மாட்டார்கள் மேலுள்ளவாறு ஒரு பொய் பிரசாரத்தை?

அன்பார்ந்த முஸ்லிம் தலைமைகளே,

உண்மையில் நீங்கள் சமூகத்திற்கு நலவு செய்ய நினைத்திருந்தால் இறுதிவரை அரசுக்கு ஜால்ரா அடிப்பவர்களாகவே இருந்து இருக்க வேண்டும். இவ்வளவு காலமும் அரசுக்கு ஜால்ரா அடிப்பதன் மூலம் உங்களது தேவைகளை நிறைவு செய்த நீங்கள் இந்த ஒரு முறை ஜால்ரா அடிப்பதன் மூலம் சமூகத்திற்கு நல்லது செய்திருக்க வேண்டும். அதுதான் “நீங்கள் செய்ததாக நீங்களே கூறிக்கொள்ளும் ஒரு வரலாற்று துரோகத்திற்கு பரிகாரமாய் அமைந்திருக்கும்.” அது எவ்வாறு என்று கூறுகிறேன்.

நீங்கள் தொடந்து இருக்கும் பட்சத்தில் மேலே குறிப்பிடப்பட்ட இனவாத பிரசாரத்தை அரச இனவாதிகளால் சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்க முடியாமல் போய் இருக்கும், எனவே நாம் அச்சப்படுகின்ற சூழல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்காமல் இருந்திருக்கும்.

நீங்கள் தொடர்ந்து அரசுக்கு ஆதரவளித்த போதிலும் எம் சமூகம் ஒட்டு மொத்தமாய் எதிரணிக்கு வாக்களித்திருக்கும், இதன் மூலம் அரசுக்கும், சர்வதேசத்துக்கும் நீங்கள் ஒரு விடயத்தை தெளிவு படுத்தி இருக்க முடியும், அதாவது "என்னதான் பதவிகளும் பணங்களும் எமக்கு நீங்கள் தருகின்ற போதிலும், என்னதான் நாங்கள் உங்களுக்காக வாக்கு கேட்டு செல்கின்ற போதிலும், மக்கள் மனதை வெற்றி கொள்ளாத வரை அவர்களது வாக்குகளை உங்களால் பெற முடியாது" என்ற உண்மையை உணர்த்தி இருக்க முடியும்.

ஒரு வேளை நாம் எதிரணிக்கு வாக்களித்தும் இந்த அரசுதான் மீண்டும்  ஆட்சிக்கு வந்தால் நீங்கள் அரசின் அமைச்சர்களாய் இருந்து கொண்டு எம் சமூகத்துக்கு எதிரான  ஆபத்துக்களை  ஓரளவுக்கேனும் தடுக்க  முயற்சியாவது எடுத்திருக்க முடியும்.

ஆனால் நீங்களோ எதிர்வரும் பாரளமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை இன்று அமைத்துக்கொண்டீர்கள்.

அன்று கட்சியை காப்பாற்றுவதட்காக அரசில் இணைவதன் மூலம் சம்மூகத்துரோகம், அரசிட்கு உதவி செய்தீர்கள், இன்றும் கட்சியை காப்பாற்றுவதட்காக அரசிலிருந்து வெளியேறி ........, அரசிற்கு உதவி செய்திருக்கின்றீர்கள்.

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக்கொள்கின்றேன்.

நீங்கள் கேட்கலாம் நாங்கள் மட்டும் தான துரோகிகள் என்று? உண்மையில் அவ்வாறு இல்லை, முஸ்லிம் பெயரோடு எத்தனையோ தலமைகள் இன்று உள்ளனர், ஆனால் நாம் எல்லோரையும் விமர்சனம் செய்யவில்லை ஏனென்றால் எமது பார்வையில் அநேகமானவர்கள் கல்லுக்கு ஒப்பானவர்கள். சொரணை முற்றாக இல்லாதவர்கள். ஆனால் உங்களுக்காவது சொரணை என்பது  எங்காவது ஒரு மூலையிலேனும் இனுந்துவிடாதா ? என்ற ஒரு சிறிய ஆதங்கம் இன்னும் எங்களுக்கு இருக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் இன்ஷா அல்லா. இன்றைய ஜனாதிபதிதேர்தலில் விழித்துக்கொண்ட எம் சமூகம் இனி வரும் எந்த தேர்தல்களிலும் முட்டாள்களாகாது என்பதை சந்தோஷத்துடன் கூறி வெய்க்க விரும்புகின்றேன்.

Post a Comment

0 Comments