அரசாங்காத்தை பலப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லையென்று தகவல் மற்றும்ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்;
நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க முடியாத அளவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி வங்குரோத்து நிலை அடைந்துவிட்டது.
அமரர் டி.எஸ்.சேனநாயக்க அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சியையும், கட்சி அங்கத்தவர்களையும் நடுரோட்டில் தள்ளிவிட்டுள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலின் பின்னர் வெற்றியின் பயணம் ஆரம்பமாகியுள்ளது என்று தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ஜனாதிபதித் தேர்தலில் தமது உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்து கொள்ள முடியாது திண்டாடி வருகின்றது.
இதனால் கட்சி அங்கத்தவர்களும், ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் ஏமாற்றமடைந்துள்ளதுடன் பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரை பிரதமராக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கத்தவர்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாதிருந்த ஐக்கிய தேசியக்கட்சி நான்கு வருடங்களின் பின்னரும் அதே நிலைமையில் இருந்து எதிர்க்கட்சியினர் போட்டியிடும் அளவுக்கு அரசியல் ஒரு விளையாட்டுப் பொருள் அல்ல என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments