இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐவர் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் 25 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் நேபாள தலைநகர் காட்மண்டுவில் சார்க் உச்சி நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மகாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள நிலையில் இருவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இந்தியப் பிரதமர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்துவார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் 5 பேர் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இதனை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க மத்திய அரச தூதரக மட்டத்தில் பேச்சு நடத்தி வருகின்ற நிலையில், கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
இதனையடுத்து, விரைவில் இந்தியா சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/JAH

0 Comments