கொழும்பில் நடைபெறும் ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு 13 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களை அழைக்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு வராத மாணவர்களுக்கு மஹாபொல புலமைப் பரிசில் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மூன்று மாதத்திற்கான புலமைப் பரிசில் கொடுப்பனவும் ஒரே நேரத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசில் இரத்துச் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறும் இந்த நிகழ்வில் வெள்ளை ஆடை அணிந்து கலந்து கொள்ளுமாறும் செல்போன்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருவதால், 2 ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கோரி நிர்வாகத்திற்கு சார்பான மாணவர்கள் மூலம் மகஜர் ஒன்றும் கையெழுத்திடப்பட்டு வருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக,
தமது ஆட்சிக்கு சவால் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மஹாபொல புலமைப் பரிசிலையும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கம் பணயமாக எடுத்துள்ளது. மஹாபொல புலமைப் பரிசில் வழங்கும் போர்வையில் தேர்தல் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
மக்களுக்குரியவற்றை பணயமாக வைத்து வாக்கு கேட்கும் அளவுக்கு அரசாங்கம் கீழ்த்தரமான நிலைமைக்குள் விழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

0 Comments