மைத்திரிபால சிறிசேனவின் கீழ் தூய்மையான அரசாங்கத்தினை அமைக்கும் சரியான தருணம் இது. இதை தவற விடுவது மக்கள் விடும் வரலாற்றுத் தவறாகி விடும் என தெரிவிக்கும் அதுரலியே ரத்ன தேரர் சரியான பாதையில் நாட்டை வழிநடத்த அனைவரையும் ஓரணிக்கு கொண்டு வருவோம் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது எதிரணியின் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அரசாங்கத்தின் அபிவிருத்திகளையும் பாதுகாப்பையும் நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் ஆட்சி முறைமையினையே தாம் விமர்சிக்கின்றனர். நாட்டையும் தமது அரசாங்கத்தையும் பற்றியே கவனிக்கும் ஜனாதிபதி மக்கள் பற்றி சிந்திக்காமையும் தனது சர்வாதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்வதற்காக மிகவும் மோசமான ஆட்சியினை கொண்டு நடத்துவதுமே இன்று அனைவருக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போராட்டமே இன்று இடம்பெறுகின்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ வெல்லுவாரா அல்லது மைத்திரிபால வெற்றி பெறுவாரா என்பதை விடவும் ஜனநாயகம் வெற்றி பெறப் போகின்றதா அல்லது சர்வாதிகாரம் வெற்றி பெறப் போகின்றதா என்பதே அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, நாட்டில் அமைதியினையும் ஜனநாயகத்தினையும் வென்றெடுக்கவும் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் ஓர் தூய்மையான ஆட்சியினை அமைக்கவும் சரியானதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை அனைத்து மக்களும் சரியாக பயன்படுத்த வேண்டும். இந்த சந்தர்ப்பத்தினை மக்கள் தவறவிடுவது இனியொருபோதும் நிவர்த்தி செய்ய முடியாத வரலாற்று தவறினை மக்கள் விட்டு விடுவார்கள் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
சாதாரணதொரு சட்ட மூலம் நாட்டிற்கு எதிரானது என உணர்ந்தபோது அதனை தடுக்க பாராளுமன்றில் சகல கட்சியினரும் பேதமின்றி ஒன்றிணைந்து வாக்களித்த போதும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என பாகுபாடு பார்க்காது அனைவரும் கைகோர்த்தது போல் இந்த நாட்டினை ஒன்றிணைத்து இந்த நாட்டில் புதிய யுகமொன்றை படைக்க நாம் அனைவரையும் ஒன்றிணைப்போம் எனவும் குறிப்பிட்டார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments