ஐக்கிய தேசிய கட்சியினுடைய தலைவர் தனது மானம்
காப்பாரா..? கட்சி மானம் காப்பாரா..? இரண்டு மானத்தையும் காப்பாரா..?
யார் பொது வேட்பாளர்..?? யார் பொது
வேட்பாளர்..?? என்ற கதையே இலங்கையின் சந்து பொந்து மூலை முடுக்கெல்லாம் அடிபட்டுக்
கொண்டிருக்கிறது.இத் தேர்தலில் பலமிக்க அரசினை வீழ்த்த பலரும் கோடாரிகளோடு
கிளம்பியுள்ள போதும் ஐ.தே.க யே இருக்கும் கட்சிகளில் மிகப் பெரிய கட்சி என்பதனை
யாரும் மறுப்பதற்கு இல்லை.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையினை முதன் முதல்
ஆண்ட கட்சி என்ற வரலாற்றினை ஐ.தே.க தன்னகத்தே கொண்டுள்ள போதும் விரைவில்
நடாத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுக்
கூட்டமைப்பு அமைத்து பொது வேட்பாளர் மூலம் அரசினை வீழ்த்த முயற்சிப்பதன் மூலமே
ஐ.தே.க இனுடைய தற்போதைய போக்கின்
ஆரோக்கியமற்ற தன்மையினை யூகித்துக் கொள்ளலாம்.இவ்வாறு அமைந்துள்ள பொதுக்
கூட்டணயில் ஐ.தே.க ஏனைய அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்த பலத்தை விடவும் மிகைத்த
பலத்தை தன்னகத்தே கொண்டுள்ள போது ஐ.தே.க இற்கு வெளியே பொது வேட்பாளரைத் தேடுவது
ஏற்புடையதல்ல.அவ்வாறு தேடுவது ஐ.தே.க இனது தன் மானத்தை சீண்டிப் பார்ப்பது போன்றே
அமையும்.
அதே கனம்,பொதுக் கூட்டணியில் உள்ள பலரும் ஐ.தே.க
இனுடைய தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை விரும்பாததால் பொதுக் கூட்டமைப்பு
சாத்தியமாக ஐ.தே.க இல் உள்ள ஒருவர் நியமிக்கப் படுவதே ஐ.தே.க தான் இதுவரை காலமும்
பேணி வந்த தனது மானத்தை பேணிக் கொள்ள பொருத்தமானதாகும்.
தலைவரை எழுப்பாது அக் கட்சியில் உள்ள
இன்னுமொருவரை எழுப்புவது தலைவரின் ஆளுமைகளை நகைப்புள்ளாக்கும் அதே வேளை கட்சியில்
உள்ள ஒருவரை களமிறக்காது போனால் ஐ.தே.க கட்சி இனது பலம் மக்களிடையே கேள்விக்குறியாகும்.சென்ற
முறையும் ஐ.தே.க,ஜே.வி.பி ஆகியன இணைந்து அரசியல் முகவரி இன்றி இருந்த சரத் பொன்சேகாவை களமிறக்கி தாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ முன் மக்களிடம்
செல்லாக் காசாய் மாறிக்கொண்டிருப்பதை இரு கட்சிகளுமே மக்களிடம் காட்டியமை
குறிப்பிடத்தக்கது.ஜே.வி.பி இற்கு எவ்வாறோ இது ஐ.தே.க கட்சிற்கு இற்கு பலத்த
அவமானமே.
இவ்வாறான செயற்பாடுகள் தங்களால் ஜனாதிபதியை
வீழ்த்த இயலாது,ஜனாதியை வீழ்த்த தங்களுக்கு பலரின் உதவிகள் தேவை. நாய் வால்
பிடித்தாவது ஜனாதிபதியை வீழ்த்த வேண்டும் என ஐ.தே.க தன்னைத் தானே தாழ்த்திக்
கொள்வது மாத்திரமின்றி தற்போதைய ஜனாதிபதியின் பலத்தை மக்களிடையே மிகைப் படுத்திக்
காட்டுவது போன்று அமைகிறது.
இவ் இரண்டு அவமானங்களையும் ஐ.தே.க பெறாது சாமர்த்தியமாய் கையாள வேண்டுமாக இருந்தால்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை பொது வேட்பாளராக களமிறக்குவதே
பொருத்தமானதாகும்.ஏனெனில்,இவர் ஜனாதிபதித் தேர்தலில் இரு முறை போட்டி இட்டு வெற்றி
பெற்றமை,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆண்டவர் போன்ற பல்வேறு காரணங்களினால்
யாவரையும் விட இவர் பொது வேட்பாளருக்குத் தகுதியானவர் என்பதனை இலங்கை மக்கள் யாவருமே அறிவர்.இதனால் பொது
வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா களமிறங்கும் போது தகுதியானவருக்கு
சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என ஐ.தே.க இனது மானம் ஓரளவு காக்கப் படக் கூடியதாக
இருக்கும்.
எனினும் ஐ.தே.க இன் தலைவர் தனது மானத்தைக்
காப்பாற்றிக் கொண்டு கட்சியின் மானத்தையும் காக்க எவ்வாறான வெற்றி வியூகம் வகுக்கப் போகிறார் என்பதை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
துறையூர் அற.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை


0 Comments