ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் நேற்று பொது வேட்பாளரை அறிமுகம் செய்திருந்தது.
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய கூட்டணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கூட்டணி தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் என்ன சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கான பெயர் மற்றும் சின்னம் தொடர்பில் ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபாலவை பொது வேட்பாளராக்கும் முனைப்புக்களுக்கு செய்மதி தொலைபேசி பயன்படுத்தப்பட்டது
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக்கும் முனைப்புக்களுக்கு செய்மதி தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்க அமைச்சரான மைத்திரிபாலவை பொது வேட்பாளராக நியமிக்கும் நடவடிக்கைகளை இரகசியமாக பேணும் நோக்கில் விசேட செய்மதி தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேற்குலக நாடொன்றின் இலங்கைக்கான தூதரகமொன்று இந்த செய்மதி தொலைபேசிகளை வழங்கியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஊடாகவே இந்த மேற்குலக நாட்டின் தூதரகம் சகல இணைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்றத்தை உண்டு பண்ணும் நோக்கில் இவ்வாறு மைத்திரிபாலவை பொது வேட்பாளராக்கும் முயற்சிக்கு குறித்த நாட்டு தூதரகம் ஆதரவளித்துள்ளது.
முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவின் ஊடாகவும் மைத்திரிபாலவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சந்திப்புக்களை நடாத்த பயணிப்பதற்கான வாகனங்களின் இலக்கங்கள் மாற்றப்பட்டதாகவும், ஜீப் மற்றும் மோட்டார் வாகனமொன்று இதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் அமைச்சர்கள் ஆளும் கட்சி பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதனால் இவ்வாறு விசேட செய்மதி தொலைபேசி ஊடாக மைத்திரிபாலவும் எதிர்க்கட்சியினரும் இரகசிய தொடர்புகளை பேணியிருந்தனர் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை மைத்திரிபால தரப்பினரோ ஆளும் கட்சியினரோ இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை.

0 Comments