Subscribe Us

header ads

ரெய்னா அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது சென்னை

சாம்பியன்ஸ் லீக் இருபது-20 இறுதிப் போட்டியில் ரெய்னாவின் சதத்தின் உதவியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து சாம்பியன்ஸ் கிண்ணத்தைச் தட்டிச் சென்றது.
 
இறுதி ஆட்டம்
 
6ஆவது சாம்பியன்ஸ் இருபது-20  கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னசாமி அரங்கில் நேற்றிரவு நடந்தது. இதில் சாம்பியன் மகுடத்திற்கு சென்னை சூப்பர் கிங்சும், ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சையில் இறங்கின. பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கிய கொல்கத்தாவின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக பேட் கம்மின்ஸ் இடம் பெற்றார்.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித் தலைவர் டோனி முதலில் கொல்கத்தாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி ரொபின் உத்தப்பாவும்,  கவுதம் கம்பீரும் கொல்கத்தாவின் இன்னிங்சை தொடங்கினர். நிலைத்து நின்று ஆடிய இவர்கள் ஓட்ட வீதத்தை சீரான வேகத்தில் உயர்த்தினர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 54  ஓட்டங்களை சேகரித்தனர். கம்பீர் 32 ஓட்டங்களுன் ஆடிக்கொண்டிருந்த போது, எளிதான ரன்-அவுட் முறையில் இருந்து தப்பினார்.
 
181 ரன் இலக்கு
 
கொல்கத்தாவின் அதிரடி ஓட்டவேகத்தை  சென்னையின் சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். குறிப்பாக பவான் நெகி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழலில் ஓட்டங்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள்.
 

தொடக்க ஜோடி இணைப்பாட்டமாக 91 ஓட்டங்களை (10.5 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. உத்தப்பா 39 ஓட்டங்களுடன்(32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து இறங்கிய கலிஸ் (1 ஓட்டம்) சிக்சர் அடிக்க முயற்சித்து ஏமாற்றமளித்தார். 11 முதல் 15 ஓவர்களில் அந்த அணி இரண்டு முறை மட்டுமே பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டியிருந்தது. மறுமுனையில் அபாரமாக ஆடிய கவுதம் கம்பீர் 80 ஓட்டங்களுடன் (52 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

 
சுழலில் தடுமாறிய கொல்கத்தா துடுப்பாட்ட வீரர்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிரடியாக துடுப்பெடுத்தாடினர்.  ஆட்டத்தின் 18-வது ஓவரை வீசிய நெஹரா அந்த ஓவரில் 2 சிச்சர் உள்பட 20 ஓட்டங்களை வாரி இறைத்தார். இதன் பிறகு 19-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் பவான் நெகி 3 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த போதிலும், கடைசி ஓவரை வீசிய நெஹரா 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, கொல்கத்தாவுக்கு மீண்டும் ‘கருணை’ காட்டினார். இதனால் கொல்கத்தாவின் ஓட்ட வீதம 9 ஓட்டங்களை தொட்டது.
 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களை குவித்தது. சென்னை தரப்பில் பவான் நெகி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
சென்னை அணி சாம்பியன்
 
அடுத்து 181 ஓட்டங்கள் இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித் (8 ஓட்டங்கள், 2 பவுண்டரி) முதல் ஓவரிலேயே பிடியெடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பிரன்டன் மெக்கல்லமும், சுரேஷ் ரெய்னாவும் கைகோர்த்து மிரட்டினர். ரெய்னாவின் துடுப்பாட்டம் மின்னல் வேகத்தில் சுழன்றது. சிக்சரும், பவுண்டரியுமாக ஓடவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைய வைத்தார்.
 
ஓட்ட எண்ணிக்கை 127 ஓட்டங்களாக உயர்ந்த போது மெக்கல்லம் 39 ஓட்டங்களுடன் (30 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து  டோனி களம் புகுந்தார். மறுபக்கம் அpதிரடியாக ஓட்டங்களை விளாசிய ரெய்னா, இந்திய அணிக்கு புதிதாக தேர்வாகியிருக்கும் குல்தீப் யாதவின் ஓவர்களில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 88 ஓட்டங்களுடன் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ரெய்னா, சாம்பியன்ஸ் லீக்கில் தனது முதலாவது சதத்தையும் எட்டினார்.
 
இறுதியில் டோனி, யூசுப்பதானின் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து ஆட்டத்தை தித்திப்புடன் முடித்து வைத்தார். சென்னை அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 185 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 109 ஓட்டங்களுடனும் (62 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), டோனி 23 ஓட்டங்களுடனும் (14 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் நின்றனர்.
 
ரூ.15 கோடி பரிசு
 
சாம்பியன்ஸ் லீக்கில் கிண்ணத்தை சென்னை அணி வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2010-ம் ஆண்டில் கிண்ணத்தை வென்றிருந்தது. வாகை சூடிய சென்னை அணிக்கு ரூ.15 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கொல்கத்தாவுக்கு ரூ. 8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்த தொடரில் 16 சிக்சருடன் மொத்தம் 234 ஓட்டங்கள் குவித்த ரெய்னா தொடர்நாயகனாகவும், பவான் நெகி ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments