இணையத்தேடல் என்பது தேவையான ஒரு தகவலை இணையம் மூலம் தேடிப்பெறுவது. அந்த இணையத் தேடல் எப்படி மூளையின் செயல்பாட்டை தூண்டும்? ஆச்சர்யமான தகவல்கள் கீழே. தொடர்ந்து படியுங்கள்.
கம்ப்யூட்டரில் தலைமுறை கம்ப்யூட்டர்கள் இருப்பதைப் போலவே, இணையத்தைப் பயன்படுத்துபவர்களையும் தலைமுறைகளாக பிரிக்கலாம்.
மூன்றாம் தலைமுறை இணையம் என்றாலே என்னவென்று தெரியாமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள்.
இரண்டாம் தலைமுறை ஊறுகாயைப்போல கொஞ்சமாக தெரிந்துகொண்டு தொட்டுக்கொண்டார்கள்..
முதல் தலைமுறையான தற்பொழுது உள்ளவர்கள் இணையத்தில் பல்வேறு வகையான பதார்த்தங்களாக உட்கொள்கிறவர்கள். இவர்கள் இணையத்தின் மூலை முடுக்கு, இண்டு இடுக்குகளில் புகுந்து வெளிவரக்கூடியவர்கள்.
இணையப்பயன்பாட்டிற்கு அடிப்படைத்தளமாக விளங்குவது தேடல் தளம்தான். இணையம் என்றால் என்னவென்று தெரியாது ஒதுங்கி நின்றவர்களை பிடித்து இழுத்து வந்து, இதுதான் இணையம், இதுதான் தேடல் முறை என்று கற்றுக்கொடுத்தால் அவர்களின் மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறதாம்.
இங்கு மூன்றாம் தலைமுறை என்று குறிப்பிடபடுபவர்கள் நமது தாத்தா பாட்டி வயதுள்ளவர்களைத்தான். இவ்வாறு வயதானவர்களுக்கு கணினியை அறிமுகப்படுத்தி, இணையத்தைப் பயன்படுத்த கற்றுக்கொடுக்கும்பொழுது, அவர்களின் தேடல் ஆர்வம் அதிகரிக்கிறது.
அதன் விளைவாக அவர்களின் மூளையின் செயல்பாடும், இயக்கமும் அதிகரிக்கிறது. புரிந்துகொள்ளும் ஆற்றல் மேம்படுகிறது.
இதுகுறித்த ஆய்வை அமெரிக்காவில் UCLA என்ற அமைப்பு மேற்கொண்டது. அதில் 55 வயது முதல் 78 வயதானவர்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்டர்நெட்டை பயன்படுத்தும்பொழுது அவர்களின் மூளையில் நிகழும் ரசாயண மாற்றங்கள் கவனிக்கப்பட்டு ஆய்வு நடந்த்து.
முடிவில் இணையத்தேடலில் ஈடுபட்ட வயதானவர்களின் மூளையின் செயல்பாடு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மூளையின் ஒரு பகுதியான “முடிவெடுக்கும் செயல்பாடு” சிறப்பாக அமைந்திருப்பதும் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது.
இவ்வாறு தொடர்ச்சியாக இணையத் தேடலில் ஈடுபடும் மூன்றாம் தலைமுறையினருக்கு மூளையின் செயல்பாடும், சுறுசுறுப்பும் அதிகரிப்பது உறுதியான நிலையில், நினைவுத் திறன் குறைபாடுள்ளவர்கள் கூட இதுபோன்ற இணையத்தேடலில் ஈடுபட்டால் அந்த குறைபாடு நிவர்த்தியாகலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் தலைமுறையினருக்கு மட்டுமல்ல… இப்பொழுதுள்ள இளைய தலைமுறை, அனைவருக்கும் இது பொருந்தும்.
இனி என்ன? உங்கள் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிக்கும் இன்டர்நெட்டை கற்றுக்கொடுங்கள்.. அவர்களும் சுறுசுறுப்பாக இயங்கட்டுமே..!
0 Comments