சமூக நல்வாழ்வுக்கான சபை (Council for Community Virtuous Life [CCVL]) ஏற்பாடு செய்த ‘காதி நீதிமன்றமும் நாமும்’ என்ற கருப்பொருளில் அமைந்த கருத்துப் பரிமாற்றல் அமர்வு 2014.09.12 பி.ப. 4.30 மணியிலிருந்து முஸ்லிம் கலாசார மன்றத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசர் கௌரவ சலீம் மர்சூப் கலந்துகொண்டார்.
‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் அறியாமை, சட்டத்தைப் பிழையாகப் புரிந்துகொள்ளுதல், அதை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் வீட்டு வன்முறை, போதைப் பொருள் பாவனை போன்ற சமூக நல்வாழ்வை சீர்குலைக்கும் காரணிகளுக்குப் பரிகாரங்களைப் பரிந்துரைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவள ஆலோசனையும் ஆற்றுப்படுத்தலும், சட்டரீதியான வழிகாட்டலையும் பாதுகாப்பையும் வழங்குதல் போன்ற சேவைகளை கட்டண நோக்கமின்றி மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட CCVLஇன் முதலாவது சமூக மட்ட நிகழ்வாக, இவ் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது’ என CCVL செயலாளர் சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் குறிப்பிட்டார்.
CCVL தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில், CCVL அழைப்பை ஏற்று புத்தளம் நகரபிதா கௌரவ கே.ஏ. பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். நியாஸ், புத்தளம் பிரிவுக்கான காதி நீதிவான் சட்டத்தரணி ஏ.எம்.எம்.எஸ். அப்துல் காதர், புத்தளம் பெரியபள்ளி நிருவாகத் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், முன்னாள் காதி நீதிவான் மௌலவி நெய்னா முஹம்மத் (நெய்னா புகாரி) உட்பட காதி நீதிவான்கள், விவாகப் பதிவாளர்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிருவாகிகள், ஆண் பெண் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
தலைமையுரை நிகழ்த்திய CCVL தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், “இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள், இறைவன் வகுத்த சட்டத்துக்கும் இலங்கையின் முஸ்லிம் தனியார்ச் சட்டத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். சந்தோஷமான நிம்மதியான குடும்ப வாழ்வு முஸ்லிம்களுடையது என்பதை தமது வாழ்க்கையினால் சகோதர சமூகத்தாருக்குச் சான்று பகர வேண்டும்” எனக் கூறினார்.
CCVL உப தலைவர் சட்டத்தரணி தாவூதீ, காதி நீதிவானாகப் பதவியேற்றுள்ள சட்டத்தரணி அப்துல் காதர் அவர்களை வரவேற்று உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய காதி நீதிவான், வழக்காளிகளின் நடத்தையை விசனத்துடன் குறிப்பிட்டார். ‘காலையில் விவாகரத்து வழக்கு முடிந்தவுடன் ‘உடனே தாருங்கள், இப்பொழுதே வேண்டும்’ என்று தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள வழக்காளிகளில் (பலர்) தம்மை நிர்ப்பந்திப்பதாக’ குறிப்பிட்ட அவர், பொறுமை சகிப்புத்தன்மை விட்டுக்கொடுப்பு போன்ற நற்பண்புகள் இழந்துபோனதை கவலையோடு குறிப்பிட்டார்.
புத்தளம் நகரபிதா கௌரவ கே.ஏ. பாயிஸ் தனதுரையில், ‘காதி நீதிமன்ற வளாகத்துக்குரிய பௌதிக வள தேவைகளை நகரசபையின் ஊடாக வழங்குவதைக் கூறி, அத் தேவைகள் தொடர்ந்தும் வழங்கப்படும்’ எனக் கூறினார். மேலும், ‘காதி நீதிபதிகளின் அந்தஸ்த்தைப் பாதுகாக்கும் விடயத்தில் நீதிச் சேவைகள் ஆணைக்குழு உடன் கவனத்திற்கொள்ள வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் குடும்ப வாழ்வின் பெறுமானங்கள் எனும் தொணிப்பொருளில் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (CCVL நிருவாக உறுப்பினர்) உரையாற்றினார். ‘1806 ஆம் வருடம் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு தனியான சட்டக்கோவை உருவான வரலாற்றைக் குறிப்பிட்டு, முஸ்லிம் தனியார் சட்டமென்பது இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியச் சொத்து உரிமை என்பதையும் அதைப் பாதுகாப்பது சமூகக் கடமை’ என்பதையும் வலியுறுத்தினார்.
இறுதியாக உரையாற்றிய இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப், ‘முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவுள்ள சட்டத் திருத்தங்கள்’ குறித்து எடுத்துக் கூறிய அவர், இச் சட்டத் திருத்தத்தில் முன்வைத்துள்ள சிபாரிசுகள் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும்’ எனவும் குறிப்பிட்டார். கௌரவ சலீம் மர்சூப் இலங்கையின் சட்டத்துறைக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் ஆற்றிய பங்களிப்புக்காக புத்தளம் மக்களின் சார்பாக பெரியபள்ளி நிருவாகத் தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அப் பொன்னாடையை, காதி நீதிவான் பதவியிலிருந்து விடைபெற்றுச் செல்லும் மவ்லவி நெய்னா முஹம்மதுக்கு பிரதம அதிதி அணிவித்தார்.
CCVL உப செயலாளர் அஷ்ஷெய்க் ஆஸாத் ஷிராஸ் (நளீமி) நன்றியுரையை நிகழ்த்தினார். நிகழ்ச்சித் தொகுப்பை சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் மேற்கொண்டார். பிரதம அதிதியின் ஆங்கில உரையை (இக் கட்டுரையாளன்) தமிழுக்கு மொழிபெயர்த்தார்.
தொகுப்பு: Hisham Hussain, Puttalam
படங்கள்: Mansoor Mahir, Hisham Hussain
நன்றி: The Puttalam Times.








0 Comments