Subscribe Us

header ads

மரணிக்காத 'மரண அறிவித்தல்'; நுவரெலியாவில் சம்பவம்


-எஸ்.தியாகு-



உயிரோடு இருக்கும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் இறந்துவிட்டதாக அவரின் படத்துடன் மரண அறிவித்தல் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நுவரெலியாவில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) தரவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி இந்த மரண அறிவித்தல் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கே இவ்வாறு மரண அறிவித்தல் அச்சிடப்பட்டு நுவரெலியா நகரத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு  செய்துள்ளதாகவும் இது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் குறித்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

தான் பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாகவும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும் இதனை பொறுக்காத யாரோ ஒரு சிலர் இதனை செய்திருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாகவும் ஆசிரியர் குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் தாம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக  நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நன்றி: தமிழ்மிறர்
-AsM-

Post a Comment

0 Comments