(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கையில்
இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தின் ஆரம்பம் -தகவல் தொழிநுட்ப
விருத்தியின் ஒரு வெளிப்பாடே என நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை
உறுப்பினர் ஆசிரியர் எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர் விடுத்துத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இஸ்லாம் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு மார்க்கம். புனித அல் குர்ஆன் அறிவை முன்னிலைப்படுத்தியே மக்களை நல்வழிப்படுத்துகிறது.
இஸ்லாம் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு மார்க்கம். புனித அல் குர்ஆன் அறிவை முன்னிலைப்படுத்தியே மக்களை நல்வழிப்படுத்துகிறது.
அல் குர்ஆனைப் பொறுத்தவரை அது விஞ்ஞானம், மருத்துவம், உலகவாழ்வு,
உளவியல் என பரந்துபட்ட, இன்றைய உலகின் புகழ் பெற்று விளங்குகின்ற, மிகச்
சிறந்த துறைகளில் உள்ளடக்கங்களையும் வழிகாட்டல்களையும் கொண்டுள்ளது.
அறிவைத் தேடி அல் குர்ஆனை நெருங்;குகின்ற ஒரு மனிதனுக்கு அது ஒரு சிறந்த
அறிவியல் மூலமாகின்றது. அல் குர்ஆனின் வழிகாட்டல் காலத் தேவைகளுக்கேற்ப
மாற்றமடைந்து வழிகாட்டுவதும் தீர்வுகளைச் சொல்வதும் இறைவேதமான அல்
குர்ஆனின் தனிச்சிறப்பம்சமாகும். உலகில் பின்பற்றப்படுகின்ற வேறெந்த
மதங்களும் கொண்டிராத தன்மைகளுள்ள அல் குர்ஆன் தனித்துவமானதொன்றாக மாற்றுமத
அறிஞர்களால்கூட கணிக்கப்படுகின்றது.
இலங்கையில் அண்மைக் காலங்களில் முஸ்லிங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னேற்றங்கண்டு
தற்போது அவர்களது உடமை மற்றும் உயிர்களை அழித்தொழிப்பது வரை முன்னேற்றங்
கண்டுள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான மிகக் கடினப் போக்கு கொண்ட ஒரு தேரர்
கூட்டமும், அதனோடு இணைந்து செயற்படுகின்ற சில அரசியல் வாதிகளும்,
கிராமப்புற பௌத்த விகாரைகளைத் தளமாகக் கொண்டியங்கி அப்பாவிப் பௌத்தர்கள்
மத்தியில் இஸ்லாமிய விரோத நச்சுக் கருத்துக்களை படிப்படியாக விதைத்து,
இன்று அவர்களையும் தமது பாதகச் செயல்களுக்கு துணைபோகின்ற கூட்டங்களாக
மாற்றியிருப்பதனையும், தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டு வருவதனையும் அவதானிக்க
முடிகின்றது.
பாகுபாடின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின்மீதும்
பிரயோகிக்கப்படுகின்ற வன்முறைகளுக்கு மத்தியிலும் அந்த வன்முறைகளைத் தலைமை
தாங்கி நடாத்துகின்ற தேரர்கள், தாங்கள் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு
எதிரானவர்கள் அல்ல என்றும் ‘புதிதாக உருவெடுத்து வருகின்ற இஸ்லாத்திற்கு’
எதிராகவே தாம் செயற்பட்டு வருவதாகவும் அடித்துக் கூறுகின்றனர்.
அண்மைக்காலத்தில் முஸ்லிம்களின் நடை, உடை பாவனைகளில் ஏற்பட்டு வருகின்ற
மாற்றங்கள் தொடர்பில் அவர்கள் அதிகம் பேசுகின்றனர். குறிப்பாக, முஸ்லிம்
பெண்கள் அதிகளவில் ஹிஜாப், நிகாப் ஆகியவற்றை அணியத் தொடங்கியுள்ளமையும்,
நாட்டில் பள்ளிவாயல்களுடைய அதிகரிப்பு, முஸ்லிம் ஆண்களின் தோற்றம்,
முஸ்லிம்கள் இஸ்லாத்தினைப் பின்பற்றுவதிலே காட்டத் துவங்கியுள்ள கூடிய
ஆர்வம் என்பன குறித்த தேரர்களாலும் அவர்களோடுள்ள சில அரசியல்வாதிகளாலும்
தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது.
இந்நிலைமை அவர்கள் மத்தியில் ஒரு தேவையற்ற பயத்தினையும்
ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறித்த தேரர்களும்
இரசியல்வாதிகளும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் அதற்கப்பால் ஐரோப்பிய,
அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் கூட ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற ‘(முஸ்லிம்
அல்லது முஸ்லிம் அல்லாத) மனிதர்களின் இஸ்லாத்தை நோக்கிய பயணத்திற்கான’
சரியான காரணத்தை புரிந்து கொள்ளத் தவறியிருகிறார்கள் என்பதே உண்மை.
ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போன்று இஸ்லாம் அறிவை
அடிப்படையாகக் கொண்ட மார்க்கம். தகவல் தொழிநுட்பத்தின் குறுகிய காலத்திலான
மிக விரைவான வளர்ச்சியின் காரணமாக மிக முக்கிய துறைகளான விஞ்ஞானம்,
மருத்துவம், தொழிநுட்ப அறிவுகளும் மிகப்பெரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளன.
ஆகவே, அறிவை அடிப்படையாகக் கொண்ட மார்க்கம் என்றவகையில் இஸ்லாமிய அறிவும்
மக்கள் மத்தியில் வளர்ந்து வந்திருக்கின்றது.
கடந்த காலங்களிலும் இஸ்லாம் இருந்திருக்கின்றது. இஸ்லாமிய அறிவு
இருந்திருக்கின்றது. இஸ்லாமிய அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த
அறிவைப் பரப்புவதற்குரிய சரியான ஊடகங்கள் இருக்கவில்லை. எல்லோராலுமே
பெற்றுக்கொள்ளக்கூடிய உயர் தொழிநுட்ப தொடர்பாடல் சாதனங்கள் இருக்கவில்லை.
ஒரு காலத்தில் இஸ்லாம் பற்றிய அறிவு ஒரு இஸ்லாமிய அறிஞரைச் சுற்றியிருந்த
பிரதேசத்தோடு சுருங்கியிருந்தது. நவீன இஸ்லாமிய ஆய்வுகள் பற்றிய செய்திகள்
விரைவாக சாதாரண மக்களையும் அடையக் கூடிய வழிகள் இருக்கவில்லை.
ஆனால் இப்போது நிலைமை அவ்வாறில்லை. இஸ்லாமிய உலகில் மிகச்சிறந்த
அறிஞர்களுடைய செய்திகள் ஓரிரு நிமிடங்களில் உலகின் மூலை முடுக்குகள்
எங்கும் பரவுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களாலும்,
முஸ்லிம்கள் அல்லாதோராலும் செய்யப்படுகின்ற அல் குர்ஆனைப் பற்றிய ஆய்வுகள்,
அது பற்றிய நல்ல கருத்துக்கள் ஓரிரு செக்கன்களில் உலகின் பல
பகுதிகளுக்கும் சென்றடைகின்றன. குர்ஆனியக் கருத்துக்கள், அது காட்டுகின்ற
வழிகாட்டல்கள் என்பன மிக விரைவாக அனைவரையும் சென்றடைகின்றன. தகவல்
தொழிநுட்பத்தின் பாரிய வளர்ச்சியால் மனித அறிவு விருத்தியடைந்தது போன்று
இஸ்லாம் பற்றிய அறிவும் மக்கள் மத்தியில் வளர்ந்திருக்கின்றது. இஸ்லாம்
பற்றிய தெளிவு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
ஐரோப்பாவாக இருந்தாலும், அமெரிக்க நாடுகளாக இருந்தாலும், தூரகிழக்கு
நாடுகளாக இருந்தாலும் அறிவினது பரம்பலின் தாக்கமே ‘மனிதர்கள்’ இஸ்லாத்தை
நோக்கிச் செல்வதற்கும், இருக்கின்ற முஸ்லிம்கள் இஸ்லாத்தை இன்னும் கூடிய
பக்தி சிரத்தையோடு பின்பற்றுவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.
உலகளாவிய இந்நிலமைக்கு இலங்கை மக்கள் மாத்திரம் விதிவிலக்காகி விட
முடியாது. ஆகவேதான் இலங்கை முஸ்லிம்களும் இஸ்லாத்தை பின்பற்றுவதில்
முன்னொருபோதும் இல்லாதவாறு கரிசனை காட்டுகிறார்கள். இந்நிலைமை ஒரு
கோணத்தில் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகவே
கருதவேண்டியுள்ளது. அதனைவிடுத்து யதார்த்தமான இச்சூழலுக்கு இஸ்லாமியத்
தீவிரவாதச் சாயம் பூசுவது, இலங்கையில் குறித்த தரப்பினருடைய பொது
அறிவிலுள்ள குறைபாட்டையே காட்டுகிறது என்பது கசப்பாயிருப்பினும் உண்மை.
ஆக தகவல் தொழிநுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ந்து செல்கின்ற இஸ்லாமிய
அறிவும் கட்டுப்படுத்தப்பட முடியாதது. இந்நிலைமைகளை சரியாகப் புரிந்து
கொள்ளாது இறந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து
பயப்படுவதும் எதிர் காலத்தைப் பற்றிய பாரிய, தேவையற்ற ஐயத்தைக் கொண்டு
இலங்கை முஸ்லிம்களைக் தாக்குவதும் கொலை செய்வதும், அவர்களுடைய உடைமைகளை
அழிக்க எத்தனிப்பதும் அறிவுடைமையாகாது என அவ் அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:Madawala News


0 Comments