Subscribe Us

header ads

ஈதுல் ஃபித்ர் ஈகைத் திருநாள் தொழுகை மைதானத்தில் இருந்து; புத்தளம்.

அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் – தலைவர், புத்தளம் ஜம்இய்யதுல் உலமா சபை 

இளைஞர், யுவதியர், முதியோர், சிறுவர், ஆண் – பெண் என்ற பேதமில்லாமல் பெருநாள் தினத்தின் வெளிப்பாடாக காஸா – பலஸ்தீன் மக்களுக்கு உளப்பூர்வமாகத் தமது ஆதரவைத் தெரிவித்தார்கள்.

இன்றை பெருநாள் தின நிகழ்வுகள் மக்கள் மனங்களில் நல்ல ஆன்மீக உணர்வையும் சகோதரத்துவ வாஞ்சையையும் ஏற்படுத்தியிருப்பதோடு, இதனுடைய பிரதிபலிப்பு நிச்சயமாக காஸா போராட்ட வீரர்களுக்கு உள்ளுணர்வில் (Telepathy) உருவாக்கியிருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஒரு போராட்டத்திற்காக வழங்கப்படும் பௌதிக பங்களிப்புக்கு அப்பால் மானசீக பங்களிப்பு ஆத்மார்த்தமான உந்துசக்தியாக விளங்கும் என்ற புத்தளம் மக்களின் நம்பிக்கையை இந் நிகழ்வுகள் எடுத்துக்காட்டியது.

புத்தளம் மக்களின் சமூக, தார்மீகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஈதுல் ஃபித்ர் மைதான பெருநாள் கொத்பா நிகழ்வுகளை அவதானித்தபோது கூறக்கூடியதாக இருக்கின்றது.

அனைவருக்கும் எனது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்கள் – ஈத் முபாரக்


எஸ்.ஆர்.எம். முஸம்மில் – தலைவர், புத்தளம் பெரியபள்ளி நிருவாக சபை 

ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முகமாக புத்தளம் வரலாறு காணாத பெருந்திரளான மக்களின் ஆதரவில் பெருநாள் தொழுகை வெகு சிறப்பாக நடைபெற்றது.

காஸா – பலஸ்தீன் மக்கள் படுகொலை செய்யப்படும் நேரத்தில் புத்தளம் மக்களும் அந்த காஸா மக்களின் துக்கத்தில் பங்குகொண்டு இந்தப் பெருநாளை அவர்களுக்காக அர்ப்பணம் செய்த்தை முக்கிய நிகழ்வாகக் கருத முடியும்.

இன்றைய மைதான கொத்பாவையும் காஸா மக்களுக்கான ஆதரவைத் தெரிவிக்கும் நிகழ்வுகளையும் வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்புசெய்த சகலருக்கும், குறிப்பாக வாலிப அணிகளுக்கும், சாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் எஸ்.ஏ.சீ. யாகுப் அவர்களுக்கும் புத்தளம் மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அனைவருக்கும் புனித ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன் – ஈத் முபாரக்


எம்.எஸ்.எம். யாசீர் (YM) – தலைவர், புத்தளம் தவ்ஹீத் ஜமாத்

காஸா – பலஸ்தீனை அடிப்படையாக வைத்து ஊரில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்தது. அந்த வகையில் ஒரு மைதானத்தில் அனைவரும் ஒன்றுகூடி பெருநாள் தொழுகையை நிறைவேற்றியமை புத்தளம் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

பெருநாள் தொழுகையுடன் நடைபெற்ற காஸா ஆதரவு நிகழ்வுகளின் போது கூடியிருந்த மக்கள் காஸாவுக்காக தமது ஆதரவை உளப்பூர்வமாகத் தெரிவித்தனர். அதுவரை படங்களிலும் செய்திகளிலும் கிடைத்த காஸா பற்றிய சிந்தனையை கொத்பா பேருரையும் காஸா பிரகடணமும் உணர்வாக மாற்றியது. பலரும் கண்ணீர் சிந்தி அழுது காஸா மக்களுக்காக துஆ பிரார்த்தனை செய்தனர். அனைவரும் உள்ளத்தால் அழுதனர் என்றால் மிகையாகாது. ஒவ்வொருவரும் தாம் நேரடியாக காஸாவில் இருப்பதைப் போன்ற உணர்வைப் பெற்றனர் என்றும் கூறுவேன்.

காஸா – பலஸ்தீனில் நடைபெறும் மனிதப் படுகொலைகளும் இனச் சுத்திகரிப்பும் புத்தளம் மக்களின் மனங்களில் எழுப்பிய உணர்வலையும் அதன் மூலம் உருவான ஒற்றுமையும் எதிர்வரும் காலங்கள் முழுதும் நிலைக்க வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டியவனாக, பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – ஈத் முபாரக்


எம்.டி.என். அமீன் – மைதான பெருநாள் கொத்பா ஸ்தாபக ஏற்பாட்டாளர் (சார்பாக)

21 வருடங்களுக்கு முன் முதன் முறையாக மைதானத்தில் பெருநாள் தொழுகையை ஏற்பாடு செய்து நடத்தியபோது கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை உயிர்ப்பிக்கும் நோக்கில், மைதானத்தில் பெருநாள் தொழுகையை ஏற்பாடு செய்தபோது, பலரும் இதனை ஒரு புதிய விசயமாகவும் புதுமையாகவும் நோக்கினார்கள். இந் நிலையில் முதலாவது மைதானத் தொழுகை கொத்பாவை நடத்துவதற்கு முன்வந்த இமாம் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) உட்பட தொழுகைக்காக வருகை தந்தவர்களை இன்று நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றோம். அவர்களில் பலர் இன்று எம்முடன் இல்லை. அவர்களின் மண்ணறை வாழ்வு சுவனத்தின் பூங்காவாக அமைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

இன்ஷாஅல்லாஹ், ஊரின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு, புத்தளம் பெரியபள்ளியின் தலைமையின் கீழ், இரண்டு பெருநாள் தொழுகைகளை நடத்தும் ஏற்பாடுகளை தொடர்ந்தும் பொறுப்பேற்று நடத்துவதற்கு ஆவலாக இருக்கின்றோம்.

முதலாவது மைதான தொழுகை முதல் இன்றைய மைதான தொழுகை வரை தொழுகை கொத்பாக்களை நடத்திய இமாம்களுக்கும் மைதானத்தை சுத்தம் செய்தல், விரிப்புக்களை விரித்தல், வுளுவுக்கான தண்ணீர் வசதி, ஒலிபெருக்கி, படப்பிடிப்பு, ஊடகங்களில் வெளியிடல் உட்பட அனைத்துவிதமான உதவி ஒத்தாசைகளை வழங்கிய அனைவருக்கும் குறிப்பாக இன்றைய காஸா ஆதரவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்த வாலிபர்களுக்கும் இனிய ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Thanks to: The Puttalam times 

Post a Comment

0 Comments