Subscribe Us

header ads

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினத்தில் பாலஸ்தீன் காஸா முஸ்லிம்களுக்காக புத்தளம் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட ஈத் பிரகடனம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மான்னிர் ரஹீம்.

பாலஸ்தீன் காஸா முஸ்லிம்களுக்கு பேராதரவு தெரிவித்து புத்தளம் முஸ்லிம்களால் வெளியிடப்படும் “ஈத்” பிரகடனம்!

**: இஸ்லாத்தின் புனித ஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள அல்லாஹ்வால் அருள்பாலிக்கப்பட்ட பாலஸ்தீன் காஸா முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் ஈவு இரக்கமின்றி தொடுத்துள்ள கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும் மிலேச்சத்தனமான மனிதப் படுகொலைகளை புத்தளம் முஸ்லிம்களாகிய நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

**: இஸ்ரேலின் ஒட்டு மொத்த இன அழிப்புக்கு முன்னால் சற்றேனும் நிலைகுலையாது இலட்சிய வேட்கையுடன் தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கும் பாலஸ்தீன் காஸா முஸ்லிம்களின் சத்திய போராட்டத்துக்கு நாம் மானசீகமான பேராதரவை தெரிவிக்கின்றோம். அவர்களின் வெற்றிக்குப் பிரார்த்திக்கின்றோம். காஸா மீதான மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான இந்த இன ஒடுக்கு முறையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாம் பலமாக கோரிக்கை விடுப்பதோடு இஸ்ரேல் இழைத்து வரும் இம்மாபெரும் இனப் படுகொலைகளை கண்டிக்காமல் அவற்றை தடுத்து நிறுத்த எத்தைகைய நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மௌனம் காத்து வரும் ஏகாதிபத்தியவாதிகளின் இரட்டை வேடத்தை நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

**: இதுவரை பாலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்கி வரும் இலங்கை அரசாங்கத்துக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதோடு இஸ்ரேலை கண்டிக்கும் முகமாக அதன் உறவை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

**: சமாதானத்தையும் நீதியையும் விரும்பும் சகல நாடுகளும் மக்களும் இஸ்ரேலின் அட்டூழியமும் அராஜகமும் உடன் நிறுத்தப்படவும் சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்தின் முன்னால் இஸ்ரேல் கொண்டு வரப்படவும் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

**: முஸ்லிம் நாடுகள் ஓரணியில் பேரணியாக நின்று இஸ்ரேலின் கொட்டத்தை அடக்குவதற்கு சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவைகள் காஸா மக்களுக்கு சகலவித மனிதாபிமான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்று நாம் உருக்கமாக கோரிக்கை விடுக்கின்றோம்.

**: இஸ்ரேலின் தொடரும் இந்த இனஅழிப்பினால்; உயிரிழந்தவதர்களுக்காவும் படுகாயமடைந்தவர்களுக்காகவும் வாழ்விடங்களையும் உடமைகளையும் சொத்துக்களையும் இழந்தவர்களுக்காகவும் தமது ஆழ்ந்த அநுதாபத்தையும் கவலையையும் தெரிவிப்பதோடு அல்லாஹ்விடத்தில் உயிரிழந்தவர்களின் மண்ணறை மற்றும் மறுமை ஈடேற்றத்ததுக்காகவும் காயமடைந்தவர்களின் விரைவான சுகத்துக்காகவும் உளமுறுகி பிரார்த்திக்கின்றோம்.

**: இஸ்ரேலின் இந்த ஈனச் செயலுக்கு பங்களிப்பு வழங்கும் நோக்கில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள சகல நுகர்வுப் பொருட்களையும் உடனடியாக பகிஷ்கரிக்கும் படி சகல முஸ்லிம்களையும் மனிதநேயமுள்ள சகல மக்களையும் நாம் விநயமாக வேண்டிக் கொள்கின்றோம்.

**: பலஸ்தீன் முஸ்லிம்களின் பாதை கடினமானது. அது தியாகங்களையும் பொறுமையையும் வேண்டி நிற்கின்றது. ஆனால் எதிர்காலம் அவர்களுக்குத் தான். அது சந்தேகமற வரும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அவன் தனது வாக்குறுதிகளை ஒரு போதும் மீறியதில்லை என்று அமைதி சமாதானம் என்பதை எப்போதும் விரும்பும் புத்தளம் முஸ்லிம்களாகிய நாம் இந்த ஈத் தினத்தில் முழு உலகுக்கும் உறுதியாக பிரகடனம் செய்கின்றோம்.

________________
கையொப்பங்கள்:

1. அல்ஹாஜ் எஸ்.ஆர்.எம்.முசம்மில்
தலைவர் - பெரியபள்ளி புத்தளம்.

2. அச்ஷேய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
தலைவர் - அகில இலங்கை ஜம்மிய்யதுள் உலமா புத்தளம் கிளை

3. கௌரவ அல்ஹாஜ் கே.ஏ. பாயிஸ்
தலைவர் - நகர சபை புத்தளம்

4. கௌரவ எஸ்.எச்.எம்.நியாஸ்
வடமேல் மாகாண சபை உறுப்பினர்

5. கௌரவ என்.டி.எம்.தாஹிர்
வடமேல் மாகாண சபை உறுப்பினர்
  • நன்றி: The Puttalam Times 

Post a Comment

0 Comments