Rj Fazeer
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் பாதாள
உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில்
பாதுகாப்பு தரப்பு அதீத அக்கறை எடுத்தது. அதனாலோ என்னவோ தலை நகரில்
தலைவிரித்தாடிய பாதாள உலகக் குழுக்களின் நடமாட்டமானது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போதைப் பொருள் கடத்தல்,
ஒப்பந்த கொலைகளை செய்தல், மிரட்டுதல் போன்றவையே பாதாள உலகக்
குழுக்களின் முக்கிய வருமான மார்க்கமாக இருந்தது.
இந் நிலையில் பல முக்கிய பாதாள உலகத்தலைவர்கள் என இனம் காணப்பட்ட
பலரும் பொலிஸாருடன் சட்ட அமுலாக்கலின் போது முரண்பட்டு உயிர்
துறந்ததுடன் மேலும் சிலர் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். எனினும்
நாட்டில் இடம்பெற்றுவந்த போதைப் பொருள் வர்த்தகம், ஒப்பந்த கொலைகள்
மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்ட பாதாள உலகச் செயற்பாடுகள்
குறைந்தபாடில்லை. இது பாதாள உலக கும்பல்களின் நடவடிக்கை தலை நகரில்
முற்றாக முடங்கவில்லை என்பதையே பிரதிபலிக்கின்றது.
வெளிப்படையாக தற்போது பாதாள செயற்பாடுகள் தலை நகரில் அவ்வளவாக
இடம்பெறாத போதும் தலை
மறைவு வாழ்க்கை வாழும் பாதாள உலகக் குழுவின் தலைவர்களால் இரகசியமாக
இந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.
இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக கடந்த ஜூன் 29 ஆம் திகதி
கிராண்ட்பாஸ், அன்றுகேவத்தை,87 ஆவது தோட்டத்தில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பார்க்கப்படுகின்றது. இது தொடர்பில்
விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரும்
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவும் மேற்கொண்டுள்ள
நிலையில் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் சான்றுகள் அவர்களுக்கு
கிடைத்துள்ளன.
போதைப் பொருள் கடத்தல் போட்டியில் அல்லது வர்த்தகப் போட்டியில் இதனை
ஒத்த ஒரு சம்பவம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி
நள்ளிரவு தெமட்டகொடை பிரதான சந்தியின் வீதி சமிக்ஞை விளக்கருகே
இடம்பெற்றது. இதன் போது கொலன்னாவை பகுதியிலிருந்து ராஜகிரிய
நோக்கி சென்றுகொண்டிருந்த புளூமென்டல் பகுதியின் பிரபல பாதாள உலகத்
தலைவனாக கருதப்படும் சங்க உள்ளிட்ட குழுவினரே இலக்காக
கொள்ளப்பட்டிருந்தனர்.
சங்க பயணித்த ஹைப்ரிட் ரக நவீன சொகுசு காரை ஜீப் ரக வாகனம் ஒன்றில் பின்
தொடர்ந்து வந்த தெமட்டகொடை பகுதியின் பிரபல பாதாள உலகத் தலைவனாக
கருதப்படும் தெமட்டகொடை சமிந்தவின் ஆட்கள் தெமட்ட கொட சந்தியில்
வைத்து அந்த காரை இடைமறித்து சரமாரியான துப்பாக்கிச் சூட்டினை
நடத்தியிருந்ததாக அப்போதைய பொலிஸ் விசாரணைகளில்
தெரியவந்திருந்தது. இதன் போது புளூமெண்டல் சங்கவின்
நம்பிக்கைக்குரிய கையாளான பொரளையை சேர்ந்த சஜித் என்ற 27 வயதுடைய
இளைஞன் ஒருவன் உயிரிழந்திருந்தான். குறித்த நபரே சம்பவத்தின் போது
சங்க பயணித்த ஹைப்ரிட் ரக காரின் சாரதியாக செயற்பட்டிருந்தார். இது
தொடர்பில் அப்போது கேசரி முழுமையான விபரங்களை
பிரசுரித்திருந்தது. இந்த சம்பவத்தை அடுத்து புளூமெண்டல் சங்கவும்
தெமட்ட கொடை சமிந்தவும் தலைமறைவு வாழ்வொன்றை தொடர்ந்து வந்த நிலையில்
அவர்களின் பழி வாங்கும் படலத்தின் இரண்டாவது கட்டம் கடந்த ஜூன் 29 ஆம்
திகதி (அதாவது தெமட்டகொடை சம்பவத்தின் 8 மாதங்களின் பின்னர் )
கிராண்ட்பாஸ், அன்றுகேவத்தையில் அரங்கேறியது.
கடந்த 29 ஆம் திகதி மாவத்தை புனித அந்தோனியார் தேவாலயத்தின்
திருவிழாவின் பவனி அன்றுகேவத்தை பகுதியின் ஊடாக செல்லும் படியாக
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் திருவிழா பாதுகாப்பு
பணிக்காக பொலிஸாரும் குறித்த பகுதிகளில் கடமையில் இருந்த நேரம் அது.
திருவிழாவுக்காக பிரதேசமே களைகட்டியிருந்த அந்தப் பொழுதில்
தேவாலயம் சென்று வந்த பலர் ஆங்காங்கே கூடி நின்று திருவிழா பவனி காணும்
வரை வீதிகளில் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
இவர்களில் ஒரு குழுவாகவே ஜனித் சாமர உடவத்த , சுப சிங்க ஆரச்சிகே
கவிந்த கெலும்,சாமர சம்பத் மற்றும் சஷி குமார் ஆகிய நால்வர் கொண்ட
குழுவினரும் அன்றுகேவத்தை 87 ஆம் தோட்டத்தில் வீதியில் இருந்தவாறே
பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
ஜனித் சாமர உடவத்த , சுப சிங்க ஆரச்சிகே கவிந்த கெலும்,சாமர சம்பத் ஆகிய
மூவரும் குறித்த பிரதேசத்தையே வதிவிடமாகக் கொண்டவர்கள் என்பதுடன்
சஷி குமார் மட்டும் தெமட்டகொடை பகுதியை சேர்ந்தவர். இந் நிலையில்
அனைவர் மனங்களிலும் அந்தோனியார் தேவாலய திருவிழா நிலைத்திருக்க
யாரும் எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் பதிவானது.
அப்போது நேரம் இரவு சுமார் 8.00 மணி இருக்கும். கிராண்ட்பாஸ்
அன்றுகேவத்தை வீதியில் மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று
சென்றது. W P TK -0135 என்ற இலக்கத்தகட்டினைக் கொண்டிருந்த அந்த
மோட்டார் சைக்கிள் 87 ஆவது தோட்டத்தில் மேற்சொன்ன நால்வரும்
கதைத்துக்கொண்டிருந்த இடத்தை அண்மித்த பகுதியில் போய் நின்றது.
முகத்தை துணியொன்றினால் சுற்றி கண்கள் மட்டும் தெரியும் படியாக மறைத்து
அதற்கு மேலால் தலைக்கவசம் அணிந்திருந்துள்ள அவ்விருவரில் மோட்டார்
சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவரிடம் ஒரு பயணப் பை
இருந்துள்ளது. மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட மறுகணமே
பையிலிருந்து ரீ - 56 ரக துப்பாக்கியை வெளியே எடுத்துள்ள அந்த நபர்
ஜனித் சாமர உடவத்த , சுபசிங்க ஆரச்சிகே கவிந்த கெலும்,சாமர சம்பத்
மற்றும் சசிகுமார் ஆகியோர் மீது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தை
இடை விடாது மேற்கொண்டுள்ளார். இதனால் அந்த நால்வரும் ஸ்தலத்திலேயே
நிலத்தில் சரிந்தனர். இதனை அடுத்து நிலத்தில் வீழ்ந்தவர்களின் அருகே
இறங்கி சென்றுள்ள துப்பாக்கி தாரி ஜனித் சாமர உடவத்தை மற்றும் சுபசிங்க
ஆரச்சிகே கவிந்த கெலும் ஆகியோர் மீது மேலும் பல சூட்டுக்களை நடத்தி
விட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் இடம்பெறும் போது அந்தோனியர்
ஆலய உற்சவமும் இடம்பெற்று வந்த நிலையில் பட்டாசு
கொளுத்தப்படுவதாகவே பொதுமக்களில் பலர் நினைத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து தாம் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச்
செல்ல அவ்விரு சந்தேக நபர்களும் முயற்சித்த போதும் அப்போது ஏற்பட்ட
பதற்ற சூழலால் மோட்டார் சைக்கிளை திருப்பும் போது அது அருகில் இருந்த
கானுக்குள் வீழ்ந்துள்ளது. இதனை அடுத்து பயணப்பையையும் மோட்டார்
சைக்கிளையும் அவ்விடத்திலேயே கைவிட்டு அந்த வீதியால் வந்த முச்சக்கர
வண்டியை சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல பயண்படுத்தியுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதியை இழுத்து வீசியுள்ள சந்தேக நபர்கள்
கண்ணிமைக்கும் பொழுதில் அன்றுகே வத்தைக்கு விடைகொடுத்தனர். இந்
நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 28 வயதுடைய ஜனித் சாமர
உடவத்த , 26 வயதுடைய சுப சிங்க ஆரச்சிகே கவிந்த கெலும் ஆகியோர்
ஸ்தலத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர். அத்துடன் படுகாயமடைந்த
27 வயதுடைய சாமர சம்பத் மற்றும் 33 வயதுடைய சசி குமார் ஆகியோர்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உடன்
அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கிராண்ட்பாஸ் பொலிஸாரினதும் கொழும்பு
குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரினதும் ஸ்தல விசாரணைகள்
ஆரம்பமாகின. விசாரணைகள் தற்போதும் தொடரும் நிலையில் பல முக்கிய
தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் இது ஒரு
போதைப் பொருள் வர்த்தகப் போட்டி காரணமாக இடம்பெற்ற சம்பவம் என்ற
உறுதியான அனுமானத்துக்கு விசாரணைக் குழுவினர் வந்துள்ளனர்.
இது தொடர்பில் கேசரிக்கு பதிவான தகவல்களின் பிரகாரம்,ஜனித் சாமர
உடவத்த என்ற 28 வயதுடைய நபருக்கு இன்னொரு பெயர் உள்ளது. அது தான்
'சுது மஹத்தயா'. சுது மஹத்தயா தெமட்டகொடை சமிந்தவின் நெருங்கிய
நபர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன் அவரது உறவினர் எனவும்
கூறப்படுகின்றது. இந் நிலையில் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை உள்ளிட்ட
பகுதிகளில் குடு சமிந்த அல்லது தெமட்டகொடை சமிந்த என்ற பாதாள
உலகத்தலைவனின் ஹெரோயின் வியாபாரத்தை முன்னெடுத்தவர் சுது மஹத்தயா
என்பதை பொலிஸ் விசாரணைகள் உறுதிப்படுத்துகின்றன.
இந் நிலையில் புளூ மெண்டல் பகுதியை மையமாக வைத்து ஹெரோயின்
வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சங்க தனது பிரதேசத்தில் தெமட்டகொடை
சமிந்த ஆதிக்கம் செலுத்துவதை விரும்பியிருக்கவில்லை. தலைமறைவு
வாழ்க்கை வாழ்ந்து வரும் இவ்விரு பாதாள உலகத்தலைவர்களான சமிந்தவும்
சங்கவும் இது தொடர்பில் பலமுறை தொலைபேசியில்
கலந்துரையாடியுள்ளதாகவும் எனினும் அவர்களால் ஒரு
இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் போயுள்ளதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு சமிந்த சங்கவை போட்டுத்தள்ள
முயற்சித்திருந்த நிலையில் அந்த திட்டத்தில் மயிரிழையில் உயிர்
தப்பியிருந்த சங்க சமிந்தவிற்கு சங்கூதவும் காத்துக்கொண்டிருந்த
நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அரசியல் பாதுகாப்பு உள்ள சமிந்த ஊடாக பெற்று சுது மஹத்தயா விற்பனை
செய்த ஹெரோயின் சுத்தமானது எனவும் நிறையிலும் எவ்வித குறைபாடும்
அற்றதாகவும் உள்ளதாக போதைப் பொருள் பாவனையாளர்கள் பலர்
குறிப்பிட்டுள்ளனர். அதே நேரம் சங்கவின் ஆட்கள் விற்பனை செய்யும்
ஹெரோயினோ கலப்படம் செய்யப்பட்டது என அவர்கள் குறிப்பிடுவதாக
பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டன. இதனால் சங்கவின் போதைப் பொருள்
வர்த்தகம் வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது. இந் நிலையிலேயே சமிந்தவை
தீர்த்துக் கட்ட முன்னர் சமிந்தவின் போதைப் பொருள் வர்த்தகத்தை
முன்னெடுத்து வந்த சுது மஹத்தயா எனும் ஜனித் சாமர உடவத்தவை தீர்த்துக்
கட்டுவது என்ற சங்கவின் திட்டம் அன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் விட்டுச் சென்ற பயணப்பையிலிருந்து ரீ - 56 ரக
துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் மகஸின் ஒன்று
கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை விட துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற
இடத்திலிருந்து 18 வெற்று தோட்டாக்கள் ஸ்தல விசாரணைகளை
முன்னெடுத்த குற்றவியல் தொடர்பிலான தடயவியல் பொலிஸாரினால்
கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்விரட்டை கொலையின் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற முச்சக்கர
வண்டியானது பேலியகொடை, கட்டு நாயக்க அதிவேக பாதையின் நுழைவாயிலை
அண்மித்த ஒரு இடத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே அந்த முச்சக்கர வண்டி இவ்வாறு
மீட்கப்பட்டுள்ளது. இதனை விட கொலைக்கு வருகை தந்த மோட்டார் சைக்கிளின்
இலக்கத்தகடானது போலியாக பொருத்தப்பட்டுள்ளது என்பது
தெரியவந்துள்ளதுடன் அந்த வண்டி திருடப்பட்டது என்பதும்
புலனாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழக பட்டப் படிப்பு மாணவன்
ஒருவனுக்கு சொந்தமான அந்த மோட்டார் சைக்கிள் சப்புகஸ்கந்த
பகுதியில் நண்பன் ஒருவனின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது
காணாமல் போனதாக அப்போதே சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் இது
தொடர்பில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
இந்த இரட்டை கொலையினை செய்தவர்கள் தொடர்பில் உறுதியாக கூற முடியாமல்
உள்ள போதும் சங்க குழுவினர் மீதான சந்தேகங்கள் வலுத்துள்ளன. இந்த
கொலையின் நிமித்தம் புளூமெண்டல் சங்கவின் குழுவின் பிம்சருடன்
இன்னொருவர் வந்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. எனினும் இவை
அனைத்தும் பொலிஸாரின் விசாரணைகளின் இறுதியிலேயே அறிய முடியுமாக
இருக்கும்.
தெமட்டகொடை சந்தையில் கருவேப்பிலை விற்ற சமிந்த ஹெரோயின் ஊடாக இன்று
கோடீஸ்வரனாகி தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.
புளூமெண்டல் பிரபல பாதாள உலகத்தலைவன் சஞ்சீவ கதிர்காமம் சென்று
வரும் போது அவரது குழுவினருடன் காணாமல் போய் இன்றுவரை மர்மம் துலங்காது
நீடிக்கும் நிலையில் அக்குழுவின் முக்கிய நபரான சங்க தற்போது அந்த
குழுவுக்கு தலைமை தாங்கி ஹெரோயின் வர்த்தகத்தை முன்னெடுக்கின்றார்.
இவ்விரு குழுக்களுக்குமிடையே இடம்பெறும் போதைப் பொருள் வர்த்தகப் போட்டி
காரணமாக கடந்த வருடமும் இந்த வருடமும் மூவர் கொல்லப்பட்டுவிட்டனர். ஒருவர்
சங்கவின் குழுவை சேர்ந்தவர். மற்றைய இருவரும் சமிந்தவுக்கு
நெருக்கமானவர்கள். இந் நிலையில் தலைமறைவு வாழ்வு வாழும் சங்கவையும்
சமிந்தவையும் பொலிஸார் சட்டத்தின் முன் நிறுத்தாது போனால் இதன் மூன்றாவது
கட்ட தாக்குதல் ஒன்றும் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய
வாய்ப்புக்கள் இல்லாமலில்லை.
எனவே நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பாரிய அச்சுறுத்தலை
ஏற்படுத்தியுள்ள போதைப் பொருள் வர்த்தகத்துக்கு சாவு மணி அடிக்க பொலிஸ் மா
அதிபர் புதிதாக அறிவித்துள்ள விஷேட புலனாய்வுப் பிரிவு ஊடாக தகவல்களை
திறட்டி இவ்வாறானோரை விரைவில் கைது செய்ய வேண்டும். அப்போதே நாட்டில்
போதைப் பொருள் கலாசாரமும் அதுசார்ந்த கொலைகளையும் கட்டுப்படுத்த முடியும்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice


0 Comments