பா.யூட்
3ம் வருடம்
அரசியல்த்துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்.
3ம் வருடம்
அரசியல்த்துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்.
அறிமுகம்
இலங்கையின் உள்நாட்டு மோதலானது பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்ட பிரிவினைவாத விதைகளாகும். பிரித்தானியா இலங்கையைக் கைப்பற்றும் போது தமிழ், சிங்கள, முஸ்லிம்,இன உறவுகள் மிகவும் நெருக்கமாகவும் புரிந்துணர்வுடனும் காணப்பட்டன. இத்தகைய ஒற்றுமைத் தன்மையானது பிரித்தானியரின் காலணித்துவத்திற்கு சவாலாக அமைந்தது. இதனை மாற்றியமைத்து தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பிரித்தானியா பலவிதமான பிரிவினைவாதக் கொள்கைகளை இலங்கையர் மத்தியில் உருவாக்கினர்.
பொதுவாக இவர்களின் காலணித்துவக் கொள்கையாக பிரித்தாளும் கொள்கை ((Divert& Rule)) காணப்படுகின்றது. இனம், மதம், பிரதேசம் என்ற அடிப்படையில் காணப்படுகின்றது. இத்தகைய பிரிவினைவாதக் கொள்கையானது இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பிரதான இனங்களுக்கிடையே முரண்பாடாக உருவெடுத்து பின்னர் ஆயுத மோதலாக பரிணாமம் எடுத்ததை மேலும் விரிவாக நோக்குவோம்.
முரண்பாடு என்றால் என்ன?
முரண்பாடு என்பது இரு குழுக்களுக்கிடையிலோ அல்லது இரு தனியன்களுக்கிடையிலோ ஏற்படுகின்ற போட்டித் தன்மையைக் குறிப்பிடலாம். மொழி ரீதியாகவோ மதக் கருத்துகள் ரீதியாகவோ உரிமைகள் ரீதியாகவோ அமையலாம். ஆரம்பத்தில் பிணக்குகளாக உருவெடுப்பவை தீர்க்கப்படாத போது அவை முரண்பாடாக மாற்றமடைந்தன. முரண்பாடுகள் ஆதிக் கமியூனிம் காலத்திலிருந்து இன்றைய நவீன பொதுவுடமைவாதம் வரை பல்வேறுபட்ட புரட்சிகளூடாக பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
முரண்பாடுகள் பொதுவாக வலிமையான நபர்அல்லது குழுக்களினால் வலிமை குறைந்தவர்கள் மீது ஆதிக்கம் அடக்குமுறைக்குட்படுத்தும் போதும் அவர்கள் உரிமைகள் மறுக்கப்படும் போதும் பொருந்தாத விடயங்களுக்கு சமூகக் குழுவினரை வலியுறுத்தும் போது ஏற்படக்கூடியவை.
மதங்களுக்கிடையே கொள்கை முரண்பாடுகளின் அடிப்படையில் ஏற்படுவது மத முரண்பாடு. மொழி அடிப்படையில் ஏற்படுவது மொழி முரண்பாடு. பால் அடிப்படையில் ஏற்படுவது பால்நிலை முரண்பாடு. மத்திய காலப்பகுதியில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் என்பன பொருளாதார சிந்தனையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதுமட்டுமல்லாது மக்களுக்கும் அரசனுக்குமிருந்த முரண்பாடுகள் வலுப்பெற்று மக்கள் போராட்டமாக உற்பத்தியாகும் போது மக்கள் ஜனநாயகத்தின் ஆரம்பமும் மக்கள் அரசரயும் தோற்றுவித்தது. காலத்தின் புதிய பரிமாணங்கள் உருவாவதற்கு முரண்பாடுகள் அடிப்படையாக அமைந்திருக்கின்றன. இவை பொதுவாக வெவ்வேறு சமூக தோற்றப்பாடுகளின் அடிப்படையில் வேறுபடும். மேற்கத்தைய நாடுகளில் பொருளாதாரம், அரசு, பால் என்ற ரீதியில் முரண்பாடுகள், புரட்சிகள் ஏற்பட்ட அதேவேளையில் கீழத்தேயத்தில் சாதி, மத, மொழி, இன முரண்பாடுகள் தோற்றம் பெறத் தொடங்கின. காலணித்துவத்திற்கு பின்னரான காலங்களில் பல்வேறு நாடுகளில் இனங்களுக்கிடையில் ஆட்சி அதிகாரம் உரிமைகள் தொடர்பாகவும் முரண்பாடுகள் தோற்றம் பெற்றதுடன் பல புதிய சுதந்திர அரசுகளையும் உருவாக்கியது. இத்தகைய நிலைமையை இலங்கையிலும் காணக்கூடியதாயுள்ளது. அதாவது சுதந்திரத்திற்கு முன்னர் ஒன்றுபட்டிருந்த இனங்கள் சுதந்திரத்தின் பின்னர் ஒன்றையொன்று எதிர்த்து முரண்படத் தொடங்கின. ஆட்சி உரிமைஇ கல்வி, தொழில்வாய்ப்பு, அரச உத்தியோகம் என்று தமது கோரிக்கைகளை முன்வைத்த சிறுபான்மை இனங்களுக்கு உரிய வகையில் பதிலளிக்க பெரும்பான்மையினம் தவறவே தமிழ் - சிங்கள இனக்குரோதம் வளர்ந்து பின்னர்அது ஆயுதப் போராட்டமாக தோற்றம் பெற்றது.
இலங்கையின் உள்நாட்டு மோதலின் தோற்றம்
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வணிகப் போட்டித்தன்மை காரணமாக சிங்கள - முஸ்லிம் இனங்கள் முரண்பட்டிருந்தன. இதன் மாற்றமானது சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கள - தமிழ் இன உறவில் பாரிய பிளவைக் கொண்டுவந்தது. ஆட்சியதிகாரத்தின் வேட்கையில் சிங்களத் தலைமைகள் தமக்குள் மோதிக் கொண்டதுடன் தமது போராட்டத்திற்காக நாட்டு மக்களையும் உள்வாங்கிக் கொண்டனர். சிங்களத் தேசிய வாதம் உருவாக்கப்பட்ட போதே ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் இனத் தலைவர்களும் தமது இனத்துவ அடையாளம் மறுக்கப்பட்டதாக உணர்ந்து தத்தமது இனவாதத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர்.சுதந்திரத்திற்காக தேசியவாதத்தையே மட்டும் கொண்டு செயற்பட்ட இனங்கள் பின்னர் சுயநல அரசியலுக்காக இன ஒற்றுமையை பலியாக்கினர். அரசியல் இலாபங்களுக்காக செய்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளும் இலங்கையில் பாரிய இன முரண்பாட்டை ஏற்படுத்தும் என்று அன்று சிங்களத் தலைமைகள் எண்ணியிருந்தால் இன்றைய அழிவை தடுத்திருக்கலாம்.
முரண்பாட்டை வெளிப்படையாகக் கொண்டுவந்த நிகழ்வுதான் ' தனிச்சிங்களச் சட்டம்" அதாவது அதுவரை காலமும் இலங்கையின் அரச நிர் வாகமானது ஆங்கில மொழியில் காணப்பட்டது. இது சிங்கள மக்களுக்கு பாரிய சவாலாக இருந்ததுடன் தமது அரச கருமங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்தார்கள். இதனை மாற்றியமைத்து சுய மொழி நிர்வாகத்தை கொண்டு வரும் பொருட்டு S.W.R.D. பண்டாரநாயக்க அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனமாக இச்சட்டத்தை கொண்டுவருவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தார். அதாவது 1956 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலை இவர்களைக் கொண்டே இவரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. இதனால் பாரிய வெற்றி கண்டு பிரதமராக பதவியேற்ற பண்டாரநாயக்க அவர்களுக்கு தமிழரசுக் கட்சியினர் தமிழ் இனம் இதனால் பாதிப்படைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டவர் தந்தை செல்வாவுடன் ஓர் உடன்பாட்டிற்கு வந்ததார் . அது பண்டா - செல்வா உடன்படிக்கை என்று அறியப்படுகின்றது. இதில்
01. சிங்களத்துக்குச் சமமாக தமிழும் அரசகரும மொழியாக்குவது
02. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை போக்கும் முகமாக ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பது.
03. தமிழ் பிரதேசங்களில் அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவது.
04. மலையக தமிழர் அனைவருக்கும் குடியூரிமையை மீளவழங்குவது.
போன்ற கோரிக்கையை தமிழ்த் தலைமைகள் முன்வைத்தனர். இதனை நிறைவேற்ற முற்பட்ட போதும் பௌத்த குருமமார்களுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியினர் செய்த எதிர்ப்புப் போராட்டம் அதனைக் கிழித்தெறியும் அளவிற்கு இட்டுச் சென்றது. அதன் பின்னர்அதாவதுஇ 1960 - 1965 இல் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமருடன் ஓர் உடன்படிக்கை தமிழ்த்தலைமைகளினால் எட்டப்பட்டது. அதுவும் பயனற்றுப் போகவே தமிழ் மக்கள் சிங்கள அரசியல் தலைமைகள் மேல் வைத்திருந்த நம்பிக்கை நீங்கி சலிப்புணர்வு ஏற்பட்டது. மேலும் 1960 இல் இலங்கை சுதந்திரக் கட்சி அரசாங்கம் நீதிமன்ற மொழிச்சட்டத்தின் மூலம் சிங்களத்தையே வலுக்கட்டாயமாக அதிகாரபூர்வ மொழியாக்கியது. இதனை எதிர்த்து தமிழரசுக் கட்சியினர் காட்டிய முறையில் தமது உரிமைக்காக சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கியது. இதனை அரசு குண்டர்களையும் காடையர்களையும் பயன்படுத்தி தடியடி கல்வீச்சு கொண்டு ' வன்முறையை" கையாண்டு அதனை கலைத்தது. இதனால் தமிழ் தலைமைகளும் மக்களும் அகிம்சை வழியை கைவிட முற்பட்டதுடன் தமக்கு தனியான ஆட்சியலகு வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல மெல்ல முளைவிடத் தொடங்கியது.
1974 இல் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தனிநாடு என்ற பதம் நிறைவேற்றப்பட்டது. அதாவது தமிழீழம் என்ற தனியான நாடு அமைப்படும் போதுதான் தமிழர்உரிமையுடன் வாழமுடியும் என்ற கருத்து வலுப்பெறத் தொடங்கியது. விடுதலை உணர்வானது
மு
திர்ச்சி பெற்று அது தமிழ் இளைஞர்கள் மத்தியில் அதீத போராட்ட உணர்வைத் தூண்டவே ஆயுதப் போராட்டமாகத் தோற்றம் பெற்றது. 1970 களின் பிற்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. EPRLF, TELO, PLOTE, EROS, ENDCF என்பனவற்றைக் குறிப்பிடலாம். 1975 இல் இடம்பெற்ற யாழ். மாநகர மேஜர்அல்பிரட் துரையப்பாவின் துப்பாக்கிச்சூட்டுக் கொலையுடன் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. மேலும் 1983 இல் இடம்பெற்ற இராணுவத் தாக்குதலானது சிங்கள - தமிழ் உறவை மேலும் பாதிப்பை உண்டுபண்ணின. இதன் எதிரொலியாக கொழும்பு மாவட்டம் உட்பட ஏனைய சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்துவந்த தமிழ் மக்களுக்கு எதிராக அரசு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இது பொருட் சேதம், உயிர்ச் சேதம் போன்றவற்றை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மனதில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றும் அது கறுப்பு ஜூலை ஆக நினைவுகூரப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு ஏற்பட்ட இந்த விளைவுகளைத் தொடர்ந்து தமிழ் மக்கள் நேரடியாக அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளான வட - கிழக்குப் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு சிங்கள பொலிஸ் நிர்வாகம் என்பனவற்றை அரசு ஏற்படுத்தியது. இத்தகைய செயற்பாடுகள் மேலும் ஆயூதப் போராட்டத்தை ஊக்குவித்தது எனலாம். இவ்வாறு இருப்பது சரியானதன்று என்று சிந்தித்து இந்திய அரசானது இலங்கை அரசையும் தமிழ்த் தரப்பினரையும் ஓர்இணக்கப்பாட்டிற்கு வர ஏற்பாடு செய்தது. 1985 இல் பூட்டான் தலைநகர் திம்புவில் இரு தரப்பினருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அனைத்துக் கட்சிகளினதும் மாநாடு இடம்பெற்ற போதும் அது ஆக்கபூர்வமானதொன்றாக அமையவில்லை. இவ்வாறு இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் முடிவின்றிப் போவதை இந்தியா விரும்பவில்லை. இதற்குத் தீர்வு வழங்க மாகாண முறையுள்ள அரசாங்கத்தைக் கொண்டுவரும் முகமாக இலங்கையுடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்தது. அதனை இந்திய - இலங்கை உடன்படிக்கை என்பர். அதில்
இலங்கைபூராகவும் 9 நிர்வாக மாகாணங்களாக பிரிக்கப்படல் வேண்டும்.
•வட - கிழக்கு இணைந்த மாகாணங்களாக இருத்தல் வேண்டும்.
போன்ற விடயங்கள் இணங்கப்பட்டதுடன் காணி, பொலிஸ், கல்வி, சுகாதாரம் போன்ற அதிகாரங்கள் மாகாணங்களின் அதிகாரத்திற்குட்பட்டவையாக இருத்தல் வேண்டுமென்று கூறப்பட்டது. ஆனால் அதன் ஆயுள் காலமானது சிங்கள பேரினவாதிகளினால் குறைக்கப்பட்டு அதன் விதிகளை மீறி தனது ஆட்சியினையே மேற்கொள்ள முற்பட்டனர். ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மெல்ல மெல்ல மத்திய அரசினை நோக்கிச் சென்றதுடன் பெயரளவில் மாத்திரம் மாகாண அரசு என்ற சொல் நிலைத்திருந்தது. தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஆயுதப் போராட்டம் நடந்த வண்ணமே இருந்தது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் சம பலமாக இருந்த போது மேற்கொண்டு போராட இரு தரப்பினரும் விரும்பவில்லை. அந்தக் காலகட்டத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சி 2001 இல் வெற்றி பெற்று ஆட்சிப் பீடமேறியது. இதனை சாதகமாகக் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்று ஒரு தீர்வினை எட்ட முற்பட முனையும் போது இதற்கு சர்வதேச மத்தியஸ்த குழுவினரின் உதவியையும் வேண்டி நின்றார். வழமையான சர்வதேச உள்நாட்டு மோதல்களில் மத்தியஸ்தராக கடமையாற்றும் நோர்வே நாடு இதன் பொறுப்பை பெற்றுக் கொண்டது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது தமிழர்களுக்கு இடைக்கால தன்னாட்சி வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்ற சிங்களத் தலைமைகள் தயங்கவே சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவினை கண்டது. 2005 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வெற்றி பெற்ற போது இலங்கை அரசியலிலும் ஆயுதப் போராட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 2006 அளவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி கிட்டத்தட்ட 3 வருடங்கள் இடம்பெற்று 2009 மே இல் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் இன ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்தி என்று அரச தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் அதன் செயற்றிட்டமானது மிகவும் மந்தநிலையிலேயே காணப்படுகின்றது. இவ்வாறு பரிணாமம் கண்டு ஆயுதப் போராட்டத்தை கொண்டுவந்த இன முரண்பாடானது முற்றுப் பெறவில்லை. அதாவது தமிழர்கள் சுதந்திரமாகவும் சமவுரிமையுடனும் எப்போது வாழ முடியுமோ அப்போதுதான் இன முரண்பாடு இல்லாது போகும்.
இன முரண்பாட்டுத் தீர்வு
1956 இல் தனிச்சிங்கள சட்ட மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படும்போது கொல்வின் R. De.சில்வா அவர்கள் கூறினார். ' ஒரு மொழி என்றால் இரு நாடு இரு மொழி என்றால் ஒரு நாடு" அதாவது இருபெரும் இனங்களின் மொழியுரிமை மதிக்கப்படுவதுடன் அரசியல் செயன்முறையினால் ஒரு இனத்தவரின் மொழியுரிமை மறுக்கப்படக்கூடாது. எவ்வாறு அவர்கள் உரிமை மறுக்கப்பட்டதாக உணரும் பட்சத்தில் அது முரண்பாடடையும் பிளவையும் ஏற்படுத்தும் என்பது அவரின் சுருக்கம்.
இதனை தந்தை செல்வா அவர்கள் 1976 இல் பாராளுமன்றத்தில் ' இணையாட்சி மூலம் இணைந்து வாழச் சிங்களவர் முன்வராவிட்டால் தமிழருக்கு உள்ள ஒரே வழி தமிழீழம் தான்" . அதாவது இவர் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுள்ள ஆட்சியினை வேண்டி நிற்கின்றார். இன முரண்பாட்டுத் தீர்வு தொடர்பாக பலர் பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். ' தமிழ் மக்களுக்கு சுய ஆட்சியல்லது சுய நிர்ணயத்தை நாம் அங்கீகரிக்கின்றோம். அவர்கள் பிரிந்து செல்ல விரும்பினார்கள். அதையூம் நாம் அங்கீகரிக்கின்றோம்" என ஜே.வி.பி. யின் ஸ்தாபகரான தலைவர் ரோகண விஜய வீர தமது கட்சிக் கொள்கையாக வெளியிட்டார்.
'தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உகந்த வழி - சிறந்த பாதை அதிகாரப் பரவலாக்கலாகும்". ஐ. தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். '2000 ஆம் ஆண்டளவிலாவது பல்கலைக்கழகங்களில் மகாவம்சத்தை கற்பிக்கக் கூடாது" என்று சிவில் சேவை அதிகாரியான திருமதி பி. அபயசேகராவின் 1996 இல் சண்டே ஒப்சேவரில் எழுதியிருந்தார். இன முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் என்றால் பழைய கொள்கைகளுடன் திரிக்கப்பட்டு எழுதப்பட்ட மகாவம்சம் எரிக்கப்பட வேண்டும் என்று சிங்கள புத்தி ஜீவிகள் குறிப்பிடுகின்றனர். சிங்கள புத்தி ஜீவிகள் தொடக்கம் சிங்கள அரசியல்வாதிகள் வரை தமிழர் பிரச்சினை அல்லது இன முரண்பாடு தீர்க்கப்பட வேண்டுமானால் அதிகாரப்பரவலாக்களுடன் கூடிய சமஷ்டி ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். தமிழர் தாம் பெரும்பான்மையாக வாழும் வட - கிழக்கில் சுய கௌரவத்துடன் கூடிய சுதந்திரத்துடன் வாழும் போதே இந்த இன முரண்பாடுகள் தீர்வுக்கு வரும் பொதுவாக முரண்பாடுகள் இணக்கப்பாட்டினூடான தீர்வை எட்டுவதன் மூலமே ஏற்படக் கூடியது. இதற்கு சிறந்த ஓர் உதாரணம் உள்ளது. அயர்லாந்து - பிரித்தானிய முரண்பாடு இணப்பாட்டுடன் தீர்வுக்கு வந்ததைக் குறிப்பிடலாம். இந்த இணக்கப்பாட்டு தீர்வினை ஏற்படுத்த இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
முடிவுரை
இலங்கையில் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட இன முரண்பாடானது தமிழ் தலைவர்களின் மேலாவித்தனமும் சிங்கள அரசியல் தலைமைகளின் அதிகார வேட்கையும் மேலும் வளர்க்கப்பட்டன. சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் இலங்கையர் என்ற உணர்ச்சியில் இருந்த இனங்களை இனவாதத்திற்கு கொண்டு போய் சேர்த்தன. அதுவரை தேசியவாதம் பேசியவர்கள் சிங்கள பேரினவாதம், தமிழ்த் தேசிய விடுதலை என்று தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டனர்.
ஆரம்பத்திலேயே மொழி ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்குமாயின் அது இன்று இத்தகைய இன விரிசலையும் பேரழிவையும் இலங்கையில் ஏற்படுத்தியிருக்காது. இத்தகைய முரண்பாட்டிற்கு சகல தரப்பினரும் பொறுப்புக் கூறுவதுடன் இலங்கையின் அபிவிருத்தி இன ஐக்கியம் என்பனவற்றை கவனத்தில் கொண்டு கூட்டுணர்வுடன் செயற்பட அர்ப்பணிப்புடன் ஒன்றிணைய வேண்டிய காலம் இதுவாகும்.


0 Comments