பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் கால்பந்தாட்ட வீரர்கள் நோன்பை அனுஷ்டித்துக்கொண்டு போட்டிகளில் கலந்துகொள்கின்ற 2014 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் பேசுபொருள்களில் ஒன்றாக, நோன்பும் விளையாட்டும் குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மழையாகப் பொழிகின்றது எனின் மிகையல்ல.
அதிகாலை முதல் மாலை வரை தண்ணீரையும் உணவையும் தவிர்ந்துகொள்ளும் உலகலாவிய முஸ்லிம் கால்பந்தாட்ட வீரர்களின் நடத்தை இக் கேள்விகளை முஸ்லிமல்லாதவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், ஐக்கிய அமெரிக்கா, மிச்சிகன் பிராந்தியம், டியர்பர்னில் இருந்து வரும் செய்தியொன்றில், "அது உங்களை நெடுநேரம் நிலைக்கச் செய்கின்றது - எந்தவொரு நிலைமையிலும் உங்களால் விளையாட முடியும்" என கமால் ஸஈத் (டியர்பர்ன், மிச்சிகன் மாகாணம், ஐக்கிய அமெரிக்கா) CBS Detroit ஊடகத்திற்கு திங்கட்கிழமை, ஜூன் 30 தெரிவித்துள்ளார்.
இந்த வார ஆரம்பத்தில், மிச்சிகன் யெமன் விளையாட்டுக் கழகத்தின் முஸ்லிம் வீரர்கள் முஸ்லிமல்லாதவரைக் கொண்ட அணியொன்றை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது. உணவினதும் தண்ணீரினதும் தேவை அற்ற நிலைமையில் விளையாடுவது தமக்கு சாதகமாக இருந்ததாக அவர்கள் கூறினார்கள்.
"உங்களுக்குத் தண்ணீர் தேவைப்படாது. உணவுப் பொருட்களின் மூலம் (சக்தியைப்) பெற்றுக்கொள்கின்றீர்கள். இது உங்களை உறுதியாக்குகின்றது - நீங்கள் நிறைய சாதிக்கலாம்" என்றும் கமால் கூறினார்.
"நீங்கள் தண்ணீர் தேவை என்றோ, அதற்கான இடைவேளை வேண்டுமென்றோ சிந்திக்க மாட்டீர்கள், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள்" எனக் கூறும் பஸ்ஸாம் அல்சாயி (யெமன் விளையாட்டுக் கழகம்) நோன்பு நோற்றல் மொத்த கவனக்குவிப்பும் ஓரிடத்தில் மையப்படுவதினால் பந்தை உதைப்பது (கோல் போடுவது) இலகுவாகின்றது, எனக் கூறுகின்றார்.
மேலும், கடும் தாகம் ஏற்படும்போது, தண்ணீரைக்கொண்டு தலையை நனைப்பதாகவும் அவர் கூறினார்.
"நீங்கள் அதை பெரிதாக நினைக்காத போது, அதனை வெற்றிகொள்கின்றீர்கள், அது இலகுவாகி விடுகின்றது" என அல்ஸாயி குறிப்பிடுகின்றார்.
மூலம்: OnIslam.net
தமிழாக்கம்: Hihsam Hussain, Puttalam

0 Comments