இஸ்ரேலுக்கும் பலஸ்தீன காஸா
பிராந்தியத்திலுள்ள போராளிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தம்
ஒன்றை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க
ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹுவுடனான தொலைபேசி உரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காஸா தொடர்பான இஸ்ரேலின் செயற்பாடு முன்னேற்றமடைந்துள்ளதாக நெட்டான்யாஹு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.பலஸ்தீன
காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை வான்
தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 90 க்கும் மேற்பட்ட
காஸா பிரதேசவாசிகள் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள்
தெரிவித்தனர்.
அத்துடன் இஸ்ரேலின் இந்த வான் தாக்குதல்களில் 600 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கூறுகிறது.
காஸா பிராந்தியத்திலுள்ள 100 க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது
வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பலஸ்தீன போராளிகள்
இஸ்ரேல் மீது தொடர்ந்து- ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு
வருவதாகவும் இஸ்ரேல் தெரிவிக்கிறது.
எனினும் இஸ்ரேல் தரப்பில் எவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்படவில்லை.அதேசமயம்
தென் லெபனானிலிருந்து குறைந்தது ஒரு ஏவுகணை வட இஸ்ரேலுக்குள்
வெள்ளிக்கிழமை ஏவப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலிலும் எவரும்
உயிரிழந்ததாக அறிக்கையிடப்படவில்லை.
இஸ்ரேலின் மெதுலா மற்றும் கிர்யத் ஷமோனா நகர்களுக்கிடையில் கபர்வுவல்
நகருக்கு அண்மையிலுள்ள திறந்த வெளியில் அந்த ஏவுகணைகள் விழுந்து
வெடித்துள்ளன.
காஸாவிலுள்ள ஹமாஸ் போராளிகளின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு
பதிலடி கொடுக்கும் முகமாகவே இஸ்ரேல் வான் தாக்குதல்களை
ஆரம்பித்தது.
பலஸ்தீனர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் 3 இஸ்ரேலிய இளைஞர்கள்
படுகொலை செய்யப்பட்டமை, அதற்கு சில நாட்கள் கழித்து பலஸ்தீன இளைஞர்
ஒருவர் கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்களையடுத்து இஸ்ரேல் மற்றும்
பாலஸ்தீன பிராந்தியத்தில் கடும் பதற்ற நிலை நிலவுகிறது.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க
ஜனாதிபதி பராக் ஒபாமா, இஸ்ரேல் காஸா பிராந்திய மோதல் மேலும்
தீவிரமடையும் அபாயமுள்ளமை குறித்து கவலை தெரிவித்துள்ளதுடன்
பொதுமக்களின் உயிரைப் பாதுகாத்து அமைதியை மீள நிலை நிறுத்துவதற்கு
தேவையான அனைத்தையும் சகல தரப்பினரும் மேற்கொள்ள வேண்டிய
தேவையுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்டே மற்றும் ரஷ்ய
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரும் இஸ்ரேலிய காஸா பிராந்தியத்தில்
யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரியுள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இஸ் ரேலிய
மற்றும் பலஸ்தீன போராளிகள் கட்டுப்பாட்டை பேண வேண்டும் எனவும் பிறிதொரு
முழுமையான போருக்கு முயற்சிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice


0 Comments