Subscribe Us

header ads

சமூக நல்லிணக்கத்துக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக அவசியம்!


சமூக நல்லிணக்கத்துக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக அவசியம்!
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
சமூக நல்லிணக்கத்துக்கு ஊடகங்களின் சிறந்த பங்களிப்பு மிக அவசியமாகும். பேருவளை அசம்பாவிதங்களை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதற்கு ஜனாதிபதியும், அரசாங்கமும், குறிப்பாக ஊடகங்களும் அளித்த பங்களிப்புக்கு நன்றி பாராட்டுகின்றேன் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
'சமூக ஒருங்கிணைப்பும் ஊடக பாவனையும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கொன்று இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

இங்கு அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கூறியதாவது- ஊடக பாவனை குறித்து எனக்கு எவ்வித அனுபவமும் இல்லை. அதைப்பற்றி ஊடக அமைச்சரும், தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும் தான் நன்கறிவர் இங்கு வருகை தந்துள்ள விரிவுரையாளர்கள் அதனை நன்கு விளக்குவர். நான் கூறுவதெல்லாம் சமூக நல்லிணக்கம் பற்றி தான்.

இனங்களுக்கிடையிலான மோதல்கள் தொன்று தொட்டு இடம்பெற்றுள்ளது. ஆனால் சிலர் இத்தகைய அசம்பாவிதங்களை பெரிது படுத்தவே விரும்புகின்றனர். உதாரணத்துக்கு இங்கு ஒன்றை குறிப்பிடுகிறேன். கரையோரப்பகுதி ரயிலில் சென்றால் இடையிடையே ரயில் நிலையங்களின் பெயர்களை வாசிப்பது வழக்கம். களுத்தறை கூடாக ரயிலில் செல்லும் போது 'தும்ரிய பொல அங்க எக்க'( ரயில் நிலையம் இலக்கம் 1) என்ற பெயரில் ஒரு இடம் உண்டு. இதற்கு அப்பெயர் வந்தது எப்படி என்பதையும் அமைச்சர் இங்கு விளக்கினார்.

ஸ்கடுவை, பொத்துபிட்டிய ஆகிய இரு பகுதிகளை இணைக்கும் இடம் என்பதால் இரு சாராரும் தமது பகுதியின் பெயர் வர வேண்டும் என வலியுறுத்தினர். இறுதியில் ஆங்கிலேயர் இதற்கு தும்ரிய பொல அங்க எக்க (ரயில் நிலையம் இலக்கம் 1 ) என்ற பெயரையே சூட்டினர். பேருவளை பகுதிக்கு அண்மித்த பகுதி என்பதால் தாம் இதனை ஞாபகப்படுத்துவதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

கிராமங்களில் மட்டுமல்ல, பாடசாலைகளிலும் இவ்வாறான மோதல்களை பிங் மெச் (Big Match )நடைபெறும் போது காணலாம். எனவே சகல பிரிவுகளிலும் சமூக நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். இந்த நல்லிணக்கத்தை இல்லாமல் செய்வதற்கும் ஒரு சாரார் இருக்கின்றனர். 1954ஆம் ஆண்டில் இனங்களுக்கிடையில் மோசமான முறையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

 நாட்டில் பயங்கரவாதம் இருந்த போதிலும் கூட   ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி காலத்தில்  அவ்வாறு இன வாத மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை.மக்களிடையே இத்தகைய இன பேதங்கள் எதுவுமில்லை. ஒரு சிலர் தான் இவ்வாறான மோதல்களை உண்டு பண்ண முனைகின்றனர். பேருவளை அசம்பாவிதத்தை அடுத்து நான் மல்வானைக்கு மிகவும் தர்ம சங்கடத்துடன் தான் சென்றேன். ஆனால் இங்குள்ள மக்கள் என்னை இன்முகத்துடன் வரவேற்றனர். வெளியாரின் தலையீடுகளில் சிக்காமல் எல்லா பிரிவுகளிலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லை இங்கு உரையாற்றுகையில், இன்றைய ஊடகங்கள் முதலாத்துவ வாதிகளின் வலையில் சிக்கியுள்ளது. எவரோ ஒருவரின் தனிப்பட்ட விமர்சனங்களை வெளிப்படுத்துவதற்காகவே சமூக ஊடகங்கள் செயல்படுகின்றன. ஊடகங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தான் நாம் இன்று பேச வேண்டும். இந்த கருத்தரங்கின் மூலமாக  உருவாகும் சமூக இணக்கப்பட்டுக்கும், துரத்தில் தெரியும் நல்ல தருணத்துக்காகவும் வாழ்த்து கூறுகிறேன் என தெரிவித்தார்.

மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் கலாநிதி சரித்த ஹேரத் இங்கு உரையாற்றுகையில், முக்கியமான சந்தர்ப்பத்தில், தேவையான ஒரு தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெறுவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு எனவும் அபிவிருத்தியை நோக்கி செல்லும் எமது நாட்டின் பயணத்துக்கு ஊடகங்கள் தமது பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல இங்கு வரவேற்புரை நிகழ்த்துகையில் ஊடகங்கள் எமது அன்றாட வாழ்க்கையை குணப்படுத்துவதுடன் நோயாளியாகவும் ஆக்குகிறது என்றார்.

மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் ஊடகத்துறை மேற்பார்வை எம்பி அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர் தகவல் பணிப்பாளர் வசந்த பிரிய ராமநாயக்க ஆகியோரும் இந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

0 Comments