நாட்டிலுள்ள எந்தவொரு குழுவுக்கும் சட்டத்தைக் கையிலெடுக்க இடமளிக்கக் கூடாது. இந்த நாட்டிலுள்ள சாதாரண சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாகவுள்ள யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் நாட்டின் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு அறிவிப்புச் செய்தார்.
நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்து தேசிய ஊடகமொன்றினூடாக உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை ஏற்படுத்தும் சகல தனி மனிதர்களுக்கும், குழுக்களுக்கும் எதிராக சட்டத்தை உச்ச அளவில் நடைமுறைப்படுத்துவதற்கு சகல பாதுகாப்பு துறையினரும் செயற்பட வேண்டும்.
தேசிய ரீதியில் சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் சகலரதும் பங்களிப்பு இன்றியமையாதது. இதற்காக அடுத்த சமயத்தை மதித்து, இனத்தை மதித்து நடப்பது அவசியமாகும். வன்முறை மிருகங்களின் பண்புகளாகும். தேசிய சிறப்பை ஏற்படுத்த அடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் முடியாது. அடுத்தவர்களை மதிப்பதன் மூலமே அது சாத்தியமாகும்.
நாட்டிலுள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழர்கள் ஆகிய சகலரும் தேசிய கீதத்தில் இசைப்பது போன்று ஒரே தாயின் பிள்ளைகள் என்ற எண்ணத்தோடு சகோதரத்துவமாக கைகோர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட சமாதானத்தை மீண்டும் கேள்விக் குறியாக்கும் செயற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. நாட்டுக்குள் சர்வதேச சக்திகள் பல செயற்பட்டு வருகின்றன. இவை பல்வேறு வழிகளிலும் முற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படுமாறு நாட்டு மக்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் வேண்டுகோள் விடுத்தார். (மு)


0 Comments