Subscribe Us

header ads

மாற்றங்களையும் சவால்களையும் நோக்கி கற்பிட்டி பிரதேசம் (பகுதி 4 ).......

மாணவர்கள்

பாடசாலையானது மாணவர்களுக்குரியது. மாணவர்களுக்காகவே  அனைத்தும் நடைபெறல் வேண்டும். பாடசாலையின் எழுச்சிக்கும்  இருப்புக்கும் அளவுகோளாக விளங்குபவர்கள் மாணவர்களும் அவர்களின்  சாதனைகளுமே.

மாணவர்கள் வெற்றுக்காகிதமாவர். இவ்வெற்றுத தாளில் 13 வருடங்கள்  பாடசாலை பதிந்தவற்றையே பிரதிபலிக்கின்றனர். கூடவே சமூகம்,   சமய நிறுவனங்கள், ஊடகங்கள் என்பனவும் பல்வேறு விடயங்களை  இவ்வெற்றுக் காகித்தில் பதிந்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

எனவே மாணவர் சமூகம் மீது குறைகாண்பது எவ்வகையிலும்  பொறுத்தமற்றதாகும். சமூகமும் பாடசாலையும் விட்ட தவறுகளே  அவர்களின் சமகால நிலைமைக்கு காரணமாகும். 13 வருடங்கள்  பாடசாலையில் கல்விகற்ற பின்னர் அம்மாணவர்கள் பாடசாலைக்கு  வழங்கும் பிரதிபலிப்பானது மிகவும் தாழ்ந்த மட்டத்திலாகும். இதற்கான  பொறுப்பை பாடசாலை ஏற்கவேண்டும்.

மாணவர்களின் நடத்தைக்கோலம் தொடக்கம் பரீட்சை பெறுபேறுகள்  யாவும் பாடசாலையால் நெறிப்படுத்தப்பட்டிருப்பின் பாடசாலை  மீதான அவர்களின் மீள்பார்வை காத்திரமானதாக விளங்கியிருக்கும்.  துரதிஸ்ட்வசமாக அந்நிலையினை பாடசாலை இழந்து நிற்கின்றது. அதனை   மீளக் கட்டியெழுப்பும் வரையில் மாணவர்களின் போக்குகள் நிச்சயமாக  பாடசாலையின் கட்டுப்பாட்டினை இழந்தே காணப்படும். ஏனெனில்  தமது எதிர்காலத்தை வடிவமைத்து வாழவைக்கும் நம்பிக்கையை  மாணவர்களிடத்திலும் – பெற்றார்களிடத்திலும் இழந்த நிலையில் உரிய  மரியாதையை எதிர்பார்ப்பது யதார்த்தத்திற்கு முரணானதாகும்.

தமது ஆளுமைகளை தொழில் வாண்மைகளை இழந்துவிட்ட  அல்லது பிரயோகிக்கத் தெரியாத ஆளணியினரின் பலவீனங்களை  மறைக்க மாணவர்களிடையே முறையற்ற அல்லது அனாவசியமான  விட்டுக்கொடுப்பு நடத்தைகளை மாணவர்களுடனான தோழமை –  நட்பு என்ற பேரில் கடைப்பிடித்து அவர்களிடையே தமது இருப்பை  உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். ஒருவகையில் பாடசாலையின்  ஆளணியினரின் இருப்பை உறுதி செய்து அவர்களை மாணவர்களே தம்வசப்  படுத்தியுள்ளனர் எனலாம். ஆசிரியர் மாணவர் இடைத்தொடர்புகளை  தமது தனிப்பட்ட நலன்களுக்காக பாவித்துக் கொள்கின்ற ஆளணியினரின்  கடந்தகால – நிகழ்கால போக்குகள் மிகமோசமான எதிர்விளைவுகளை  ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்மோசமான முன்னுதாரணங்கள் இன்று வரை பாடசாலையாலும்,  சமூகத்தாலும் – பாடசாலை ஆளணியிராலும் மாற்றப்படாமல்  அங்கீகரிக்கபட்ட வகையிலேயே காணப்படுகின்றன. இதனால் தொடர்ச்சியாக  மாணவர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் பெற்றார்களும்  கல்பிட்டி பிரதேசமும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

பெற்றார்கள்

பாடசலையின் அபிவிருத்திக்கு மட்டுமன்றி இருப்புக்கும்கூட  பெற்றார்களின் பங்களிப்பானது அளப்பரியதாகும். இவர்கள் சமூகத்தின்  அங்கத்தவர்கள் என்பதையும் மறந்து விடலாகாது. இவர்களில்  95வீதமானோர் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் என்பதையும்  குறிப்பிட்டாக வேண்டும். இவர்களுக்கு பாடசாலையால் வழங்கப்பட்ட  கல்வி அறிவினதும், மனப்பாங்கினதும், சமூக உணர்வினதும்  தரத்திற்கேற்பவே பாடசாலைக்கான இவர்களின் எதிர்வினைகளும் உள்ளன  என்பதை கவனத்திற்கொள்வதும் அவசியம். இத்தகைய பின்னணியிலேயே  இவர்களின் செயற்பாடுகளை நோக்க வேண்டும். அவை பின்வருமாறு  அமைந்துள்ளமையை அவதானிக்கலாம்.
1. பாசாலையானது தமது பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியில்  திருப்திகரமான பங்களிப்புகளை வழங்குவதில் பின்னடைந்துள்ளதாக  கருதுகின்றனர். சமூக அந்ஸ்த்திற்கேற்பவே பிள்ளைகளுக்கு பாடசாலை முக்கியத்துவமளிக்கின்றது என கருதுகின்றனர். ஆசிரியர்களின் கவனம் – அக்கறை தமது பிள்ளைகளில்  முழுமையானதாக இல்லையென கருதுகின்றனர்.

2. ஆசிரியர்கள் தமது பணிகளை முழுமையாக மேற்கொள்வதற்கான   முழுமையான தகைமையை பெற்றில்லை என கருதுகின்றனர். தமது பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு வகையில் அநீதி  இழைக்கப்படுவதாக உணர்கின்றர்.

3.  தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைப்பதிலான  தயக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

4. பாடசாலை கட்டமைப்பு மீதான அவநம்பிக்கையை கொண்டுள்ளனர்.

5. பாடசாலையின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்புக்கான வழிவகைகளை  அல்லது அவை எவ்வாறானதாக அமைய வேண்டுமென்பதில்  தெளிவின்றி உள்ளனர்.

6. தமது பிள்ளைகளின் ஒழுக்க விடயங்களில் கட்டுப்பாடுகளை   இழந்தவர்களாக காணப்படுகின்றனர்.

7. பாடசாலை தொடர்பான விமர்சனங்களை எவ்விதமான  அடிப்படையுமின்றி முன்வைக்கின்றனர்.

இத்தகைய நிலைப்பாடுகளை பெற்றார் பிரதிபலிப்பதற்கான  அடிப்படையான அம்சங்கள் பாடசாலை மட்டத்திலான தவறுகளாலும்,   முன்னெடுப்புக்களாலும் ஏற்பட்டவையாகவே உள்ளன. பொருளாதாரம்,  இருப்பு,தனித்துவம் போன்றவற்றை இழந்த ஒரு சமூக்கக்கட்மைப்பு  தனது இயலாமையும் தோல்வியையும் மறைப்பதற்காக எதிர் தரப்பு  மீதான குறைகளையும் மூர்க்கத்தனமான எதிர்ப்புக்களையுமே  வெளிப்படுத்தி நிற்கும். விவேகமான வெளிப்பாடுகளை அதனிடமிருந்து  எதிர்பார்ப்பது யதார்த்தத்தில் முரணாகும்.

இப்பின்னணியிலேயே பாடசாலையால் முன்வைக்கப்படும்  எல்லா விதமான அபிவிருத்தித் திட்டங்களையும் சந்தேகத்துடன்  நோக்குவதுடன், அவற்றின் சாதகமான விளைவுகளில் சிறிதேனும்  அக்கறை செலுத்து வதில்லை. சீர்திருத்த நடவடிக்கைகளால்  தமக்கேற்படும் அசௌகரியங்களை மட்டும் கருத்திற் கொண்டு  அவற்றை முழுமையாக நிராகரித்து விடுகின்றனர் அல்லது மலினமாக்கி  விடுகின்றனர். பாடசாலையால் முன்வைக்கப்பட்ட சகல விதமான  அபிவிருத்தித் திட்டங்களும் தோல்வியிலோ அல்லது உயிரோட்டமற்று  நம்பிக்கையிழந்த வெளிப்பாடுகளையோ கொண்டுள்ளன.

பாடசாலையானது பெற்றார்களை கறிவேப்பிலையாக பாவிக்க  முற்படுகின்றது. பெற்றார்களிடமிருந்து பங்களிப்புக்களை பெறுவதுடன்  அவர்களை மறந்து விடுகின்றது. அவர்களை கௌரவிப்பதில் –  உபசரிப்பதில் அசமந்தமான போக்கையே வெளிப்படுத்துகின்றது.  பெற்றார்களுடனான கலந்துரையாடல்கள் ஒருபக்க கருத்துப்  பரிமாற்றத்துடன் நிறைவடைவதை அவதானிக்கலாம். தீர்மானங்களை  நிறைவேற்றுகைளில் பெற்றார்களின் கருத்துக்களை உள்வாங்கிய  தன்மையை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

இதற்கமைவாகவே பாடசாலையானது பெற்றார் மீதான பார்வை  செலுத்த வேண்டியுள்ளது. இதற்கமைவான வேலைத்திட்டங்களை  முன்னெடுக்கும் போதே பெற்றார்களின் பங்களிப்பை உறுதிப்படுத்திக்  கொள்ள முடியும்.

பழைய மாணவர் சங்கம் OBA

பாடசாலையொன்றின் அபிவிருத்தியில் பழைய மாணவர் சங்கம்  என்பது பாரியதொரு உந்துசக்தியாகும். ஆயினும் இவ்வுந்து சக்தியை  எமது பாடசாலை இழந்துள்ளமை பாரிய பின்னடைவாகும். பழைய  மாணவர் சங்கத்தினூடாகவே பெற்றாரின் பங்களிப்புகள் பாடசாலைக்கு  ஒருங்கிணைக்கப் படுகின்றன. இளைய தலைமுறையினரின்  செயலூக்கங்கள் புதிய சிந்தனைகள் புதிய வழிகாட்டல்கள்  என்பவற்றை பாடசாலையின் அபிவிருத்திக்காக ஒருங்கிணைத்துக்  கொள்ளும் ஒரு பொறிமுறையாக பழைய மாணவர் சங்கம்  விளங்கவேண்டும்.

இத்தகைய பழைய மாணவர் சங்கம் இப்பாடசாலைக்கு எட்டாக்கனியாக  விளங்குவதற்கான பிரதான வகிபாகம் பாடசாலையையே சார்கின்றது.  தமது அறிவு, திறன் மனப்பாங்குகளை வளர்த்து சமூகத்திற்கு  அடையாளப் படுத்திய பாடசாலை தொடர்பாக இவர்கள் கொண்டுள்ள  மனப்பாங்கினையே முதலில் கருத்திற் கொள்ள வேண்டும். பாடசாலைக்  கட்டமைப்பு தங்கள் வாழ்வில் எங்கோ ஓரிடத்தில் தவறிழைத்துள்ளதாக  உணர்கின்றனர். இத்தகைய பின்னணியில்தான் பழைய மாணவர்  சங்கத்தினூடாக தமது பங்களிப்புகளை வழங்குவதில் தவறுகின்றனர்.  தமது தற்போதைய நிலைமைக்கு பாடசாலையால் வழங்கப்பட்ட  வழிகாட்டல்கள் திருப்பதிகரமானதாக அமையவில்லையென  உணர்வதோடு, தமது சமகால நிலைமைக்கு பாடசாலையின்  பலவீனங்களும் காரணமென்பதை உணர்ந்தவர்களாக சலிப்புடன்  காணப்படுகின்றனர். அத்தோடு பாடசாலையின் சமகால போக்குகளை  முறைமைப்படுத்துவதிலான முயற்சிகளிலும் நம்பிக்கையீனங்களை  கொண்டுள்ளதால் காத்திரமான பங்களிப்புகளை உறுதிப்படுத்த  முடியாதுள்ளது.

குறிப்பாக பாடசாலைத் தலைமைத்துவங்களின் நடவடிக்கைகள்  பாடசாலையை சரியான பாதையில் இட்டுச் செல்லுமா என்பதிலும்,  தமது ஆலோசனைகளை நிருவாகம் கருத்திற் செயற்படுமளவுக்கு  தலைமைத்துவ பண்புகளுடன் அணுகுவதில்லை என்றும் ஒரு  கருத்தியலை கொண்டுள்ளனர். புதிய அணுகுமுறைகளையும் புதிய  பாதையையும் சிறந்த முன்னுதாரணங்களுடன் பின்பற்றுவதில்  சமகால தலைமைத்துவங்கள் முன்வந்ததில்லை. அதற்கான அணுகு  முறைகளையும் வழிவகைகளையும் தெளிவாக வரையறுத்துக்  கொள்ளவுமில்லை. இதனால் பாடசாலையின் பெற்றார், ஆசிரியர்கள்,  பழைய மாணவர்கள், மாணவர்கள், மற்றும் நலன்விரும்பிகள் என  அனைவரும் பாடசாலையின் முன்னேற்றத்தில் தமது வகிபாகம்  அதற்குரிய எல்லை, பொறுப்புகள், கடமைக்கூறுகள், காலஎல்லை,  வசதியளிப்புகள் என தேவையான பல்வேறுபட்ட விடயங்களையும்  உள்ளடக்கிய விரியான வேலைத்திட்டங்களை முன்வைத்து இயங்கும்  பண்பினை வெளிப்படுத்தியதில்லை.

இந்நிலைமையில் பழைய மாணவர் சங்கமானது செயலற்றத்  தன்மையில் நிலைபெற்று விடுகின்றது. இதுவே ஏனைய பாடசாலை  சார்ந்த அமைப்புக்களினதும் நிலையாகின்றது. ( இந்நிலைமையினை  மாற்றியமைத்து சவால்களுடன் இயங்கும் வல்லமைமிக்க  பிரசைகளை உருவாக்குவதில் பாடசாலையின் தோல்வியையே இது  வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.  

மாற்றங்கள் தொடரும் .....

இத்தொடரை பதிவிட்டுக் கொண்டிருக்கும் சமகாலத்தில் பாடசாலையின்  தலைமைத்துவம் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னைய  தலைமைத்துவத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பலவீனங்கள்  குறைகள் முன்வைக்கப்பட்டு புதிய தலைமைத்துவத்தை  எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் முன்னைய தவறுகளை திருத்திக்  கொள்வதற்கும் முன்னோக்கிய திட்டமிடல்களை அல்லது வேலைத்  திட்டங்களை கொண்டதாக தம்மை தயார் படுத்திய நிலையை  அவதானிக்க முடியவில்லை.

நிருவாக குழுவினரும் அதிபரும் வெறுமனே கூடிக் கதைத்து  திட்டங்களை அவரவர்மனதிற்கள் தயாரித்துக் கொண்டு காற்றில்  எழுதிச் செல்லும்போக்குகள் மீளவும் தொடருமா? என்பதை காலம்தான்  தீர்மானிக்க வேண்டும்.

முன்னேற்றத்திற்கான திட்டங்களை பாடசாலையின் ஒவ்வொரு  பகுதிக்கும் என அணுஅணுவாக திட்டமிட்டு அதனை ஆவணப்படுத்தி,  உரிய நபர்களுடாக அமுலாக்கம் செய்வதற்கான முறையான  செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அவற்றை நல்லாட்சிக்கான  பண்புகளுடன் வெளிப்படுத்தி நிற்பதும் அவசரத்தேவையாகும். தேவையுணர்ந்து செயற்படுமா அல்-அக்சாவின் புதிய

தலைமைத்துவம்????

முன்னைய பதிவுகளுக்கு

 மாற்றங்களையும் சவால்களையும் நோக்கி கற்பிட்டி பிரதேசம் .......
http://www.kalpitiyavoice.com/2014/03/blog-post_20.html 

மாற்றங்களையும் சவால்களையும் நோக்கி கற்பிட்டி பிரதேசம் (பகுதி 2 )....... 
http://www.kalpitiyavoice.com/2014/04/2.html

மாற்றங்களையும் சவால்களையும் நோக்கி கற்பிட்டி பிரதேசம் (பகுதி 3 ).......
http://www.kalpitiyavoice.com/2014/05/3.html



Post a Comment

2 Comments

  1. சிறந்த கருத்துக்கள் சமுக மாற்றத்துக்கு அவசியமானது. இக்கட்டுரை எழுதியருக்கு நன்றி.

    ReplyDelete
  2. dear friend . please remove this photo

    ReplyDelete