Subscribe Us

header ads

புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த வயது 35 க்கு மேல் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி

(TPT Media)

புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த வயது 35 க்கு மேல் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, 2014.06.20 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சாகிரா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

முன்னாள் பு.கா.ச. தலைவர் அப்துல் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இப் போட்டியில் லிவர்பூல் அணி 1 - 0 கோல் வித்தியாசத்தில் வெம்பில்டன் அணியை வெற்றி பெற்றது. ஆட்டம் ஆரம்பித்து 21 ஆம் நிமிடத்தில் வெற்றிக்குரிய கோல் போடப்பட்டது.

போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளாக 'இனவாதத்தை மறுதலிப்போம்' என்ற சுலோகத்தை இரு அணியினரும் ஏந்தி தமது எதிர்ப்பைக் காட்டியதுடன், அளுத்கம இனவாத தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியைச் செலுத்தினர். இந் நிகழ்வில் பார்வையாளர்களும் பங்கேற்று தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

லிவர்பூல், விம்பில்டன், யூனைடட், ட்ரிபல் செவன் ஆகிய நான்கு அணிகள் பங்குபற்றிய இச் சுற்றுப் போட்டி புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகளை இறுதிப் போட்டியில் மோதவிட்டு அதில் கோல் அடிப்படையில் வெற்றிபெறும் அணிக்கு சவால் கிண்ணமும் நிதிப் பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற அணிக்கு நிதிப் பரிசு மட்டும் வழங்கப்பட்டது.

பி.எம். ஹிசாம் பிரதம நடுவராகவும் துணை நடுவர்களாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.எஸ்.எம். நவ்பி ஆகியோர் கடமையாற்றினர். புத்தளம் கா.ச. தலைவர் எம். ஷபீக் உட்பட நிருவாகிகளும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்களும் சமுகமளித்திருந்தனர்.

தற்போது பிரேசில் நாட்டில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கு உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அழைப்பை ஏற்று விஜயம் செய்த இலங்கை பிரதிநிதிகள் குழுவில் அங்கத்துவம் வகித்த ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளரும் புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளருமான ஜே.எம். ஜவ்சிக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட உலக கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால்பந்தும் தங்க நாணயமும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

எம்.யூ.எம். சனூன், சலீம்கான் ஆகியோர் விளையாட்டு வர்ணனையையும் நிகழ்ச்சித் தொகுப்பினையும் வழங்கினார்கள்.

தொகுப்பும் படங்களும்: Hisham Hussain 










Post a Comment

0 Comments