Subscribe Us

header ads

புத்தளம் காலாவி ஆற்றில் இருக்கும் ஜின் அப்பாவின் செய்தி

தனியாக ஒருநாள் ஆற்றுக்கு போகவேண்டும் என்று எனது வண்டியிலே நான் சென்றேன். அங்கு எனக்கு (ஜின்) அப்பாவோடு கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த கதையைத்தான் எழுத்துருவில் தந்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்கள் பின்னூட்டத்தை எழுதுங்கள்.

தனியாக சென்ற எனக்கு ஆற்றின் தொலைவில் ஒப்பாரி சத்தம் கேட்டது, அந்த சத்தத்தை பின் தொடர்ந்து சென்றேன். அப்போது தான் கண்டேன் அந்த உருவத்தை. இறைவனின் படைப்பிற்கு இப்படி ஒர் ஆற்றல் இருப்பதை அழகாக உணர்ந்துகொள்ள அது ஒரு சந்தர்ப்பம்.

இருபக்கமும் மதுரை மரங்கள் அடர்த்தியாக உயரமாக வளர்ந்து இருந்தன, அதன் அடியில் மணல் மலைகள் விளையாடிக் கொண்டிருந்தன. நடுவே சலசல ஓசையோடு இனிமையாய் ஓடிக்கொண்டிருந்தது காலவி நதி. மயில்கள் நதியின் எல்லையில் நின்று ஜாக்கிரதையாக நீரை குடித்து கொண்டிருப்பதும், மக்களின் பாவனைக்குட்பட்டு மிஞ்சிய பொருட்களை குரங்குகள் எடுத்து விளையாடுவதும் எனது இயற்கை ரசனைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதால் அப்படியே நீருக்குள் மூழ்கி ஆறுதாலக குளிக்க முற்பட்டேன். நீருக்குள் மூழ்கிய என்னை ஆறு கைகள் அப்படியே ஆற்றின் ஆழத்திற்கு இழுத்துச் சென்று விட்டது, அந்த கைகளின் பிடியில் எனக்கு ஒரு பெரிய கோபமும் ஆத்திரமும் அப்படியே அச்சடித்தது போல தெரிந்ததன!

உடனே ஆழத்தில் இருந்து ஆற்றின் மேல்பகுதிக்கு வேகமாக வந்து ஆற்றின் கரையை தேடி சென்று ஒரு மரத்தின் வேரை பிடித்து அப்படியே அதன் நிழலில் கொஞ்சம் எனது பயத்தை போக்கினேன். அப்போது எனக்கு நமது புத்தளத்து குடும்பம் ஒன்று ஆற்றிற்கு வந்திருப்பது போல சத்தம் கேட்டது. பயத்தின் நடுக்கத்தை அடக்கி வைத்து கொஞ்சம் இடைக்கண்ணால் பார்த்தேன் அங்கு ஓலையால் மேயப்பட்ட கொட்டுகளும் மாடுகளுமாய் பலர் குளித்து கொண்டிருந்தார்கள். சுமார் 30 நாட்கள் தொடர்ச்சியாக தங்கி இருக்கிறவர்கள் போல தென்பட்டது. பிறகு தான் புரிந்துகொண்டேன் நான் சுமார் 60 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டிருக்கிறேன் என்று!

வரலாறுகளை தேடிப்படிப்பதில் கூடிய ஆர்வம் கொண்டதால் “எப்படி இது நிகழ்ந்திருக்க முடியும்” என்ற கேள்விக்கு பதில் தேடாமல், எப்படி இவர்கள் ஆற்றிலே இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய நான் அமர்ந்திருந்த அந்த மரத்தின் உச்சியில் ஏறி யாருக்கும் தெரியாமல் அமர்ந்து கொண்டேன்! ஏறிய களைப்பும் சூரியனின் மறைவும் என்னை அப்படி தூங்கச் செய்தது.

சுபஹு தொழுகைக்கான அதான் சொல்லும் சத்தம் கேட்டு விழித்தேன்; அங்கு ஒரு வயதான அப்பா எல்லோருக்கும் நடுவில் நிற்று கொண்டு சுமார் எட்டுத் திசைக்கும் கேட்கும் அளவு பாங்கு சொல்கிறார். உடனே எல்லோரும் எழுந்து ஆற்றுக்குள் இறங்கி உழு எடுத்துவிட்டு தொழுகைக்கு தயாராகின்றனர். பெண்களும் கொஞ்சம் தூரமாய் நின்று தொழுவதற்கு தயாராகினார்கள். மேலும் சில காக்காமார்களும் தாய்மார்களும் நதியை கடந்து தொழுகைக்காக பிற விடுதிகளில் இருந்து தொழுவதற்காக இந்த இடத்திற்கு வருவதை காணக்கூடியதாய் இருந்தது. இகாமத் சொல்லி தொழுகையை ஆரம்பித்த போது அங்கு சுமார் 300 பேருக்கு மேல் நின்றார்கள். நானும் மரத்தின் மேல் இருந்தவாறே தொழுதேன்.

தொழுகையின் பின் ஒவ்வொரு கூடாரத்திலும் ஒவ்வொரு விளக்குகள் எரிந்தன, ஒரு சில கூடாரத்தில் ரேடியோ போடப்பட்டிருந்தது. அது ஓரளவு சத்தமாக போடப்பட்டிருந்தது. குருவிகள், காக்கைகள், கிளிகள் என எல்லோரும் அந்த இடத்திலே சத்தமிட்டவாறு அவர்களது காலைப் பொழுதை ஆரம்பித்தன. இரண்டு மூன்று அப்பாமார்கள் வீரமா துவக்குகளை எடுத்தவாறு காடுகளை நோக்கி நகர்ந்தார்கள். நமது வாப்பாமார்கள் வீர விளையாட்டுக்களை ஆரம்பித்தார்கள். ஒரு இடத்திலே கம்பு அடிப்பது எப்படி என்று சில இளைஞர்களுக்கு ஒருவர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். நீருக்குள் நீச்சல் பயிற்சி, படுத்திருந்தவாறு இரு கைகளுக்கு மேலால் ஒரு சிறுவனை படுக்க வைத்து படுத்தபடி கைகளால் அந்த சிறுவனை வீச அந்தபக்கம் படுத்தபடியே ஒருவர் அந்த சிறுவனை பிடிப்பார். இது போல புத்தலத்துகே உரிய விளையாட்டுக்கள் அங்கு அடுத்த தலைமுறையினருக்கு சொல்லிகொடுப்பட்டதை கண்டேன். தாய்மார்கள் அவர்களுக்குரிய கூடாரத்தில் இருந்தபடியே சமையலை ஆரம்பித்தார்கள். அந்த குடும்பத்தில் இருக்கும் இளம் பெண்கள் குளிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி விரைந்ததையும் கண்டேன்.

அப்படியே சென்றது காலை பொழுது. காலை பசி வயிற்ரை கிழித்தது, எல்லோரும் கிழங்கும் சம்பளுமாய் சாப்பிட்டார்கள். அங்கே ஒரு வயது போன அப்பா ஒரு தட்டில் கொஞ்சம் கிழங்கையும், சம்பலையும் வைத்து அந்த தட்டை நான் இருக்கும் மரத்தின் கீழ் கொண்டு வந்து வைத்துச் சென்றார். (ஜின் அப்பா என நினைத்து அதனை நன்றாக சாப்பிட்டேன்)
ஆண்களுக்கென ஒதுக்கிய இடத்தில் ஆண்கள் எல்லோரும் ஒன்றாக ஆற்றில் இறங்கி ஆண்கள் அவர்களுக்குரிய வீரமான விளையாட்டுகளில் தன்னை முழுமையாக ஈடுபடித்தினார்கள். எல்லோருக்கும் சமனான சந்தர்ப்பம், போட்டியில் விதிகளை மீறினால் தண்டனை, மற்றும் சிறுவர்களுக்கான சந்தர்ப்பம், வெற்றி கேடையங்கள் என பல விடயங்கள் நடைப்பெற்றது. ஆண்கள் குளிக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் பெண்களின் சத்தம் மட்டும் கேட்கும் படி பெண்களுக்கான இடம் பெரிய மர கொப்புகளால் மறைக்கப்பட்டிருந்தது. அங்கு ஆண்கள் போலவே பெண்களும் அவர்களுக்குரிய விளையாட்டையும், குடும்ப கதைகளையும், புதிர் கேள்வி பதில் மற்றும் விடுகதைகள், நீருக்குள் துரத்தி பிடித்தல் போன்ற விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது தாய்மார்கள் ஆற்றை விட்டு வெளியே பகல் வேலை உணவு தயாரிக்க சென்றார்கள்.

சற்று நேரம் கழித்து லுகார் தொழுகைக்கான பாங்கு அதே (ஜின்) அப்பா அவர்களால் சத்தமாக கூறப்பட்டது. எல்லோரும் அந்த பாங்கின் பின் சுபஹு தொழுகை போலவே ஒன்றாக நிற்று தொழுதனர். அப்படியே அடங்கியது மதியம். மயான அமைதி, உச்சி வெயில்! கருவாடு வாசம் மூக்கை பதம் பார்த்தது. எல்லோரும் சாப்பாட்டை சாப்பிடும் போது என்னை பார்த்து அந்த (ஜின்) அப்பா சிரித்தார், நானும் சிரித்தேன். உடனே அவர் பகல் சாப்பாட்டை காலை உணவு போலவே வைத்து சென்றார். எல்லோரும் அமைதியாக காற்றின் ஓசையோடு தூங்கிய போது எனக்கும் தூக்கம் போனது.

அசர் தொழுகைக்கான அதானும் தொழுகையும் முடிந்தது! லுஹருக்கு முன் எடுக்கப்பட்ட பயிற்சிக்கான சோதனை நேரம் இது. இரண்டு பிரிவுகளாக வந்திருக்கும் புத்தள மக்கள் பொதுவான ஒரு களத்தில் சந்திக்க போகிறார்கள் என்ற ஒரு அறிவித்தல் விடப்படுகிறது. நான் அமர்ந்திருக்கும் மரம் உள்ள பகுதி கடற்கரை மரைக்கார் விடுதி என்றும், அடுத்த விடுதி (அதாவது தொளுகைக்காக வந்த மக்கள் இருக்கும் விடுதி) அலி மரிக்கார் விடுதி என்றும் கூறுகிறார்கள். இரண்டு விடுதியில் இருந்தும் போட்டியாளர்கள் கோஷத்துடன் பொது இடம் சென்று நாகு போட்டிகள் நடைபெறும். மிகவும்உறுதியான வாப்பாமார்கள் தான் அங்கு நடுவர்கள். அவர்களின் தீர்ப்புக்கு பதில் கிடையாது. நானும் மரம் விட்டு மரம் தாவி சென்று அதை பார்த்தேன். அங்கு பெண்கள் ஒரு குழுவாக நின்று ஆண்களின் வீரங்களை பார்ப்பார்கள். தனது வீட்டுக்கு எந்த வீரன் மருமகனாக வர வேண்டும் என்பதையும் சில தாய்மார்கள் முணுமுணுத்த வண்ணம் பேசியதை காணக்கிடைத்தது.

போட்டிகள் முடிந்தன அப்படியே எல்லோரும் இரண்டு விடுதிகளில் இருக்கும் குடும்பகளுக்கு விருந்தாளிகளாக செல்கிறார்கள். போட்டிகளில் பங்குபற்றியோர் கூட தனது சொந்த கார கொட்டிட்கு செல்கிறார்கள். அங்கு ஒரு அழகான திருமண பேச்சுவார்த்தையை காணக் கிடைத்தது. ஒரு வீட்டில் அழகான பெண் ஒருத்தி திருமணம் ஆகின்ற வயதில் இருக்கிறாள், அவளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள். இந்த சமயம் போட்டிகளை முடித்துவிட்டு வீரர்கள் தனது சொந்த காரர்களை பார்ப்பதற்கு அந்த கொட்டுகளுக்கு செல்லும் போது அங்குள்ள உம்மா வருபவர்களுக்கு விஷேட தேநீர் என்று கூறிய வண்ணம் ஒரு தேநீர் கொடுக்கிறார்கள். அந்த தேநீரை முழுமையாக குடித்தால் அங்குள்ள பெண்ணை நீங்கள் மணப்பதற்கு தயார் இல்லை என்றும். அந்த தேநீரை அரைவாசி குடித்துவிட்டு மீதியை கொடுத்தால் சம்மதம் என்றும் அர்த்தம். அதற்கான பதிலாக உங்களை அந்த வீட்டாருக்கு பிடித்திருந்தால் மீதி தேநீரை உங்கள் மீது அந்த வீட்டில் இருக்கும் ஆண் ஒருவர் ஊற்றுவர். அப்போது வீடுகளுக்குள் இருந்து பெண்கள் சிரிப்பார்கள். அப்போது அந்த ஆண் என்னை மருமகனாக ஏற்றுக்கொள்ள எல்லோரும் சம்மதிக்கிறார்கள் என்று அறிந்த வண்ணம் சந்தோசமாக நண்பர்களோடு நதியில் பாய்வார் இவர். இப்படி ஒரு திருமண பேச்சுவார்த்தை நமது புத்தள மக்கள் கடைபிடித்திருக்கிறார்கள் என்பதை அன்று நான் அந்த மரத்தில் இருந்து பார்த்தேன்.

மீண்டும் சூரியன் மறைவதற்கு தயாராக இருப்பதால்; மீண்டும் எனக்கு உதவும் (ஜின்) அப்பா இருக்கும் விடுதிக்கு மரத்தை விட்டு மரம் தாவி சென்றேன். அந்த வழியே செல்லும் போது, எல்லோரும் விளையாடிய போது இடம் எந்த ஒரு அசுத்தமும் (குழப்பபும்) இல்லாமல் துப்பரவாக இயற்கையின் அழகோடு இருந்தது.

இரவு ஆகியும் எதோ ஒரு எதிர்பார்ப்போடு முழு மக்களும் காத்திருந்தார்கள். இரவு சாப்பாட்டுக்கான தயாருதல் எதுவுமே தென்படவில்லை. (ஜின்) அப்பாவுக்கும் முகம் முழுவதும் கவலை.
அந்த நேரம் காலையில் வேட்டைக்கு போன வயதான அப்பாமார்கள் தனது தொழில் மான்களோடு விடுதியை அடைந்தனர். கவலையோடு காந்திருந்த மக்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. அப்போதுதான் புரிந்தது அவர்களின் கத்திருப்புக்கான காரணம். “இரவு சாப்பாட்டிற்கான கரி மான்” என்ற கதை இரண்டு விடுதிகளுக்கும் பரவியது. வயதான உறுதியான அப்பாமார்கள் மான்களை உரித்து இரண்டு விடுதிகளுக்கும் சமனாக பிரித்தார்கள். எல்லா கொத்துகளுக்கும் ஒரு சட்டி கரி கொடுக்கப்பட்டது.
சாப்பாடு தயாரானது, நெருப்பு கூடாரம் அமைக்கப்பட்டது. இரவு முழுவதும் இஸ்லாமிய கீதமும் பழைய பாடல்களும் மெதுவாக வாசிக்கப்பட்டன. குழந்தைகள் சிறுவர்கள் வயதானோர் அழகாக தூங்கினார்கள். 

நாளைய தினத்திற்கு அரிசி இல்லாத கொட்டுக்காரர்கள் நமது (ஜின்) அப்பாவிடம் வந்து புலம்ப அவர் மணலில் இருந்து கிலோ கணக்காக அரிசிகளை கொடுத்து “இதற்கான காசை இந்த கடையில் அடுத்த கிழமை நாம் புத்தளம் சென்றதும் கொடுத்துவிட வேண்டும்” என்று காதில் சொல்லி அனுப்பினார்.

இப்படி அழகான ஒரு ஆற்றுப்பயனத்தில் தொடர்ந்தும் இருக்க நினைத்த என்னை ஒரு சிறிய குரங்கு குட்டி அருகில் இருக்கும் மர கிளைக்கு பாய்ந்து என்னை பயமுறுத்தியதால் மீண்டும் நதிக்குள் விழுந்தேன். விழுந்த என்னை ஆறு கைகள் அழகான தூக்கி வெளியிலே தள்ளி விட்டது, அந்த கைகளில் ஒரு அமைதியான அன்பையும் மென்மையான தன்மையையும் உணர முடிந்தது.

(ஜின்) அப்பாவுக்கு எதையும் சொல்லாமல் வந்துவிட்டேனே என்ற கவலையோடு கரையை நோக்கி நீச்சல் அடித்தேன், அப்போது கரையில் அந்த (ஜின்) அப்பா எனக்கு கையை தந்து தூக்கிவிட்டார். அப்போது அவர் என்னிடம் கூறினார்.

“புத்தள ஆற்றிற்கு ஒரு அழகான வரலாறு இருக்கிறது, அந்த வரலாற்றில் இஸ்லாமிய சூழல் நிறைந்திருந்தது. ஆனால் இன்று அவை ஆற்றிலே மூழ்கடிக்கப்பட்டு பெண்கள் பிற ஆண்களுக்கு தனது உடலை காட்சிப்படுத்தவும், அவற்றை அவர்களது கணவன்மார்கள் அனுமாதிப்பதும் என்று தொடர்கிறது.. அதனால் தான் உன்னை நான் ஒரு நாள் பழைய நினைவுகளோடு நிறுத்திவைத்தேன், இதனை எல்லோருக்கும் சொல்லி நமது ஆற்றுப் பயணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து. அஸ்ஸலாமு அழைக்கும். கேள்விகள் இருந்தால் கொண்டு வா பதில் தர நான் தயாராக இருக்கிறேன்”

நன்றி

- கத்தாரில் இருந்து வலக்கரம்

Post a Comment

0 Comments