Subscribe Us

header ads

ஆணையை மீறிவிட்டார் நவநீதம்பிள்ளை : ஜெனிவாவில் அரசாங்கம் போர்க்கொடி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணiயாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அவரின் ஆணையை மீறி செயற்பட்டுள்ளார். நவநீதம் பிள்ளை முன்வைத்துள்ள பரிந்துரைகள் ஒரு தலைப்பட்சமானவையாகவும் அரசியல் நோக்கம் கொண்டதாகவும் ஆக்கிரமிக்கும் வகையிலும் அமைந்துள்ளன என்று ஜெனிவாவுக்கான இலங்கை தூதுக்குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
 
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது. இலங்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவை அலுவலகத்துடன் இணைந்து செயற்பட தயாராகவே உள்ளது. பேரவையில் உள்ள சிலர் இலங்கை குறித்த நவநீதம் பிள்ளையின் அறிக்கையை வரவேற்றமை கவலையளிக்கும் விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
நல்லிணக்க செயற்பாட்டில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது இலங்கையின் சாதகமான முறையிலேயே ஆராய்ந்து வருகின்றது. எவ்வாறெனினும் தொழில்நுட்ப உதவியானது குறிப்பிட்ட நாட்டின் ஆலோசனையுடனேயே பெறப்படவேண்டும். இந்தப் பேரவையில் இலங்கை மீது தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வருந்தத்தக்க வகையில் உள்ளது என்றும் பீரிஸ் கூறியுள்ளார்.
 
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரின் உயர்மட்ட கலந்துரையாடல்களின் மூன்றாவது நாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அங்கு தொடர்ந்து கூறியதாவது,
 
இலங்கை மீதான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை ஐ.நா.வின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் கூட வரவேற்று உரையாற்றி இருப்பதானது உண்மையில் வருந்தத்தக்கதே. 
குறிப்பாக, ஐ.நா.வின் திட்டமிட்ட வரம்பை மீறி செயல்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளவை உள்ளிட்ட கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளவை உள்ளிட்ட கேள்விக்குட்படுத்க்கூடிய, ஆதாரமற்ற சாதனங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதை கருத்திற்கொண்டு அதனை வரவேற்றிருப்பது எமக்கு வேதனை அளிக்கின்றது.
 
உயர்ஸ்தானிகரும், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் காரியராலயமும் வெளிப்படைத்தனடமையுடனும், இலக்குத் திறனுடனும் செயற்படுவதுடன், ஐ.நா.வினால் வழங்கப்படும் ஆணையின் பிரகாரம் வழிப்படுத்தப்பட வேண்டுமென்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது..
 
எனவே, இலங்கை அரசாங்கம் 22/1ஆம் இலக்க பேரவைத் தீர்மானத்தையும் முற்றுமுழுதான குற்றம் குறைகளைக் கொண்டுள்ள உயர்ஸ்தானிகரின் அறிக்கையும் நிராகரிப்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது.
 
இலக்குவைத்து செயற்படல் கவலையளிக்கிறது
 
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் காரியாலயமானது, அதன் ஒட்டுமொத்த செயற்பாடுகளிலான சுயாதீனத்தை படிப்படியாக அழிவடைய செய்வதற்கு வழிவகுத்து வருகின்றமை குறித்து நாம் தொடர்ந்தும் கவலைப்பட்டே வருகின்றோம். உதாரணமாக, உலகின் ஏனைய பாகங்களில் காணப்பட்டுவரும் நிலவரங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் குறித்த அதி அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் பொருட்படுத்தப்படாமல் இருக்கும் அதேவேளையில், குறித்த சில நாடுகளை இலக்கு வைத்தே செயற்பட்டுவரும் பேரவையில் உரிய விகிதத்தில் அமையாதவாறு, குறிப்பிட்ட நாடு மீதான நடவடிக்கையில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை பாரதூரமான கவலையளிக்கும் விடயமொன்றாகும்.
 
இலங்கைக்கு எதிரான நடவடிக்கை
 
பேரவையில் குறிப்பிட்ட நாடுகள் மீதான பல்கிப் பெருகிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்ச்சியான அரசியல் நோக்கங்களுக்கான மனித உரிமைகளைச் சுரண்டும் கருவியொன்றாக விளங்குகின்றதென்பதே கலப்பற்ற யதார்த்தமாகும். இந்தப் பேரவையில் இலங்கை மீது தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வருந்தத்தக்க வகையில் இதனையொத்த கோலம் ஒன்றாகவே உள்ளது.
 
இத்தகைய அரசியல் மயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது, பேரவையின் உயரிய நோக்கங்களுக்கும் அடிப்படைக் கொள்கைகளுக்கும் மாறானதாக இருப்பதுடன், அது நிறுத்தப்பட வேண்டுமெனவும் நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
 
20 மணித்தியாலங்களுக்கு குறைவான நேரம்
 
ஆவணங்களைத் தயாரித்து உரியகால அவகாசமொன்றில் அவற்றை பேரவையின் பரிசீலனைக்கென சுற்றி அனுப்புவதற்கு பேரவையின் செயலகமாக இயங்கிவரும் மனித உரிமைகளுக்கான உயிர்ஸ்தாணிகர் காரியாலயம் மீது கடமையொன்றைச் சுமத்தும் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 5/1 ஐ, குறிப்பாக, அனுஷ்டான விதி 14 (47) மற்றும் பந்தி 117ஐ, மீறிடும் வகையில், உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கையின் மூலப்பகுதியானது, சம்பந்தப்பட்ட நாடென்ற வகையில் இலங்கைக்கு, பேரவையில் அதன் பரீசீலனைக்கென இருபது மணித்தியாலங்களுக்கு குறைவான நேரமே எஞ்சியிருந்த நிலையில், பதிலளிப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
 
செவிசாய்க்கவில்லை
 
இது சம்பந்தமாக முன்னரே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் குறித்த தெளிவான நிலை இருந்தபோதிலும், உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான அரசின் கருத்துக்களை பிற்சேர்க்கை ஒன்றாக வெளியிடுமாறு இலங்கை அரசினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் காரியாலயம் பெப்ரவரி 2014 இல் செவிசாய்க்கவேயில்லை.
 
இலங்கை சம்பந்தமான விவகாரங்களை கையாள்வதில் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் காரியாலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான காரணமற்ற விரோத நோக்குக்கு (போக்குக்கு) அவையே எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றதை வருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.
 
நிராகரிக்கின்றோம்
 
முன்னைய 22/1ஆம் தீர்மானத்தினின்றும் வெளிப்படும் உயர்ஸ்தானிகரின் மேற்படி அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்று முழுதாகவே நிராகரிக்கின்றது. தவறான விபரங்களையும், தப்பான எண்ணப்பாடுகளையும் உள்ளடக்கும் குறித்த அறிக்கையின் கணிசமான பொருளடக்கம் குறித்த தனது அபிப்பிராயங்களை இலங்கை எதிர்வரும் 26ஆம் திகதியன்று, அதன் ஆராய்தல் நேரத்தின்போது இலங்கை பகிர்ந்துகொள்ளவுள்ளது.
 
உயர்ஸ்தானிகரின் அறிக்கையானது, தீர்மானத்துடன் தொடர்பேயில்லாத ஏராளமான குறிப்புக்களையும் பரிந்துரைகளையும் வழங்கியுள்ளதன் மூலம் தனக்கான ஆணையைக் கடந்த நிலையிலேயே உள்ளது. மேலும், அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தன்னிச்சையான முறையிலும், ஆக்கிரமிக்கும் வகையிலும் அரசியல் உள்நோக்கமொன்றைக் கொண்டதாகவும் உள்ளன.
 
285 இல் 144 பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை
 
கடந்த 12 மாதங்களில் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் தேசிய செயற்றிட்டம் உள்நாட்டில் செயற்பட ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தேசிய செயற்றிட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு அரசாங்கம் 91 பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு மேலும் 53 பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
285 பரிந்துரைகளில் 144 பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினால் பல்வேறு அமைச்சிக்களின் ஊடாக அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
காணாமல்போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழு
 
காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு 2103 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. விசாரணைகளை நடத்தி ஆறுமாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டுமென கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஆறுமாதங்களுக்கு ஆணைக்குழுவிற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
 
ஆணைக்குழுவின் விசாரணைகள் அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆணைக்குழுவிற்கு இதுவரை 16 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வடக்கிலும், கிழக்கிலும், காணாமல்போனோர் தொடர்பான இந்த ஆணைக்குழு நேரடி விசாரணை அமர்வுகளை நடத்தி வருகின்றது.
 
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
 
1990 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் இயங்கி வருகின்றது. காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகள், பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரம், தடுத்து வைத்தல் போன்ற விடயங்களில் செஞ்சிலுவைச் சங்கம் செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்தத் துறைகளில் இலங்கையானது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்று வருகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை இரண்டு தடவைகள் சந்தித்துள்ளது.
 
யுத்த இழப்பு குறித்த கணக்கெடுப்பு
 
யுத்தகாலத்தில் இடம் பெற்ற இறப்புக்கள், காயங்கள், காணாமல்போதல்கள், மற்றும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அரசாங்கம் விசேட கணக்கெடுப்பு ஒன்றை நாடுமுழுவதும் நடத்தி வருகின்றது. 1982 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் இடம்பெற்ற உள்ளக மோதல்கள் தொடர்பாகவே இந்த கணக்கெடுப்பு இடம் பெற்று வருகின்றது. சில வாரங்களில் இந்த கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கை வெளியிடப்படும். இதற்காக புள்ளிவிபரவியல் திணைக்களத்திற்கு அரசாங்கம் 150 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்கியது.
 
ஐந்து மாணவர் படுகொலை விசாரணைகள்
 
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 16 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
 
இராணுவ நீதிமன்ற விசாரணை
 
யுத்தகாலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவுபெற்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இராணுவ நீதிமன்றமானது தற்போது இரண்டாம் கட்ட விசாரணைகளின் கீழ் சனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சனல் 4 தொடர்பாக கூறியுள்ளதன் படி குறித்த ஒளிபரப்பாளர் ஆணைக்குழுவிற்கு விரிவான தகவல்களை வழங்குவதில் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் தயாராகின்றது
 
இலங்கை சாட்சிகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவை உபகுழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. தற்போது சட்டமூலத்தை வரைவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
கண்ணிவெடி அகற்றல்
 
2013 டிசம்பர் மாத இறுதியில் இலங்கை இராணுவத்தினால் 1980 சதுரக்கிலோமீற்றர் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இந்த நடவடிக்கையானது துரித மீள்குடியேற்றத்திற்கு பேருதவியாக அமைந்தது. 297000 பேர் தற்போது முழுமையாக மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மெனிக்பாம் நலன்புரிமுாகம்கள் 2012 செப்டெம்பர் மாதம் மூடப்பட்டன. மீதமாக உள்ள 7094 குடும்பங்களே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 75 ஆயிரம் முஸ்லிம் மக்களையும், மீள்குடியேற்றுவதில் நிரந்தரமான தீர்வொன்றைத் தேடுவதில் அரசாங்கம் முணைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
 
நட்டஈடு வழங்கப்படுகின்றது
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி மோதல் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடுவழங்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றன. 2010, 2012 காலப்பகுதியில் 392 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. 2013 ஆம்ஆண்டு 204 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் படி 475 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
காணி விவகாரம்
 
காணி என்பது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் குழப்பத்திற்குரிய விவகாரமாக தொடர்ந்தும் காணப்பட்டு வருகின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி அரசாங்கம் காணி ஆணையாளர் நாயகத்தின் விசேட சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மீள்குடியேற்ற பகுதியில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் 2014 ஜனவரி மாதம் மட்டும் 3623 காணிக்கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 2321 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு விட்டன.
 
அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைப்பு
 
அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பலாலியில் மட்டுமே தற்போது பாதுகாப்பு கட்டுப்பாடுக்கள் நீடிக்கின்றன. எனினும் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு செல்வதற்கு மக்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. சாம்பூர் பகுதியில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயம் 65 வீததத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வடக்கில் 19322 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட2518 ஏக்கர் அரச காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. நான்காவது காணி ஆணைக்குழுவை நியமிக்கும் சட்டமூலமும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் மாதம் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
 
மும்மொழி வேலைத்திட்டம்
 
2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டின் மும்மொழி 10 வருட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு இரண்டு மொழிகளை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தமிழ் பேசும் இயலுமை குறித்து அதிகம் சிந்திக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்க 900 தமிழ் பொலிஸார் மற்றும் 1500 சிங்கள பொலிஸார் (தமிழ்பேக்கூடிய) இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் 150 தமிழ் பேசும் பெண் பொலிஸார் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணனி மயப்படுத்தப்பட்ட இருமொழி தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேசிய ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
75 ஆயிரம் முஸ்லிம்கள், 35 ஆயிரம் சிங்களவர்கள்
 
தமிழ் மக்களைத் தவிர்த்து வடக்கில் மீள்குடியேற்றங்களை செய்வதன் ஊடாக குடியியல் பரம்பலை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் 75 ஆயிரம் முஸ்லிம் மக்களும் 35 ஆயிரம் சிங்கள மக்களும் சகவாழ்வுடன் வாழ்ந்து வந்தனர். யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்த மக்கள் புலிகளினால் .வெளியேற்றப்பட்டனர்.
 
கொழும்பில் சிங்கள மக்கள் குறைவு
 
இன்று கொழும்பு நகரில் 51 வீதமான மக்கள் சிங்களவர்கள் அல்ல. இது நாட்டில் எந்தவொரு மக்களும் அவர்கள் விரும்பும் இடத்தில் வாழலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாகும். வடக்கின் 32 வீதமான தமிழ் மக்களே வாழ்கின்றனர். மீதமான அனைத்து மக்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்கின்றனர்.
 
முன்னாள் போராளிகள்
 
12 ஆயிரத்து 288 முன்னாள் போராளிகளில் 96.9 வீதமானவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். 157 பேர் தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். 85 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
 
வடக்கில் இராணுவம் குறைப்பு
 
2009 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கைள் நிறுத்தப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து இராணுவத்தை அரசாங்கம் படிப்படியாக குறைத்து வருகின்றது. 2013 ஆம் ஆண்டு வடக்கில் 30 வீதத்தினால் இராணுவம் குறைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்திலும், 26வீதமான இராணுவம் குறைக்கப்பட்டுள்ளது.
 
விசாரணைகள் இடம்பெறுகின்றன
 
வடக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் நடவடிக்கைகளுக்கும் இராணுவத்தினரின் பிரசன்னத்தையும் தொடர்புபடுத்தி இடையில் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இது புள்ளிவிபரத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இலங்கையானது பாலியல் வல்லுறவு, மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விடயத்தில் பூச்சிய பொறுமையுடைய நாடு என்பதை வலியுறுத்துகின்றோம். இலங்கைப் பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
 
வட மாகாண சபை
 
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தில் எவ்விதமான தலையீடுகளும் இல்லை. வடக்கிலும் கிழக்கிலும், சிவில் நிர்வாகக் கட்டமைப்பு சிறப்பாக இயங்குகின்றது. வடக்கில் 2013 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்தல் நடத்தப்பட்டு மாகாணசபை உருவாக்கப்பட்டது. எனினும் மாகாணசபையின் உத்தியோகத்தர் நியமனம் மற்றும் ஆளுநர் நியமனத்தில் அழுத்தங்களை பிரயோகிக்கலாம் என சில வெளிசக்திகள் கருத்துகின்றன. இவ்வாறான அழுத்தங்கள் ஏற்றுக்கொள்ளகூடியவை அல்ல. அது சர்வதேச உறவுகளுடன் சம்பந்தப்பட்டவையும் அல்ல.
 
பாராளுமன்றத் தெரிவுக்குழு
 
இறுதி அரசியல் தீர்வைக் காண்பதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 21 அரசியல்கட்சிகளும் பங்குபற்றும்வகையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டது. எனினும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்க தமிழ்தேசியக்கூட்டமைப்பு மறுத்து வருகின்றமை கவலைக்குரியவிடயமாகும். கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை இணக்கப்பாட்டிற்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. கூட்டமைப்பின் பங்கெடுப்பு இல்லாத நிலையிலும், பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
 
மத சுதந்திரம் உள்ளது
 
இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் அரசியல் அமைப்பு ரீதியாக மத சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த உரிமை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. நூற்றாண்டு காலமாக இலங்கையில் நான்கு பிரதான மதங்களும் சகவாழ்வுடன் செயற்பட்டு வந்துள்ளன. எனினும் துரதிருஷ்டவசமாக மத அமைதியின்மையை தோற்றுவிக்கும் முகமாக தாக்குதல் நடவடிக்கைகள் மதஸ்தலங்களைநோக்கி இடம் பெற்றுள்ளன. இது அனைத்து நான்கு மதஸ்தலங்களிலும் இடம் பெற்ற விவகாரமாகும். அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் அனுமதிக்கவில்லை. தாக்குதல்கள் சம்பவங்களில் 62 வீதமானவை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
மனித உரிமை காப்பாளர்களை பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு
 
மனித உரிமை காப்பாளர்களை பாதுகாப்பதற்கு இலங்கை முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வருகைதந்தபோது சிவில் சமூக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். வெ ளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு, கலந்துரையாடல் போன்வற்றின் ஊடாக மனிதஉரிமை பேரவையுடன் சர்வதேச சமூகத்துடனும் இலங்கையானது தொடர்ந்தும் ஈடுபாடுடன் செயற்பட்டு வந்துள்ளது.
 
கடந்தவருடம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்றமை மற்றும் இடம் பெயர்ந்த மக்களுக்கான விடேச அறிக்கையாளர் டாக்டர் சலோக்கா பிராயணியின் இலங்கை விஜயம் என்பவை இவற்றுக்கு சிறந்த உதாரணங்களாகும்.
 
பொதுநலவாய மாநாடு
 
அத்துடன் இலங்கையானது இந்த பேரவையில் உள்ள 54 நாடுகளின் பங்களிப்புடன் பொதுநலவாய மாநாட்டையும் நடத்தியுள்ளது. இவற்றின் ஊடாக இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை வெளிக்காட்ட எம்மால் முடிந்தது.
 
பேரவையுடன் செயற்பட தயார்
 
இலங்கையானது நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக ஐ.நா. கட்டமைப்பு சர்வதேச சமூகத்துடன் ஈடுபாடுடன் செயற்பட்டு வந்துள்ளது. இலங்யைானது மனித உரிமை பேரவை இயந்திரத்துடன் தொடர்ந்தும் ஆரோக்கியமான ஈடுபாட்டுடன் செயற்பட தயாராக உள்ளது.
 
நல்லிணக்க செயற்பாட்டில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது இலங்கையின் சாதகமான முறையிலேயே ஆராய்ந்து வருகின்றது. எவ்வாறெனினும் தொழில்நுட்ப உதவியானது குறிப்பிட்ட நாட்டின் ஆலோசனையுடனேயே பெறப்படவேண்டும்.
 
நியாயமற்ற நடவடிக்கை
 
இலங்கையின் உள்ளக செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருவதன் ஊடாக அடையப்பெற்றுள்ள உணரக்கூடிய முன்னேற்றங்களை ஏற்றுக்கொள்ளாத தன்மை தெளிவடைகின்றது. இலங்கையானது ஐ.நா. மனித உரிமை பேரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட முயற்சித்த போதிலும், இலங்கை மீது பேரவையானது முன்னெடுக்கும் சில நடவடிக்கைகள் நியாயமற்ற மற்றும் பக்கச்சார்பான செயற்பாட்டை வெ ளிக்காட்டுகின்றது.

Post a Comment

0 Comments