
இம்மாதம் 28ஆம் திகதி வரை தொடரவுள்ள இக்கூட்டத்தொடரில் அமெரிக்கா சில மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கெதிராக பிரேரணையை முன்வைக்கவிருப்பதாக அந்நாட்டின் அரசாங்கம் ஏற்கனவே அறிவிப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் எத்தகைய பிரேரணையையும் எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் இலங்கை அரசாங்கம் முழுமையாக தயார் நிலையிலிருப்பதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
கூட்டத் தொடரின் ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆகியோர் ஆரம்ப உரையினை நிகழ்த்துவர். அதையடுத்து கனடா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தமது உரையினை முன்வைப்பர்.
மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை அரசாங்கம் சார்பில் நாளை மறுதினம் புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உரையாற்றுவார். இவரது உரைக்கென 20 நிமிடங்களை ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழு ஒதுக்கியுள்ளது.
அமைச்சர் பீரிஸ், தனக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டுக்களை பொய்யென நிரூபித்து அவற்றுக்கான ஆதாரங்களை அதன் உறுப்புரிமை நாடுகளுக்கு உறுதிபட எடுத்தியம்பவுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து குறுகிய காலப் பகுதிக்குள் அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு வசதிகள், நல்லிணக்கச் செயற்பாடுகள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்ட விதம் என்பனவற்றை அமைச்சர் பீரிஸ், மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கு முன்வைக்க இருப்பதாகவும் ஜனாதிபதிப் பேச்சாளர் மொஹான் தெரிவித்தார்.
ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வரவுள்ள போதிலும் அவர்களால் முன்வைக்கப்படவுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதனை நிரூபிக்க அரசாங்கம் சகல வழிகளிலும் ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மியன்மார் சென்றுள்ள வெளி விவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நாளை (04) மாலை மியன்மாரிலிருந்து நேரடியாக ஜெனீவா செல்லவுள்ளார்.
05 ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கம் சார்பில் விசேட உரை ஆற்றும் அமைச்சர் பீரிஸ், எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் ஜெனீவாவில் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து லண்டன் செல்லவுள்ளார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸ் மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதியன்றே நாடு திரும்புவாரெனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் பீரிஸ¤டன், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ்குணவர்தன, ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜெனீவா ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்ஹ ஆகியோரும் இக்கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்துகொள்வர் .
0 Comments