போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம்
போர்த்துக்கேய ஆக்கிரமிப்புக்கு எதிராக அராபிய வணிகர்கள் போரிடவும் செய்தார்கள். எனினும் 1544 ம் ஆண்டளவில் போர்த்துக்கேய மன்னனின் பெயரால் ”ஜேசுவிட் பாதிரிமாருக்கு” இப்பகுதி நன்கொடையாக அளிக்கப்பட்டது என்பது ”கேர்னல் சேர் பவுசர்” எனும் பிரிட்டிஷ் தளபதியின் அபிப்பிராயமாகும்.
போர்த்துக்கேயர் கற்பிட்டியை கைப்பற்றிய பின்னரே அதன் வனப்பையும் வளங்களையும் நிலையச்சிறப்பையும் அறிந்தனர். இங்கு இயற்கையாக விளைந்த உப்பு, சுண்ணக்கல், சிப்பி, சுறாமீன் சிறகு, தேன் மெழுகு, மீன், கடற்பாசி, சாயவேர் ,பனைமரப் பொருட்கள், தேங்காய் முதலிய திரவியங்களை கண்டு களிப்பெய்தினர். மேலும் கற்பிட்டியை தமக்கு பாதுகாப்பான ஓரிடமாகவும் கருதினர். இவர்கள் கடல் வழியாகவே கற்பிட்டியிலிருந்து நாட்டின் ஏனைய பாகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
இங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுவதிலேயே கவனம் செலுத்திய போர்த்துக்கேயர் கற்பிட்டியை முன்னேற்றுவதற்கோ இங்கு வாழ்ந்த மக்களின் நலனைப் பேணுவதற்கோ எவ்வித முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக கற்பிட்டி மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டு மிகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். போர்த்த்துக்கேயரின் கொடுமை தாங்க முடியாமல் சுதேச மக்கள் கற்பிட்டியை விட்டுச் சென்று விட்டதாக தெரிகிறது. போர்த்துக்கேயர் இங்கு நிலையான கட்டடங்களிலிருந்து கற்பிட்டியை அவர்கள் நிலையான ஓரிடமாக கொள்ளவில்லை என்பது புலனாகின்றது. 1544 ம் ஆண்டு முதல் 1646 ம் ஆண்டு வரை இவர்கள் வெறும் ஆட்சியை செலுத்தியுள்ளனர் எனலாம். ஆயினும் கற்பிட்டியின் முக்கியத்துவத்தை வெளியுலகுக்கு உணர்த்தியவர்கள் போர்த்துக்கேயரே.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலம்
கற்பிட்டியின் இயற்கையமைப்பையும் வளங்களையும் அறிந்த ஒல்லாந்தர் போர்த்துக்கேயருடன் போர்புரிந்து 1640 ம் ஆண்டு கற்பிட்டியை கைப்பற்றினர்.
”ஒல்லாந்தரின் ஆட்சியின் பின்னரே கல்பென்டைன் (கற்பிட்டி) மறுமலர்ச்சியடைந்தது. அவர்கள் கல்பென்டைனுக்கு அதிக மதிப்புகொடுத்தனர். அதன் செழிப்புத் தன்மையை நன்கு பயன்படுத்தினர். ஏனைய இடங்களைப் பாதுகாக்கும் ஓர் அரணாகவும் கணித்தனர். இதனால் இங்கு ஒரு கோட்டையையும் கட்டினர்.” என்று ஆங்கிலேய சரித்திர ஆசிரியர் கூறுகிறார்.
இக்கோட்டை 1667ம் ஆண்டு கட்டப்பட்டது. துருப்புக்களின் இருப்பிடமாக கட்டப்பட்டது. பாலாவியிலிருந்து கற்பிட்டிக்குச் செல்லும் பாதை ஒல்லாந்தரினாலேயே அமைக்கப்பட்டது. இதனால் கற்பிட்டி மக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பு கொள்ளவும். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் அவர்களது உற்பத்தி பொருட்களை விற்கவும் வழி ஏற்பட்டது. நாட்டின் ஏனைய பகுதி மக்கள் இங்கு வந்து போக ஆரம்பித்தோடு இங்கு குடியேறவும் முற்பட்டனர்.
மேலும் ஒல்லாந்தர் இங்குள்ள மூலவளங்களான சிப்பி, சுண்ணக்கல், சுண்ணாம்பு உற்பத்தி, கொப்பறா பதப்படுத்தல் முதலான தொழில்களை கற்றுக்கொண்டனர். காலக்கெதியில் கற்பிட்டி முன்னேற்றமடைந்து சிறப்படைந்தது. தற்பொழுதும் இங்கு காணப்படும் கடற்கரைப் பாலமும் ஒல்லாந்தரினாலேயே நிறுவப்பட்டதாகும். கற்பிட்டியின் முன்னேற்றத்திற்கு இப்பாலம் பெரிதும் உதவியுள்ளது.
இப்பாலத்தின் உதவியுடன் சென்னை, கோறா, மொண்டல் தீவு, சிங்கப்புர், பினாங் முதலிய இடங்களுக்கும் கற்பிட்டிக்கும் இடையில் சிறு படகுச் சேவை மூலம் ஏற்றுமதி இறக்குமதிகள் நடைபெற்றுள்ளன. இதனால் கற்பிட்டி பிற நாடுகளுடனும் தொடர்புகொள்ளத் தொடங்கியது. வெளிநாடுகளிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட புடவை, நெல்,
அரிசி, நுல், மருந்துச்சரக்குகள்,
கறிச்சரக்குகள் முதலியவற்றை வாங்குவதற்காக மக்கள் கற்பிட்டியை நாடி வரத்
தலைப்பட்டனர்.
அழகிய காவற் கோட்டையின் சிறப்பு
ஒல்லாந்தர் கற்பிட்டியில்
பிரமாண்டமான உறுதியான ஒரு கற்கோட்டையைக் கட்டியுள்ளனர்
. அவற்றின்
மதிற் சுவர்கள் இன்றும் உறுதியான நிலையில் அசுரத்தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.
சதுர வடிவ இக்கோட்டையினுள் பல அழகிய கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.
கோட்டையின் புல் நிறைந்த மேற்பரப்பில் காவற் கோபுரங்கள் நாலாத் திசைகளிலும்
எழுந்து நிற்கின்றன. எதிரிகளின் நடமாட்டங்களை அவதானிப்பதற்காக
அக்கோபுரங்களில் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
கோட்டையின் கிழக்கிலிருந்து நோக்கும் போது இந்து சமுத்திரத்தின் குடாக் கடலினதும், புத்தள கடல்வாவியினதும் ,கண்கவர் காட்சிகளும் ,அக்கரையில் காணப்படும் புஞ்சோலைகளும், கடற்கரை வெண்மணற்பரப்பும் எம்மைக் கற்பனையில் ஆழ்த்திவிடுகின்றன. அன்று பல நாடுகளிலிருந்தும் வந்த புகைக்கும் கப்பல்கள், நங்கூரமிடப்பட்டிருந்த காட்சிகளும், பாய்க்கப்பல்களும், படகுகளும், தோணிகளும், வள்ளங்களும் ஆங்காங்கே நின்றும் நகர்ந்தும் உயிரூட்டிக்கொண்டிருந்த தோற்றங்களும் பல தரப்பட்ட மக்களின் சுறுசுறுப்புடன் கூடிய நடமாட்டங்களும், போக்குவரத்துக்களும், ஏற்றுமதிகளும் கற்பிட்டிக்கே பெருமை தேடித்தந்தவைகள். இவை கற்பிட்டியின் பண்டைய சிறப்பை நினைவுட்டுகின்றன.
கோட்டையின் கிழக்கே கடலை நோக்கி வளைமாட்டத்துடன் கூடிய கோட்டைச்சுவரின் உட்பக்க விளிம்பை ஒட்டி குழிவாக ஒரேயொரு கதவை அமைத்துள்ளனர். இவ்வாசலினுள் சென்றால் உள்ளே சதுரமான முற்றம் மத்தியில் அமைந்திருப்பதைக் காணலாம். இது வீரர்களின் அணிவகுப்புக்குரிய இடமாக இருக்கும். அதன் மூன்று புறங்களில் படை வீடுகள் அமைந்துள்ளன. சதுக்கத்தின் ஓரத்தில் நன்னீர் கிணறொன்றும் இருக்கிறது. படைத்தளபதியின் இருப்பிடமும், உப்பு ,குடிவகை, அரிசி, ஆகிய அத்தியவசிய பொருட்களை சேமித்து வைப்பதற்கான பண்டசாலை, ஆயுதசாலை,
மறியற்கூடம், பொக்கிஷப்பாதுகாப்பறை, என்பனவும் அங்கே அமைக்கப்பட்டிருந்தன. இக்கோட்டை தற்போது
கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளது. அவர்களது கோயில் அரச உடமையாகப்
பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
சமீப காலங்களுக்கு முன்னர்
கற்பிட்டி பட்டணத்தில் பிரதான பாதையின் இரு மருங்கிலும் நிழல் தரு பெரு மரங்களான நிழல்வாகை
,வேம்பு என்பன
செழிப்புடன் காணப்பட்டன. அவற்றுள் பல பாதை விஸ்தரிப்பு,
கட்டடங்கள் கட்டுதல், மின்சாரக் கம்பி,
தந்திக்கம்பி இணைத்தல், போன்ற இன்னோரன்ன தேவைகளுக்காக
அழிக்கப்பட்டு விட்டன. அவற்றும் மீதியானவை நுற்றாண்டு வயதுடன்
இன்றும் காணப்படுகின்றன.
அவை கற்பிட்டியை அழகு படுத்தி
நின்றதோடு உஷ்ணமே தெரியாத அளவு குளிர் நிழலைத் தந்து நின்றன. இம்மரங்கள்
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு நட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது ஒல்லாந்தரே கற்பிட்டியின் முன்னேற்றத்தில்
அதிக பங்கு கொண்டுள்ளனர் என்பது புலப்படுகின்றது.
Samsham Shaheek - Kalpitiya.
Samsham Shaheek - Kalpitiya.



0 Comments